ஞாயிறு, 14 ஜூன், 2015

வாட்டாள் நாகராஜ்... யாருடைய எதிரி?

பொதுமக்கள் நலனுக்காக, ரத்தம் சிந்தி தங்கள் சுயநலனை தியாகம் செய்த தலைவர்களை வரலாற்றில் பார்த்திருக்கிறோம். காந்தி, நேரு, காமராஜ் என்று உதாரணங்களும் வைத்திருக்கிறோம். சுயநலனுக்காக பொதுமக்களை ரத்தம் சிந்த வைத்து, அந்த ரத்தத்தின் கதகதப்பில் ஏறி அமர்ந்து குளிர் காய்கிறவர்களை இன்றைய அரசியலில் பார்க்கிறோம். முன்னதை விட, பின்னதில் உதாரணம் காட்ட நபர்களின் எண்ணிக்கை மிக அதிகம். சட்டென்று சொல்லவேண்டுமென்றால், வாட்டாள் நாகராஜ் பெயரை தேர்ந்த உதாரணமாகச் சொல்லலாம்.


‘‘கர்நாடகா வாழ் தமிழர்கள் கூடிய சீக்கிரம் தமிழ்நாடு திரும்ப வேண்டியிருக்கும்...’’ - நெருப்பை அள்ளிக் கொட்டுகிற வகையில் பேசியிருப்பதன் மூலம், மீண்டும் ஒருமுறை மீடியா வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார் வாட்டாள் நாகராஜ். மீடியா வெளிச்சம் படவேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்திற்காக மட்டுமே அவர் இப்படிப் பேசுகிறார் என்பதை விபரமறிந்தவர்கள் அறிவார்கள். கர்நாடகா வாழ் தமிழர்கள் எதற்காக தமிழகம் திரும்பவேண்டியிருக்குமாம்? வேறென்ன... அதே காவிரி விவகாரம்தான்.


யார் இந்த வாட்டாள் நாகராஜ்?

யிர் கொடுத்து பயிர் விளைவிக்கிற தஞ்சைத் தரணி விவசாயியின் ஜீவாதாரம் காவிரி. அதில் தண்ணீர் விடுவதில்லை என கொள்கை வகுத்துக் கொண்டு கர்நாடக அரசியல்வாதிகள் செயல்படுகிறார்கள். அவர்களை பின்னணியில் இருந்து இயக்கிக் கொண்டிருப்பவர்கள் வாட்டாள் நாகராஜ் போன்ற அடிப்படை சித்தாந்திகள். காவிரிக்கு குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டவிடாமல் கர்நாடக அரசுக்கு தமிழகம் தொடர்ந்து இடையூறு செய்யுமேயானால்... கர்நாடகத்தில் வசிக்கிற தமிழர்களை, தமிழக அரசு திரும்ப அழைத்துக் கொள்ளவேண்டுமாம். பல மொழி, இனம், கலாச்சாரம் கொண்ட மக்கள் இணைந்து வாழ்கிற ஒரு நாட்டில், இப்படியெல்லாம் கூட ஒரு நபரால் எப்படி பேட்டி கொடுக்க முடிகிறது. கொடுத்து விட்டு, சுதந்திரமாக நடமாட, அத்துமீற, அவரை சட்டம் எப்படி அனுமதிக்கிறது என்பது நிஜமாகவே புரியாத புதிர். இருக்கட்டும். யார் இந்த வாட்டாள் நாகராஜ்?

