சனி, 27 ஜூன், 2015

ஆஹா... இது, யோகா!

‘தலைவலியா, இடுப்பு வலியா, மூச்சிரைப்பா, நாள்பட்ட இருமல், தும்மலா...?’
‘ஆமாம்பா... ஆமாம். அதுக்கென்ன இப்போ?’
‘அட! யோகா இருக்க, எதுக்குங்க டென்ஷன்? டெய்லி அரை மணிநேரம் பண்ணுங்க. எல்லாமே போயே போச்சு. போயிந்தே...’
- இன்னும் கொஞ்ச நாளில் இப்படி விளம்பரம் வந்தால் - அதில் அமிதாப் பச்சனே நடித்திருந்தாலும் கூட - நீங்கள் சந்தேகங்கொள்ள அவசியமில்லை. சர்வரோக நிவாரணி அவதாரம் பூண்டிருக்கும் யோகா கலைக்கு அந்த வல்லமை இருக்கிறது என்பது மெய்படுத்தப்பட்ட உண்மை. என்பதால், சர்வதேச யோகா தினமாக ஜூன் 21ஐ அறிவித்து அங்கீகரித்திருக்கிறது ஐக்கிய நாடுகள் சபை. டெல்லி ராஜ்பாத்தில் (ராஜபாதை) பிரதமர் மோடியுடன் சேர்ந்து 35 ஆயிரத்து 985 பேர், அன்றைய தினத்தில் யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்கள். அந்த தினத்தன்று நடந்த உலக நிகழ்வுகளை படம் பிடித்து இங்கே பதிவு செய்கிறது பூனைக்குட்டி (பாருங்க, லேட்டானாலும்... லேட்டஸ்ட்டுதான்!).


பிரஸ்செல்லாம் வந்திட்டாங்கல்ல..?


யோகா செய்வதற்காக இந்தியா வந்திருந்த (?!) பிரதமர் நரேந்திர தாமோதர் மோடி தலைநகர் டில்லியில் உள்ள ராஜபாதையில் ‘பத்த கோனாசனா’ செய்கிறார். இந்த ஆசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? இடுப்பு, வயிறு பகுதிகள் வலுவடையும். கால்களுக்கும், முதுகெலும்புகளுக்கும் வலிமை கிடைக்கும். அதாவது, மிக தூரந்தொலைவுக்கு சலிக்காமல் பயணங்கள் போகலாம். விமானத்தில் எவ்வளவு நேரம் போனாலும், முதுகு வலிக்காது. கால் வலியும் வரவே வராது (அவரவர்க்கு ஏற்ற ஆசனம்...?!).

யோகா சரியில்லைனு தூக்கிடப் போறாங்க!


‘‘பத்மாசனம் பொஷிஷன் சரியில்லை; காலை சரியா மடிச்சிப் போடலைனு காரணம் காட்டி கட்சியில கட்டம் கட்டிடாதீங்கப்பா. வயசாகிப் போச்சு...’’ - துணைப் பிரதமராக இருந்த காலத்தில், அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கு உள்ளூர, ஓயாக் குடைச்சல் கொடுத்து, இப்போது இருக்கிற இடம் தெரியாமல் இருக்கிற எல்.கே.அத்வானி. இமாச்சலப் பிரதேச மாநிலம், பாலம்பூர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அந்த மாநில முன்னாள் முதல்வர் மற்றும் சக பாஜ சகாக்களுடன் யோகா (மாதிரி) செய்கிறார். பத்மாசனம் (ஒழுங்காக) செய்தால் பிளட் பிரஷர் குறையுமாம்; மன அழுத்தம், சஞ்சலம் நீங்கி அமைதி கிடைக்குமாம். அத்வானிக்கு ஆல் தி பெஸ்ட்!

எங்க பிரச்னைக்கு இருக்குதா யோகா?


