வியாழன், 4 ஜூன், 2015

விஜய்ண்ணா... இப்போ கோக் குடிக்கலாம்களாண்ணா?

சினிமாக்காரர்கள் விளம்பரப்படுத்தி விற்கிற பண்டம் என்றால்... அது என்ன கழிசடையாக இருந்தாலும் கூட வாங்கி மேய்கிற சமூகம் வசிக்கிற நாடு என்ற பெருமை மோகன் ஆண்ட / மோடி ஆள்கிற இந்திய திருநாட்டுக்கு உண்டு. உழைத்துக் களைத்துச் சலித்து அமர்கிற நேரத்தில் நமது பொழுதை இனிமையாகப் போக்குகிற கலைஞர்கள் என்கிற எல்லையைக் கடந்து, ஒப்பாரும், மிக்காருமற்றவர்களாக சினிமாக்காரர்களை நாம் மாற்றி வைத்திருக்கிறோம்.
அமிதாப்பும், மாதுரியும் நம்ப வைத்துக் கொடுத்த நூடுல்ஸை தின்ற குழந்தைகள், டோக்கன் வாங்கி விட்டு மருத்துவமனை பெஞ்ச்சுகளில் காத்துக் கிடப்பது, எல்லாம் கொடுத்த சமூகத்துக்கு சினிமாக்காரர்கள் செய்கிற கைமாறு!மேகி நூடுல்ஸ் விவகாரம்தான் பத்திரிகை, டிவி மீடியாக்களில் இப்போது ஹாட் டாபிக். இது அவசர உலகம். வேலையை எவ்வளவு சீக்கிரம் முடித்து விட்டு அடுத்த மேட்டரை பார்க்கப் போகலாம் என மணிக்கட்டு வாட்ச்சில் மணி பார்த்துக் கொண்டு திரிகிறவர்கள் வாழ்கிற காலம். அப்படிப்பட்ட ‘அரக்கப்பறக்க’ ஆசாமிகளை குறிவைத்து வெளிநாடுகளில் இருந்து நுகர்பொருட்கள் நிறைய இந்திய துறைமுகங்களில் வந்திறங்கின. அதில் முக்கியமானது மேகி நூடுல்ஸ். நெஸ்லே என்கிற பிரபல பன்னாட்டு நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால், கண்ணை மூடிக் கொண்டும், திறந்து கொண்டும் இதை வாங்கி அலமாரிகளில் அடுக்கினார்கள்.

நெஸ்லே லேசுப்பட்ட கம்பெனி அல்ல. நூற்றாண்டு பழமைவாய்ந்தது. நம்மூர் பெரும்புள்ளிகள் டெபாசிட் செய்யப் போவார்களே, அந்த சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தது இந்தக் கம்பெனி (விரிவான வரலாற்றை விக்கி பீடியாவில் படித்து தெரிந்து கொள்க). காபிக் கொட்டை (நெஸ் காஃபி), குடிநீர், குளிர் பானங்கள், சாக்லெட், குழந்தைகள், பெரியவர்களுக்கான உணவுப்பொருட்கள் தயாரித்து விற்பதில் நெஸ்லே தான் உலகநாயகன். கேள்வி கேட்காது, கேஸ் போடாது என்பதால், (ஐந்தறிவு) செல்ல பிராணிகளுக்கான உணவு வகைகளையும் தயாரித்து மார்க்கெட்டில் இறக்குகிறார்கள். பன்னாட்டு நிறுவனத்தின் பெயரை அச்சடித்து விற்றால்... பைசாவை அள்ளி வீசி வாங்க ஆளிருக்கிறார்கள் இல்லையா?

நூடுல்ஸ் மேட்டருக்கு வரலாம். சிறுவர்கள் (சில வீடுகளில் பெரியவர்களும்) விரும்பிச் சாப்பிடுகிற மேகி நூடுல்ஸில் மோனோசோடியம் குளுட்டோமேட் எனப்படுகிற வேதிப்பொருள், அனுமதிக்கப்பட்ட அளவை விடவும் அதிகப்படியாக இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை சாப்பிடும் குழந்தைகள் உடல்ரீதியிலும், மனரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அது மட்டுமல்ல. குழந்தைகளுக்கு ஆகவே ஆகாத அஜினமோட்டோ, காரியமும் இந்த ‘செம டேஸ்ட்டி’ நூடுல்ஸில் எக்கச்சக்கமாக இருக்கிறதாம் (செம டேஸ்ட்டுக்கு ஒருவேளை அதுதான் காரணமோ?!).