வாட்டாள் நாகராஜ் - சிறுவயதில் இருந்தே அதிகம் நான் கேள்விப்பட்ட பெயர் இது. பெங்களூர் கலவரங்களின் பின்னணி நாயகன். வாட்டாள் என்றதும், ஜைஜாண்டிக் தோற்றத்துடன் ஆரம்ப கால ரஜினி பட வில்லன் போல மிரட்டுகிற உருவத்துடன் இவரை கற்பனை செய்து வைத்திருந்தேன். பின்னொரு நாளில் இவரது போட்டோவைப் பார்க்க நேர்ந்தபோது, சப்பென்று ஆகிவிட்டது. நார்மலான தேக அமைப்பு. திருவோடு ஒன்றை கவிழ்ந்து போட்டது போல தலையில் வித்தியாசத் தொப்பி. அகல கண்ணாடி அணிந்த, சற்றே கோமாளித்தனமான முகம். புதிதாக பார்க்கிறவர்கள், ‘ஒதுங்கி நில்லுப்பா... வீட்ல சொல்லிட்டு வரல...?’ என்று அரட்டல் போட்டு விரட்டி விட்டுப் போகிற அளவுக்கு அப்பிராணி தோற்றம்தான். தமிழ் சினிமாவுக்கெல்லாம் நடிக்க வந்தால்.... பரோட்டா சூரிக்கு பக்கத்தில் நிற்கிற வேடம் கூட தரமாட்டார்கள்.

ர்நாடக மாநிலத்தில், அவர் பிறந்த கிராமத்தின் பெயர் வாட்டாள். நியாயமாக, வட்டாள் என்றுதான் உச்சரிக்கவேண்டும். வட்டாள் என்றால், மலையாளத்தில் வேறுவிதமான அர்த்தம் வரும். வட்டாள் நாகராஜ் என்றாலும், சரிதான். அர்த்தம் பொருத்தமாகத்தான் இருக்கும். கன்னட சளுவாளி வட்டாள் பக்‌ஷா என்கிற (லெட்டர்பேடு) கட்சியின் தலைவர். சாம்ராஜ் நகர் தொகுதி எம்எல்ஏவாக இருந்திருக்கிறார். இவரது கூத்துக்களைப் பார்த்து வெறுத்துப் போன அந்தத் தொகுதி மக்கள், 2004வது ஆண்டுக்குப் பிறகு ஏரியாப் பக்கம் எட்டிப் பார்க்க விடவில்லை. மக்கள் நிராகரித்து விட்டதால், முன்னெப்போதையும் விட அதிகமாக இனவாத, மொழிவாத வெறி கக்கிய படி கர்நாடக தெருக்களில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.

அரசியல் அறிவு வேணாமா?


டீக்கடையில் அமர்ந்து பேசிச் செல்கிற ஒரு கூலித் தொழிலாளிக்கு இருக்கிற அடிப்படையான அரசியல் அறிவு கூட இல்லாத நபர் என்பதை தனது பல்வேறு பத்திரிகை பேட்டிகள் வாயிலாக மீண்டும், மீண்டும் நிரூபித்திருக்கிறார் வாட்டாள் நாகராஜ். ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் தொடர்பாக, 2008ம் ஆண்டின் துவக்கத்தில் ‘குமுதம் ரிப்போட்டர்’ இதழுக்கு அவர் கொடுத்திருந்த பேட்டி இதை ஊர்ஜிதம் செய்யும். அந்தப் பேட்டியில் இருந்து சில வரிகள்....

* ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தால் கர்நாடக மக்களுக்கு என்ன விதமான பாதிப்புகள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

அது எங்கள் நாட்டுத் தண்ணீர். அது எங்கள் மக்களுக்குத்தான் பயன்படணும். அதைத் தமிழ் மக்கள் குடிக்கக் கொடுக்க மாட்டோம். அப்படி நடந்தால் என்ன செய்வோம் என்றே எங்களுக்குத் தெரியாது. உயிரைக் கொடுத்தாவது அந்தத் திட்டத்தைத் தடுப்போம். எங்களிடம் (கர்நாடக அரசிடம்) கேட்காமல் எப்படி அந்தத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது? அது எல்லாமே கர்நாடக இடம்தான். எங்களிடம் அனுமதி பெற்றுத்தான் அங்கே கையை வைக்க வேண்டும்.

எது உங்கள் இடம் என்கிறீர்கள்? ஒகேனக்கல் பகுதி, தமிழக எல்லைக்குள்தானே வருகிறது?