யூனியன் கார்பைடு நிறுவனத்தில் இருந்து கசிந்த விஷவாயு... போபால் நகரின் அப்பாவிகள் வாழ்க்கையைச் சீரழித்து ஆண்டுகள் கடந்தும் நீதியும் கிடைக்கவில்லை; நிவாரணமும் கிடைக்கவில்லை. மத்தியப் பிரதேச அரசியல்வாதிகள் கிட்டத்தட்ட அப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்ததையே மறந்து போய், யோகா நிகழ்ச்சி என்ற பெயரில் அரசு பணத்தை அநியாயத்துக்கு வாரி இறைத்தால்... பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரத்தம் கொதிக்காதா? பாதிக்கப்பட்ட அப்பாவிகள் யோகா கோலத்தில் அரசுக்கு எதிர்ப்பைக் காட்டுகின்றனர்.

டாஸ்மாக்காசனம்...?


ப்பப் பார்த்தாலும் ‘தண்ணி’யில் மிதக்கிறவர்களை நிறைய பார்த்திருப்போம்தானே? யார் கண்டது, தண்ணியில் மிதப்பதும் கூட ஒரு வகை ஆசனமே என்று அவர்கள் (தவறாக) நினைத்திருக்கக் கூடும். ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் நிஜ தண்ணியில் மிதந்து ஜலாசனம் செய்கிறார்கள். ஜல்ப் பிடித்தால்... அதை விரட்டவும் ஆசனங்கள் ஸ்டாக் இருக்காம் நிறைய!

பனியில், பாய் விரித்து...!


டல் மட்டத்தில் இருந்து 12 ஆயிரம் அடி உயரத்தில், இமயமலையில் அமைந்திருக்கிறது சியாச்சின். கண்ணுக்கெட்டுகிற தூரம் வரை, பனி... உறைபனியும், ஊடுருவல்காரர்களும் தவிர வேறொன்றும் பார்க்கமுடியாது. அங்கு கடமையாற்றுகிற ராணுவ ஜவான்களையும் விட்டு வைக்கவில்லை. பனியில் பாய் விரித்து, பத்மாசன கோலத்தில் மூச்சுப் பயிற்சி நடக்கிறது.

ஜம்முனு உட்கார்ந்திருக்கீங்களா...?


ந்த யோகா, நம்ம பதஞ்சலி சார் கண்டுபுடிச்சதா... தெரியலை. லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில் உள்ள யோகா கிளாஸ் இது. ஸ்பானிஷ் நாட்டு யோகா மாஸ்டர் ஆலிவர் சாமோ, தனது ஸ்டூடண்ட்ஸ்க்கு வித்தியாசமான அக்ரோ யோகா முறைகளை கற்றுக் கொடுத்து அசத்துகிறார். சரி. இந்த யோகாவினால் என்ன பலன்...? அவசரத்துக்கு உட்கார நாற்காலி கிடைக்காவிட்டால்... நோ பிராப்ளம். உங்க நண்பரை கவிழ்த்துப் போட்டு மேற்படி படத்தில் இருக்கிறபடிக்கு ஜம்மென்று உட்கார்ந்து கொள்ளலாம். கால் வலித்தால், ஒருவர் மாற்றி ஒருவர் களைப்பு போக்கிக் கொள்ளலாம்.

நைட்டு ஹால்ட் இங்கதானா?


நியூயார்க் நகரின் டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் திரளான ஆண்களும், பெண்களும் தரையில் மேட் விரித்து ‘சுகாசானம்’ செய்கிறார்கள். மேற்படி நாளில், மேட் விற்பனை சக்கைப் போடு  போட்டிருக்குமே? மொத்த ஆர்டர் யார் எடுத்ததாம்?

ஈஃபிள் டவரு; யோகா பவரு!


சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில், ரயிலுக்குக் காத்திருக்கிற பயணிகள் பேப்பரை விரித்துத் தூங்குகிறது போல, இது என்ன கலாட்டா...? பிரான்ஸ் தலைநகர், பாரீஸ் நகரில் உள்ள ரொம்பப் புகழ் பெற்ற ஈஃபிள் டவருக்குக் கீழே யோகா தின சிற்ற்ற்றப்பு கிளாஸ் நடக்குதாம்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

  1. உங்களின் இந்தப்பதிவு இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-7.html அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரமிருப்பின் சென்று வாசிக்கவும்.

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...