டித்ததும் வெட்கித் தலைகுனிய வைக்கிற ஒரு மேட்டரை இப்போது சொல்லப் போகிறேன். நெஸ்லே தயாரித்த நூடுல்ஸ் பாக்கெட் இந்தியா மட்டுமல்ல... வெளிநாடுகளிலும் சக்கைப்போடு போடுகிறது. அங்கிருந்து கொஞ்சம் பாக்கெட்டுகளை வாங்கி ஆய்வகங்களில் பிரித்து மேய்ந்து பார்த்தார்கள். ஒவ்வொரு பாக்கெட்டும் குட், பெட்டர், பெஸ்ட் என்கிற லெவலில் மார்க்கை அள்ளியிருக்கிறது. வெளிநாட்டு மேகியில் நச்சுப்பொருட்கள் இல்லை மக்களே. இந்தியாவில் விற்பனையாகிற நூடுல்ஸில் மட்டும்தான் சகலமும் கலந்திருக்கிறது. இங்கு பிறந்த குழந்தைகள் என்ன சபிக்கப்பட்டவர்களா? இவர்களுக்கு மட்டும் உணவில் விஷம்? வெளிநாட்டு பயணங்களை ஒத்தி வைத்து விட்டு, மோடிஜி திடமான முடிவெடுக்கவேண்டிய தருணம் இது.


தெல்லாம் இருக்கட்டும். வாழும் தெய்வங்களான நமது சூப்பர் ஹீரோக்கள், பக்தகோடிகளான ரசிகப்பெருமக்களுக்கு அளிக்கிற வரங்களைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாமா? மேற்படி மேகி நூடுல்ஸ் மேட்டரையே எடுத்துக் கொள்வோமே! ‘மேகிக்கு நாங்க கேரண்டி...’ என்று கட்டை விரல் உயர்த்திக் காண்பித்து வியாபாரம் பார்த்தவர்கள்... திருவாளர்கள் அமிதாப்பச்சன், மாதுரி தீக்‌ஷித், ப்ரீத்தி ஜிந்தா. மூன்று பேரும் காஷ்மீரில் துவங்கி கன்னியாகுமரிக்கும், அதன் பிறகான கடல் பரப்பு தீவுக்கூட்டங்களில் வசிக்கிற கடைக்கோடி இந்தியன் வரை அத்தனை பேருக்கும் அவ்வளவு பரிச்சயமானவர்கள். அமிதாப்பச்சன் ரொம்ப ஸ்பெஷல். ரிட்டயர்மென்ட்டுக்குப் பிறகும் கோடிக்கணக்கில் கல்லாக் கட்டத் தெரிந்த சாமர்த்தியசாலி இந்தியன் (தாத்தா) இவர்.

வர்தான் மேகி நூடுல்ஸை விளம்பரத்தில் சாப்பிட்டு... ‘ஆஹா... செம டேஸ்ட்’ என்று புரியாத ஹிந்தியில் புல்லரிக்க வைத்தார். ‘அமிதாப்பே சொல்லிட்டார். அப்புறம் விடலாமா’ என்று கடையில் ஒரு பொட்டலம் பாக்கி வைக்காமல் அள்ளி வந்து வெந்நீரில் போட்டு சாப்பிட்டது இந்திய ஜனக்கூட்டம். ‘ஏக் தோ தீன்’ மாதுரி தீக்‌ஷித், ‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’ ப்ரீத்தி ஜிந்தா எல்லாருமே மேகியை அவ்வளவு ரசித்து, ருசித்து சாப்பிட்டார்கள் - விளம்பரங்களில்! இன்றைக்கு பிரச்னையானதும் அடித்தார்கள் பாருங்கள்... அந்தர்பல்டி!

‘ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே அந்த விளம்பர கான்ட்ராக்ட் முடிஞ்சு போச்சு. என் மேல யாரும் கேஸ் போடமுடியாது’ என்று ஜகா வாங்குகிறார், அ.பச்சன். ‘விளம்பரத்தில நடிச்சேன். அவ்ளோதான். ஆளை விடுங்க’ என்கிறார் மா.தீக்‌ஷீத். எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை ப்.ஜிந்தா. ‘சாக்லெட் எடு... கொண்டாடு’ என்று பச்சன் சொன்னதை நம்பி பாக்கெட், பாக்கெட்டாக கபளிகரம் செய்தவர்கள் நிலைமைதான் இப்போது ரொம்ப மோசம்! அதில் என்னென்ன கலந்திருக்கிறேதோ?

