சனி, 13 ஜூன், 2015

ஒரு ரன்னுல... இந்தியா தோத்துடுச்சே!

ங்கிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சமாச்சாரம் என்றாலும் கூட, நிறுத்தக் குறி அடையாளங்கள் இன்றைக்கு நமது மொழியில் (ஏன்... இந்திய மொழிகள் எல்லாவற்றிலும்தான்!) முக்கிய இடத்தைப் பிடித்து விட்டன. தப்புத் தாண்டா நடந்தால்... மேட்டர் செம சிக்கலாகி விடும்.

ஒரு கமாவை (,) எங்கே போடவேண்டும், எங்கே போடக்கூடாது என்று எழுதுகிறவர்களுக்கு தெரிந்திருக்கவேண்டியது மிக முக்கியம். நிறுத்தக்குறியீட்டு தவறால், வாக்கியத்தின் பொருள், அர்த்தமே மாறி விடும். கமாவை மாற்றிப் போட்டதால், உயிரே போன கதையை தெரிந்து கொள்ளலாம்!


ரு ஆங்கில உதாரணம். சுதத்திரப் போராட்ட காலம் அது. ஆங்கில அரசை எதிர்த்து வன்முறை போராட்டம் நடத்திய போராளியை பிரிட்டீஷ் போலீசார் கைது செய்கின்றனர். நீதிமன்ற விசாரணையில் அவருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்படுகிறது. தூக்குத்தண்டனையை எதிர்த்து லண்டனில் உள்ள கோர்ட்டில் அப்பீல் செய்கிறார்கள் போராளி தரப்பினர். தீர விசாரித்த கோர்ட், இந்த வழக்கில் பெரிய முகாந்திரம் இல்லை என்று கருதுகிறது. என்பதால், தூக்குத்தண்டனையை ரத்து செய்து, அவரை விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கிறது.

குடும்பத்தில் பிரச்னையா?

துவரைக்கும் எல்லாமே நல்லபடியாகத்தான் போனது. கோர்ட் குமாஸ்தா, இந்தத் தகவலை அங்கிருந்து பிரிட்டீஷ் இந்திய அரசுக்கு டெலிகிராம் அடிக்கிறார். எப்படி? ‘ஹேங் ஹிம் நாட், லெட் ஹிம் கோ (hang him not, let him go)’. அதாவது, அவரை தூக்கில் போடவேண்டாம். விடுவித்து விடலாம். குமாஸ்தாவுக்கு குடும்பத்தில் என்ன பிரச்னையோ? டெலிகிராம் அடிக்கிற நேரத்தில் ஒரே ஒரு கமா தப்பாகி விட்டது. அதாவது மாற்றிப் போட்டு விட்டார்.

‘ஹேங் ஹிம், நாட் லெட் ஹிம் கோ (hang him, not let him go). விடுவித்து விடவேண்டாம். அவரை தூக்கில் போடுங்கள். பாருங்கள்... ஒரு சின்ன கமா, போராளியின் உயிரை வாங்கி விட்டது. கமா செய்யும் விவகாரங்கள் பற்றி இப்படி இன்னும் நிறைய, நிறைய, நிறைய உதாரணங்கள் இருக்கிறது. ‘As I was undressing, Radha, my wife, walked into the bedroom.’ - இந்த வாக்கியத்துக்கும், ‘As I was undressing Radha, my wife walked into the bedroom’ என்ற வாக்கியத்துக்கும் உள்ள ‘டெரர்’ வித்தியாசம் தெரிகிறதா. ஒரு கமா குடும்பத்தை காலி செய்து விட்டதுதானே?

‘ஏன் சார்... தமிழ்ல சொல்றதுக்கு ஒரு உதாரணம் கூடவா உங்களுக்கு கிடைக்கலை?’ என்று கம்ப்ளைண்ட் கொடுக்க செல்போனை எடுக்கும் நண்பர்களுக்காக... இது ஆங்கிலத்தில் இருந்து இரவல் பெற்ற விஷயம் என்பதால், ஆங்கில உதாரணத்தால் பார்த்தோம். தமிழிலும் நிறைய உதாரணங்கள் இருக்கிறது. இப்போது பன்றிக் காய்ச்சல் பரவுகிறது இல்லையா? உங்கள் நண்பர் தேடி வந்து பார்க்கிறார். ‘நீ, பன்றி காய்ச்சல் தடுப்பூசி போட்டாச்சா?’ என்று கேட்கிறார். உங்கள் மீது அவர் வைத்திருக்கிற அன்பையும், அக்கறையையும் நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடிப்பீர்கள். கமாவை மாற்றிப் போட்டு, ‘நீ பன்றி, காய்ச்சல் தடுப்பூசி போட்டாச்சா?’ என்று கேட்டால்... பிரெண்ட்ஷிப் பணால் ஆகி விடாதா?

