வெள்ளி, 10 ஜூலை, 2015

மாதர் தம்மை இழிவு செய்யும்...

புள்ளிராஜா மேட்டர் நிறையப் பேருக்கு நிறைய சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது. சந்தேகமும், சந்தோஷமே. தீர்வு கிடைத்து விடும் இல்லையா? ஒருவரது பெயரை, ஒரு அமைப்பின் பெயரைச் சுருக்கிச் சொல்கிற போது (ஐக்கிய நாடுகள் சபை - ஐ.நா. சபை, எம்.ஜி.ஆர்) முற்றுப்புள்ளி அவசியம் என்று கடந்தவாரத் தொடரில் பார்த்தோம். எழுத்துக்கு நடுவில் வருவது எப்படி முற்றுப்புள்ளியாக (Full Stop) இருக்கமுடியும் என்று நண்பர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள். நிஜம்தான். கால்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, முற்றுப்புள்ளி என்கிற நான்கே விஷயங்களுடன் புள்ளி மேட்டர் முடிந்து விடவில்லை. இன்னும் ரெண்டு பாக்கி இருக்கிறது. புள்ளி (Point), முப்புள்ளி (Ellipsis).


புள்ளி, முற்றுப்புள்ளி - என்ன வித்தியாசம்? இருக்கிறது பிரதர்ஸ். ‘காலையில யோகா கிளாஸ் போயிட்டு வந்தேன்.’ என்று சொல்லி விட்டு, பேனாவால் கடைசியாக ஒரு குத்து வைக்கிறீர்கள் பாருங்கள்... அது முற்றுப்புள்ளி.
 ஐ.நா. எம்.ஜி.ஆர். என்று எழுத்துகளுக்கு நடுவில் வைக்கிறது புள்ளி. அதாவது வெறும் புள்ளி. இந்த புள்ளி எங்கெங்கு தேவைப்படுகிறது?

* சுருக்க குறியீடாக வார்த்தைகளை பயன்படுத்துகிற போது (ஐக்கிய நாடுகள் - ஐ.நா. தமிழ்நாடு - த.நா. கிறிஸ்து பிறப்பதற்கு முன் - கி.மு.)
*  பெயருக்கு முன்பாக எழுதுகிற முதலெழுத்துக்கு (Initial) முன்பாக (கே.பாலசந்தர், கே.எஸ்.ரவிக்குமார்)
* வரிசைக்கு பயன்படுத்துகிற எண் / எழுத்து வரிசைக்கு பின் (1. ரஜினி, 2. கமல், 3, விக்ரம். அ. ஒபாமா, ஆ. கலாம், இ. புடின்).
புள்ளி தேவைப்படாத இடமும் இருக்கிறது. ஒருவரது பெயருக்கு முன்னால் குறிப்பிடப்படுகிற அடைமொழிக்கு பிறகு புள்ளி வேண்டாம் (இசைஞானி இளையராஜா, நடிகர் திலகம் சிவாஜிகணேசன்).

ஊ...தா கலரு ரிப்பன்!

ரி. அதென்ன முப்புள்ளி? ஒரு வரி எழுதி விட்டு, பின்னால்... என்று மூன்று புள்ளிகள் வைக்கிறோம் இல்லையா? அது முப்புள்ளி (Ellipsis). பத்திரிகையில் எழுதுகிற நண்பர்கள் இதை லீடர் (Leader) என்றும் குறிப்பிடுவார்கள். முப்புள்ளி எனப்படுகிற டாட் டாட் டாட் எங்கு தேவைப்படுகிறது?
*  ஒரு வாக்கியத்தில் முற்றுப்பெறாமல் விடுபட்ட பகுதியை குறிப்பிட... (அந்த நிகழ்ச்சிக்கு நிறைய வி.ஐ.பி.க்கள் வந்திருந்தார்கள். கமல், ஏ.ஆர்.ரஹ்மான், அஜித்...)
*  ஒரு புத்தகத்தில் இருந்தோ, கவிதை, கட்டுரைத் தொகுப்பில் இருந்தோ ஒரு விஷயம் மேற்கோள் காட்டுகிறீர்கள். கவிதை அல்லது கட்டுரையை முழுமையாக சொல்லாமல்... லேசாக சாம்பிள் காட்டும் போது... (மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்... என்ற பாரதியார் பாடல் அற்புதமானது. ‘இந்தத் திட்டம் ஆபத்தானது. இயற்கை வளங்களை நாசம் செய்து விடும்... சுற்றுச்சூழல் காக்க இந்தத் திட்டத்தை தடுக்கவேண்டும்’ என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது)