கோடிகளை வாங்கிக் குவித்து விட்டு, கண்டதற்கும் சிபாரிசு செய்து விளம்பரத்தில் நடிப்பதும், பிரச்னை வந்ததும், ‘எனக்கும், அதுக்கும் சம்பந்தமில்லை’ என்று ஒதுங்குவதும் எந்த ஊர் நியாயமென்று தெரியவில்லை. ‘நான் பயன்படுத்தாத எந்த ஒரு பொருளையும் எனது ரசிகர்களை வாங்க வற்புறுத்தி சிபாரிசு செய்து விளம்பரத்தில் நடிக்கமாட்டேன்’ என்கிற கொள்கை உறுதியோடு இருக்கிற நடிகர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ராயல் சல்யூட்.
 நச்சு விளம்பரங்களில் நடிக்கிற நடிகர்கள் சட்டப்பூர்வமாக தப்பித்துக் கொள்ளலாம். ஆனாலும், கேடான உணவுப் பொருட்களை தனது ரசிகக்கூட்டத்திடம் சிபாரிசு செய்து வாங்கத் தூண்டுகிற அவர்கள் நீதி, நியாயம் மற்றும் தார்மீக ஒழுக்க நெறிகளின் கீழ் மகா குற்றவாளிகள் என்பதில் துளி சந்தேகமில்லை.


து ஏதோ வடநாட்டு பெரியவர் அமிதாப்புடன் முடிந்து போகிற சமாச்சாரம் இல்லை மக்களே. ‘கோக் குடிடா... கோக் குடிடா...’ என்று குதித்துக் குதித்து ஆட்டம் போட்டவர் நம்ம இளைய தளபதி. கொஞ்ச காலம் முன்பாக, ‘கோக் குடிக்கக் கூடாது’ என்று படம் நடித்தார். கோக் குடிக்கச் சொல்லி குதித்தாடிய போதும் கோடிகள் அவர் அக்கவுண்ட்டில் ஏறியது. குடிக்காதீங்க என்று சினிமா நடித்த போதும் கோடிகள் அக்கவுண்ட்டில் ஏறியது.
 ‘ரெண்டு வருஷம் மின்னாடியே மேகி கான்ட்ராக்ட் முடிஞ்சு போச்சு’னு அமிதாப்ஜி சொல்லி விட்டார். கோக் கான்ட்ராக்ட் முடிஞ்சதா, இல்லையா என்று இளைய தளபதியிடம் கேட்டு உறுதி செய்து கொண்டப் பிறகு, ரசிகர்கள் அந்த குளிர்பானத்தை வாங்கிப் பருகலாம்.


னியனை கழட்டி வீசி இளம்பெண்ணை குண்டுக்கட்டாக தூக்குவாரே.... சரத்குமார் (விளம்பரத்தில்தான்!), அவரது திருமதி ராதிகா சரத்குமார் சென்னையில் உள்ள ஒரு கல்லூரிக்கு விளம்பரம் செய்தார். அவர் பேச்சை நம்பி பணம் கட்டிச் சேர்ந்தவர்கள் ஏமாந்து போனார்கள்.
கேள்வி கிளம்பியதும், ‘சும்மா நடிப்புத்தேன்... அதை ஏன் நீங்க நம்புறீக...’ என்கிறார். இந்தியாவின் அடுத்த தலைமுறையை சீரழிக்கிற வேலையை சீனாவில் இருந்து டாங் லீயோ, பாகிஸ்தானில் இருந்து வசிம்கானோ வந்து செய்ய வேண்டியதில்லை. இங்கிருக்கிற சினிமா செம்மல்கள், அந்த வேலையை படு கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

கைக்கடை திறப்பதற்காக நடிகர், நடிகையர் கூட்டம் தியாகராய நகருக்கு வந்திருந்த போது திரண்டு வந்த ரசிக மகா ஜனக்கூட்டம், அகலாத அடிமைப்புத்திக்கு அடையாளம். அந்த உத்தம ரசிகர்களை நோக்கி ஒரே ஒரு கேள்வியுடன் இந்த சிற்றுரையை... ஸாரி, சிறு கட்டுரையை முடித்து விடலாம்.
இயற்கையோ, இறைவனோ... படைத்தது இன்னதென்று தெரியாது. ஆனால், மனிதப்படைப்பின் போது, மண்டைக்குள் கொழகொழப்பாக மூளை என்கிற ஒரு துடிப்பான உறுப்பு அத்தனை பேருக்கும் கண்டிப்பாக பொருத்தி அனுப்பப்பட்டிருக்கும். அந்த கொழகொழப்பான, துடிப்பான உறுப்பை எப்போது பயன்படுத்தப் போகிறீர்கள்....
 சொல்லுங்கள், இந்திய சினிமா ரசிகர்களே + மக்களே!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

4 கருத்துகள்:

  1. கட்டுரையை முழுமையாக ஏற்று கொள்கிறேன். எனது முகநூ;,லீல் பதிவு செய்திருக்கிறேன். கட்டுரையின் கடைசி வரி, அது இந்த சமுதாயத்திடம் நான் கேட்க விரும்புகிற கேள்வி.

    பதிலளிநீக்கு
  2. Good post. But we will not strain the brain...

    Seshan / dubai

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...