ரி. கமா எங்கே போடவேண்டும், எங்கே போடக்கூடாது? தமிழறிஞர்கள் இதற்கு நிறைய விதிமுறைகள் வைத்திருக்கிறார்கள். மாற்றிப் போட்டால், வாக்கியத்தின் அர்த்தம் வேடிக்கையாகவும், சில சமயம் விபரீதமாகவும் போய் விடுகிறது. விதிகளை படிக்க, படிக்க செம இன்ட்ரஸ்டிங். அதை அடுத்த வாரத்துக்கு மிச்சம் வைக்கலாம். இப்போது, வாக்கியத்தின் வகைகள் பற்றி ஒரு எக்ஸ்பிரஸ் பார்வை.

சொன்னபடி கேளு...!

மிழ் இலக்கணம், வாக்கியங்களை அதன் கருத்து வகையிலும், அமைப்பு வகையிலும் சில பிரிவுகளாக பிரித்து வைத்திருக்கிறது. கடகடவென்று பார்த்து விடலாமா? முதலில் கருத்து வகை.

சொல்கிற கருத்தைப் பொறுத்து, வாக்கியத்தில் நான்கு பிரிவுகள் இருக்கிறது. செய்தி வாக்கியம் (Statement) - மழை பெய்தால் விளைச்சல் அமோகமாக இருக்கும், நன்றாக படித்தால் நிறைய மார்க் கிடைக்கும். வினா வாக்கியம் (Interrogation) - இது யாருடைய செல்போன்? என்ன மாமூ தலைவலியா? உணர்ச்சி வாக்கியம் (Exclamation) - அடப்பாவிகளா... ஒரு ரன்னுல இந்தியா தோத்துடுச்சே! ஆற்றல் அரசரே... வாழ்க பல்லாண்டு. கடைசியாக, விழைவு வாக்கியம் (Desire). இதில் நான்கு பிரிவுகள் இருக்கின்றன. வாழ்த்து (இன்று போல் என்றும் வாழ்க), கட்டளை (சொன்னபடி கேளு... மக்கர் பண்ணாதே), வேண்டுகோள் (மச்சான், ஒரு நூறு ரூபா தாயேன்!), சபித்தல் (போய்த் தொலைடா!).

அஜித் என்ன படம் நடிக்கிறார்?

டுத்து அமைப்பு வகை. இதிலும் நான்கு வகைகள் இருக்கிறது. தனி வாக்கியம் (Simple sentence). ஒரு எழுவாயோ அல்லது பல எழுவாய்களோ, ஒரே ஒரு பயனிலையை மட்டும் கொண்டு வருவது தனி வாக்கியம். ‘அஜித் உன்னை அறிந்தால் படத்தில் நடித்திருக்கிறார். இது ஒரே எழுவாய் (அஜித்), ஒரே பயனிலை (நடித்திருக்கிறார்) அமையப்பெற்ற தனி வாக்கியம். ‘அஜித் உன்னை அறிந்தால், சிம்பு வாலு, தனுஷ் அனேகன் படங்களில் நடிக்கின்றனர்’ - இதில் பல எழுவாய்கள் (அஜித், சிம்பு, தனுஷ்), ஒரே பயனிலை (நடிக்கின்றனர்) இருக்கிறது. இதுவும் தனி வாக்கியம். பொதுவாக, தனி வாக்கியம் என்பது சுருக்க்க்கமாக இருந்தால், படிக்க ஈஸி. மற்றவை, அடுத்த ஞாயிறு!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

  1. ரசிக்க வைத்து விளக்கம் அளிப்பதில் நிபுணர் ஆகிக் கொண்டு வருகிறீர்கள்... பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...