தமிழகத்தில் உள்ள தலைவர்கள்தான் அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நிஜம் என்ன தெரியுமா? கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், உதகமண்டலம் எல்லாமே கர்நாடக மாநிலத்துக்குச் சொந்தமானதுதான். எல்லாவற்றையும் தமிழர்கள் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது, கர்நாடகத்திடம் கருத்துக் கேட்காமல் கைவைப்பது எவ்வளவு பெரிய தப்பு என்று தமிழ்நாட்டுக்காரர்களுக்குத் தெரிய வேண்டாமா? அதற்காகத்தான் இத்தனை எதிர்ப்பைக் காட்டுகிறோம்.

கர்நாடக மாநில எல்லையைக் கடந்து, நீர் அளவை நிலையத்தைத் தாண்டி அதற்கு அப்பால்தான் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கான இடத்தையே குறிப்பிட்டிருக்கிறது தமிழக அரசு. அப்படியிருக்கும் போது கர்நாடக மக்களுக்கு எப்படி தண்ணீர் பிரச்னை வரும்?

அதுதான் ஏற்கெனவே சொன்னேனே. புரியவில்லையா உங்களுக்கு? கிருஷ்ணகிரி வரைக்கும் கர்நாடக மாநிலம்தான் என்கிறபோது, தமிழக அரசு தேர்வு செய்துள்ள இடமும், கர்நாடக அரசுக்குச் சொந்தமானதுதானே? நீங்கள் ஒகேனக்கல்லை மறந்து விடுங்கள். நாங்கள் போராட்டத்தை மறந்து விடுகிறோம்.

- படிக்கும் போதே கிறுகிறுக்கிறதா? கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர் எல்லாமே கர்நாடகத்துக்கு சொந்தம் என்றால், வாட்டாள் எதற்காக சாம்ராஜ் நகர் தொகுதியிலேயே ஜல்லியடிக்க வேண்டும்? திருப்பூரில் வந்து போட்டி போடவேண்டியதுதானே? ‘‘அது எங்கள் நாட்டுத் தண்ணீர். அது எங்கள் மக்களுக்குத்தான் பயன்படணும். அதைத் தமிழ் மக்கள் குடிக்கக் கொடுக்க மாட்டோம்...’’ என்கிறார். riparian rights எனப்படுகிற சர்வதேச நதிநீர் மேலாண்மைச் சட்டம் பற்றி சாருக்குத் தெரியவில்லை.

கடைமடை உரிமை தெரியுமா?

சாதாரணமாக கிராமத்தில் விவசாயம் செய்கிற ஏழை விவசாயிகளிடம் கேட்டால் கூட சரியாக சொல்லுவார்கள். ‘‘கடைமடைக் காரனுக்குத்தான் தம்பி பாசனத் தண்ணீல முன்னுரிமை...’’ நம்ம கிராமங்களில் இன்னும் வாழ்கிற இந்த நெறிமுறைதான், riparian rights எனப்படுகிற சர்வதேச நதிநீர் மேலாண்மைச் சட்டமாக உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. ஒரு நதியின் கடைமடை (அதாவது கட்டக்கடைசியில் இருக்கிற பகுதி) பகுதி விவசாயிகள் / பயனாளர்களுக்குத்தான் அந்த நதி நீரில் முன்னுரிமை. சரியா? அவர்கள் அனுமதியின்றி, நதியின் மேல்பகுதியில் இருப்பவர்கள் எந்தத் திட்டமும் செய்யக்கூடாது. நதியின் கடைமடை பகுதியில் இருக்கிறவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிற வகையில் மேல்பகுதியில் இருப்பவர்கள் செயற்கையாக நீரை தடுத்து நிறுத்துகிற வேலை வைத்துக் கொள்ளக்கூடாது. - இதுதான் சர்வதேச நதிநீர் சட்டம்.