*  சில நேரங்களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த... (அவள் கொடுத்த கடிதத்தை பிரித்தான்... படித்தான்... ‘அன்புள்ள அண்ணா...’ என்று ஆரம்பித்திருப்பதை பார்த்ததும், மயங்கினான்... மல்லாக்கச் சரிந்தான்...)
*   சொற்களின் மாத்திரை அளவை (மாத்திரை - ஒலிக்கிற கால அளவு, ரொம்ப முன்னாடி படிச்சிருக்கோம்) கூட்டி காண்பிக்கவும் ... இது வைக்கலாம். (ஊதா... ஊ...தா கலரு ரிப்பன். மாயி வந்திருக்கா...க)
புள்ளி சப்ஜெக்ட் நிஜமாகவே அவ்ளோதான் சார்.

டங்கா மாரி சூப்பரா?


‘கேள்வியின் நாயகனே... என் கேள்விக்கு பதில் ஏதய்யா...’ என்று ரொம்ப காலம் முன் பாடல் கேட்டிருப்பீர்கள். அடுத்து பார்க்கப் போகிறது கேள்விக்குறி (Question Mark). வினாக்குறி என்றும் இதை (?) அழைக்கலாம். தப்பில்லை. ஆங்கிலத்தை விட, தமிழில் வினாக்குறி அமைப்பது எளிது.
 எ, ஏ, யா, ஆ, ஓ ஆகியவை வினா எழுத்துக்கள். பார்த்தாள் என்ற சொல்லோடு ‘ஆ’ சேர்த்தால்... பார்த்தாளா. ‘ஓ’ சேர்த்தால்... பார்த்தாளோ. யோசிக்காமல் ஒரு வினாக்குறி போட்டு விடலாம். இன்னும் எங்கெங்கு ? இது தேவைப்படும்?
*  வினா வாக்கியத்தின் முடிவில் (தம்பி, பரிட்சைக்கு படிச்சிட்டியா?)
*  சந்தேகம், நம்பிக்கையின்மையை குறிக்கிற வாக்கியத்தின் முடிவில் (இந்தியாவுக்கு கோப்பை வெல்ல வாய்ப்பு? பருவமழை கைகொடுக்கும்? விமான விபத்து. 180 பேரின் கதி?)

*  ஒரு விஷயம் உறுதியாக தெரியாத போது ஒரு வினாக்குறி போட்டு வைத்தால், தப்பித்துக் கொள்ளலாம் (டங்கா மாரி... பாட்டு (அனேகன் படம்?) சூப்பரா இருக்கு).
எங்கு போடவேண்டும் என்று தெரிந்து கொள்வதை விட, எங்கு கூடாது என்று தெரிந்து கொள்வது முக்கியம். தமிழில் நிறையப்பேர் இங்குதான் சறுக்குகிறார்கள்.
*  அடுத்தடுத்து வினாக்கள் தொடர்ச்சியாக வந்தால், ஒவ்வொரு இடத்திலும் வினாக்குறி தேவையில்லை. (பட்டிமன்றத்துக்கு தலைவர் சாலமன் பாப்பையாவா, லியோனியா, கு.ஞானசம்பந்தனா?)
*  ஒரு வாக்கியத்தின் நடுவில் வினாச்சொல் வரும் போது கேள்விக்குறி போட்டால் படு அபத்தம். (சினிமாவுக்கு போகலாமா? வேண்டாமா? என யோசித்துக் கொண்டிருந்தேன் என்று எழுதக்கூடாது. மகா தப்பு. சினிமாவுக்கு போகலாமா, வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்தேன் என எழுதினால்தான் சரி.) வாக்கியத்தின் கடைசியில்தான் வினாக்குறி வரவேண்டும். சரியா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...