ந்தச் சட்டத்தின் அடிப்படையில்தான், உலகின் பல நாடுகளும் சச்சரவுகளின்றி நதிநீரை பிரித்து பங்கிட்டுக் கொள்கின்றன.
 ஐரோப்பாவில் ரைன் நதியைப் பயன்படுத்துவது தொடர்பாக  ஜெர்மன், பிரான்ஸ், லக்ஸம்பர்க், நெதர்லாந்து நாடுகளுக்கிடையே சிக்கல்கள் எழுந்தபோதும், ஆப்ரிக்காவில் நைல் நதி பங்கீடு தொடர்பாக சூடான்,  எகிப்து நாடுகள் முட்டிக் கொண்ட போதும், டான்யூப் நதி பங்கீட்டில் ஆஸ்திரியா, துருக்கி, வட அமெரிக்க மாகாணங்களுக்குகிடையே  கொலராடோ நதிநீர் சிக்கல், தென் அமெரிக்காவில் அமேசான் நதி பிரச்னை, ஆஸ்திரேலியாவில் முர்ரே நதிப் பங்கீடு தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா மோதல்கள்,  ஆமோர் நதி நீர் பங்கீட்டில் சீனா, ரஷ்யா இடையே உரசல் என பல பிரச்னைகள் சர்வதேச நதிநீர் சட்டத்தின் அடிப்படையிலேயே தீர்க்கப்பட்டிருக்கின்றன.


பாகிஸ்தானுடன் ஏன் பஞ்சாயத்து இல்ல?

வ்வளவு ஏன்...? இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் இல்லாத பிரச்னையா? ஆனாலும் கூட, 1960ல் போடப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் இன்றுவரை ஏன் மதிக்கப்படுகிறது? நதிநீர் பங்கீட்டில் தப்புத்தாண்டா நடந்தால், ஐக்கிய நாடுகள் சபை நேரடியாக தலையிட்டு பொருளாதாரத் தடை விதிக்கிற அளவுக்கு நிலைமை சிக்கலாகி விடும். நாடுகளுக்கு இடையில் மட்டுமல்ல... மாநிலங்களுக்கு இடையில் பாய்கிற நதிகளையும், வாட்டாள் சொல்வது போல, எந்த மாநிலமும் ‘இது என்னோட ஆறுயா... உள்ள வராத!’ என்று உரிமை கொண்டாட முடியாது. இரு மாநிலங்களுக்கிடையே பாயும் நதிநீர் பகிர்வில், கடைசியாகப் பாய்ந்து கடலில் கலக்கும் மாநிலத்தின் தேவையை முதலில் கணக்கிட்டு அப்பகுதிகளுக்கு எவ்விதத்திலும் நீர் குறைபாடு நேரா வண்ணம் காக்கப்பட வேண்டும் என சர்வதேச நதிநீர் மேலாண்மைச் சட்டம் திட்டவட்டமாக எச்சரிக்கிறது.


து வாட்டாள் சாருக்கு தெரியுமா? ஒருவேளை தெரிந்திருந்தும், வெட்டி அரசியல் பிழைப்புக்காக இப்படி டிராமா போடுகிறாரா... தெரியவில்லை. ஆனால், ஒரு விஷயம் புரிந்து கொள்ளவேண்டியது அவசியம். நானறிந்த வரையில் கர்நாடக மாநிலத்து மக்கள் மிகவும் அன்பானவர்கள். பாசமானவர்கள். கன்னடத்தில், கன்னடம் என்கிற சொல் தவிர்த்து வேறு ஒரு வார்த்தை எனக்கு தெரியாது. நான் தமிழில் உரையாடிய போதும் கூட, முகத்தில் துளி வேறுபாடின்றி அவர்கள் பல தருணங்களில் எனக்கு உதவி செய்திருக்கிறார்கள். என்பதால், கன்னட மக்களிடம் எந்தப் பிரச்னையும் இல்லை. மக்களின் உணர்வுகளை உசுப்பி விட்டு, மனதில் நச்சு விதை விதைக்கிற இதுபோன்ற குள்ளநரிக் கூட்டங்கள்தான் பிரச்னையே.

துபோன்ற டுபாக்கூர் ஆசாமிகளை அங்குள்ள காங்கிரஸ் முதல்வரும் சரி, பாஜக முதல்வரும் சரி... போட்டி போட்டுக் கொண்டு ஆதரிப்பதுதான் இதில், ஜீரணிக்க முடியாத ஒரு சோகம் கன்னட சளுவாளி மட்டுமல்ல, நாராயண கவுடாவின் கன்னட வேதிக ரக்‌ஷனே என்கிற அடிப்படைவாத அமைப்பும் கூட, அம்மாநில அரசின் பரிபூரண ஆசியுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் யோசித்துப் பாருங்கள்... நமது தரப்பு நியாயத்தை பேசினால் கூட, தமிழ் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி, ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு கேஸ் புக் பண்ணி உள்ளே தள்ளி விடுவார்கள். வாட்டாளுக்கு வந்த யோகம்!

வாட்டாள் விருப்பம் நடக்குமேயானால்...?

மேகதாது
ரி. தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக (சுமாராக, ஐம்பது ஆண்டுகள்) இயங்கிக் கொண்டிருக்கிற திருவாளர் வாட்டாள்.... நிஜத்தில் யாருக்கு எதிரி? அவர் தமிழர்களின் எதிரியா?
நிச்சயமாக இல்லை. ஐம்பது ஆண்டுகளாக அவர் அக்கப்போர் செய்தும் கூட அங்கு வாழ்கிற தமிழர்கள், தங்கள் கன்னட சகோதரர்களுடன் இணைந்து அமைதியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை வாட்டாள் விருப்பப்படி, அங்குள்ள தமிழர்கள் தாக்கப்படுவார்களேயானால், தமிழகத்துக்கே துரத்தியடிக்கப்படுவார்களேயானால்... என்ன நடக்கும்? வரலாறு நமக்கு நிறைய உதாரணங்கள் வைத்திருக்கிறது.

கிடுகிடுத்த கேரளா

பெரியாறு அணை விவகாரம் பெரிதான போது, கேரளாவில் வசித்த தமிழர்கள், அங்கு சுற்றுப்பயணம் செய்த தமிழக ஐயப்ப பக்தர்கள், ஏலத்தோட்டங்களில் வசித்த தமிழ் கூலித் தொழிலாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். அதன் பின்விளைவு என்னவென்று ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தெரியும். கம்பம் பள்ளத்தாக்கில் இருந்து ஆண்களும், பெண்களும், முதியவர்களும், குழந்தைகளுமாக லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தன்னெழுச்சியாக திரண்டெழுந்து கேரளத்துக்கு ‘படையெடுத்தனர்’. இப்படி ஒரு எதிர்வினையை எதிர்பார்க்காத கேரளா கிடுகிடுத்துப் போனது. தமிழகம் முழுவதும் வட்டிக்கு பணம் கொடுத்து நகை பறி்ப்பு நடத்திக் கொண்டிருக்கிற மலையாள பைனான்ஸ் கம்பெனிகள் ஷட்டரை இழுத்து மூடவேண்டிய கட்டாயத்துக்குள்ளாகின. மாநிலத்தின் பல பகுதிகளிலும் சேட்டன்மார்களின் மாமூல் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.


ரு கட்டத்தில், தமிழகத்தில் வசிக்கிற மலையாள சகோதர, சகோதரிகளே வெகுண்டு, திரண்டெழுந்து கேரள அரசின் பெரியாறு பித்தலாட்டத்துக்கு எதிராக அறிக்கை கொடுத்தனர்; ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழர்களோடு இணைந்து, கேரளாவுக்கு கடும் கண்டனமும் தெரிவித்தனர். அப்புறமாக இறங்கி, வழிக்கு வந்தது கேரளா.


நியூட்டன் விதி தெரிஞ்சுக்கோங்க!

வாட்டாளுக்கு இந்த உதாரணத்தைத்தான் சொல்ல விரும்புகிறோம். கர்நாடகத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் வசிப்பதைப் போலவே, தமிழகத்திலும் லட்சக்கணக்கான கன்னட சகோதர, சகோதரிகள் அமைதியாக, சந்தோஷமாக வசித்து வருகிறார்கள். நீங்கள் அங்கு செய்கிற வினைக்கு, நியூட்டனின் விதி போல இங்கும் சரிக்கு சமமான எதிர்வினை கிளம்புமேயானால்... என்னவாகும்? அமைதியாக இங்கு வசித்துக் கொண்டிருக்கிற கன்னட மக்களுக்கு பாதிப்பா, இல்லையா? அவர்களது மகிழ்வான வாழ்க்கையில் மண்ணள்ளிப் போடுகிற வேலையை வாட்டாள் செய்யலாமா?

ப்போது சொல்லுங்கள்... வாட்டாள் நாகராஜ் யாருடைய எதிரி? கர்நாடக மாநிலத்தில் வசிக்கிற தமிழர்களுக்கா; இல்லை, தமிழகத்தில் அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிற கன்னடர்களுக்கா...?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

10 கருத்துகள்:

 1. Riparian Water Rights குறித்துத் தெரிந்து கொண்டேன்.. இந்த ஒரு உலகம் முழுதும் கடைபிடிக்கப் படும் சட்டத்தை வைத்து ஒரே நாளில் காவிரி முதல் எல்லா நீர் பகிர்வு பிரச்சனைகளையும் தீர்த்து விட முடியுமே..

  பதிலளிநீக்கு
 2. வாட்டாள் நாகராஜ் யாருடைய எதிரி? கர்நாடக மாநிலத்தில் வசிக்கிற தமிழர்களுக்கா; இல்லை, தமிழகத்தில் அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிற கன்னடர்களுக்கா...?

  Ithu than poonaikutty style. sema punch. purinja sari.

  பதிலளிநீக்கு
 3. இனவெறியைத் தூண்டி மக்களை பிரித்து வைக்க இவ்வாறான ஆசாமிகள் எல்லா ஊரிலும் உருவாக்கப்படுகின்றார்கள். மராத்தியத்தில் பால் தாக்கரே கூட இவ்வாறானவரே. வட்டாள் நாகராஜ், பால் தாக்கரே போலவே தான் நம் தமிழகத்தில் சீமான் வகையறாக்களும் கிளம்பியுள்ளன. உண்மையில் இத்தகைய நபர்களால் அக்கம் பக்கம் மாநிலங்களில் வாழ்கின்ற தம் மக்களுக்கே ஆபத்து என்பதை இவர்கள் உணர்வதில்லை. உணர்ந்தாலும் கவலைப்படுவதில்லை. பெருங்கட்சிகளின் அடியாட்களாக தேவைக்கேற்ப கூவவும், குண்டர்களாக செயல்படவும் அதற்கேற்ற கூலிகளை பொறுக்கிக் கொண்டு வாலாட்டுவதுமே இத்தகைய கடும்போக்காளர்களது தொழிலே. ஆனால் பாருங்கள் ! எங்குமே சாதாரண சாமன்ய மக்கள் இவர்களை விரைவில் அடையாளம் கண்டு புறக்கணித்துவிடுகின்றார்கள். :)

  பதிலளிநீக்கு
 4. அது கெடக்குது 'எச்சக்கள' நாய் அதுக்கு பொழுது போலன இப்படி ஏதாவது சொல்வது அவனுடைய வேளை

  பதிலளிநீக்கு
 5. அருமை
  இதைத்தான் தங்களிடம் நாங்கள் எதிர்பார்த்தது
  இது போன்ற உண்மையான விசயங்களில் மக்களின் கவனத்தை திசைமாற்றினால் வாட்டாள் வாலை கன்னட நண்பர்களே நறுக்கி விடுவார்கள்.
  மேலும் எழுதவும் வாழ்த்துக்கள் skr அண்ணே....

  பதிலளிநீக்கு
 6. ரைப் பேரியன் ரைட்ஸ் குறித்து மிக எளிமைபாள விளக்கம்.

  பதிலளிநீக்கு
 7. எனக்கும் இந்த வட்டாள் நாகராஜ் பற்றி கேள்வி பட்டுள்ளேன்.இப்போதுதான் அவரை பற்றி தெளிவாக தெரிந்து கொண்டேன்.தங்களின் அனைத்து தகவலும் தெளிவாக உள்ளது.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...