வியாழன், 28 மே, 2015

சச்சின் SUBJECT பார்க்கலாமா?

டிப்பதற்கு ரொம்பக் கடினமானது எனக் கருதப்படுகிற (நிஜத்தில் ரொம்ப, ரொம்ப ஈஸிங்க!) தமிழ் இலக்கணத்தை இன்றைய ‘இணைய’ தலைமுறை இளைஞர்களுக்கு, அவர்களது ‘மொழிநடை’யில் கொண்டு போய்ச் சேர்க்கிற முயற்சியே இந்த ‘நம்மொழி செம்மொழி’ தொடர். 29வது வாரம் வந்தாச்சு. ஏறக்குறைய தொடரின் கிளைமாக்ஸ் பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். தமிழ் இலக்கணத்தில் தெரிந்து கொள்ள கடலளவுக்கு இருக்கிறது. ஆனாலும், இது அறிமுகம் செய்கிற தொடர்தானே? பழகி விட்டால்... அப்புறம் பின்னி பெடலெடுக்கலாம்தானே? அதனால், சில முக்கியமான விஷயங்களை இனி வருகிற பகுதிகளில் ஸ்பீடாக பார்க்கலாம்... ஓகே?

குடி அரசு என்று சொல்லலாமா?

வார்த்தைகளை தேவையில்லாமல் பிரித்தோ, சேர்த்தோ எழுதுகிறதால் வருகிற ஆபத்துகளை கடந்தவாரம் பார்த்தோம். குடியரசு என்பதற்கும் குடி அரசு என்கிற சொல்லுக்கும் வித்தியாசம் சொல்லாமல் புரிந்து விடுகிறது இல்லையா? தமிழில் அடுத்து நாம் செய்கிற பெரிய தவறு, ஒருமை - பன்மை விஷயம். நாய்கள் குரைத்தது என்கிறோம். ஒவ்வொரு பூக்களும் என்கிறோம். நாய்கள் என்பது பன்மை (Plural). என்பதால், நாய்கள் குரைத்தன என்றுதானே எழுத / சொல்லவேண்டும்? குதிரைகள் ஓடின. நடிகர்கள் வந்தனர். அடுத்தது, ஒவ்வொரு பூக்களும். ஒவ்வொரு என்கிற பதம் ஒருமைக்கானது (Singular). என்கிற போது, ஒவ்வொரு பூவும் என்றுதான் எழுதவேண்டும். நாட்கள் சென்றன (நாட்கள் சென்றது அல்ல), இவை எல்லாம் (இது எல்லாம் என்றால் தப்பு) இப்படி ஒருமை, பன்மை தவறுகளை குறைத்துக் கொண்டால், வாக்கியம் அழகு பெறும்.

வாக்கியம் என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. அதுபற்றி இந்தத் தொடரில் நாம் அதிகம் பேசவே இல்லை. வாக்கியம் என்றால் என்ன? ஒரே வரியில் பதில் சொல்லவேண்டுமானால், ‘ஒரே ஒரு முழுக் கருத்தைத் தெரிவிக்கிற சொற்கூட்டமே வாக்கியம்’. எழுத்தும், சொல்லும் வாக்கியத்திற்கான கருவிகள். இப்போது ஒரு ‘ஷாக்’ தகவல் சொல்லப் போகிறேன். ‘ஷாக்’ ஆகாதீர்கள். ‘வாக்கியம்’ என்பதே தமிழ் சொல் அல்ல. வடமொழி. தமிழில்தான் சொல்லவேண்டும் என்றால், ‘முற்று சொற்றொடர்’ எனலாம். ஆனால், காபியில் சர்க்கரைக்குப் பதில் உப்புப் போட்டுக் குடித்தது போல ஒரு சிலரது முகம் மாறலாம் என்பதால்... வாக்கியம் என்றே அழைப்போம். பழகி விட்ட சொற்களை (அது, வடமொழியோ, தென்மொழியோ!) கூடுமான வரைக்கும் அப்படியே பயன்படுத்துவது தவறில்லை என (நானில்லை...) தமிழறிஞர்கள் சொல்கிறார்கள். கேட்டுக் கொள்ளுங்கள் (அதற்காக, பிறமொழியை வம்படியாக திணிக்கக்கூடாது பாஸ்!).

ரு உரைநடையை அழகு படுத்துவது, மேலும் மேலும் படிக்கத் தூண்டுவது வாக்கியம். ஆகவே, எழுத்தாளராக விரும்புகிறவர்கள் இனி வருகிற தகவல்களை கொஞ்சம் கவனம் செலுத்தி படித்தல் நலம். ஒரு வாக்கியத்தில் இருவேறு கருத்துக்கள் இருக்கக்கூடாது. தெரிவிக்கவேண்டிய கருத்தை தெளிவாக தெரிவிக்கவேண்டும். ஒவ்வொரு வாக்கியத்திலும் மூன்று அடிப்படை விஷயங்கள் இருக்கும். எழுவாய், பயனிலை, செயப்படுபொருள். அம்மா, ஆடு, இலை... படித்த காலத்திலேயே இதுவும் படித்திருப்போம். என்றாலும், ஞாபகப்படுத்தவேண்டியிருக்கிறதே?

சச்சின் SUBJECT!

* ஒரு வாக்கியத்தில் சொல்லப்படுகிற விஷயத்தை செய்தது யார் அல்லது எது? - இதுதான் எழுவாய் (Subject). சச்சின் கிரிக்கெட் விளையாடினார். இந்த வாக்கியத்தைப் பாருங்கள். இதில் ‘கிரிக்கெட் விளையாடினார்’ என்று சொல்லப்படுகிற விஷயத்தை செய்தது யார்? சச்சின். ஆகவே, சச்சின் தான் இங்கே எழுவாய். ரைட்டா? எழுவாய் எப்போதும் பெயர்ச்சொல்லாக இருக்கும்.

ஒரு வாக்கியத்தின் பயனை, செயலை... அதாவது, எந்த விஷயம் செய்யப்பட்டது என குறிப்பது பயனிலை (Predicate).சச்சின் கிரிக்கெட் விளையாடினார். இந்த வாக்கியத்தில் என்ன விஷயம் செய்யப்பட்டது? விளையாடுதல். அதுதான் இங்கே பயனிலை. இது எப்போதும் வினைச்சொல்லாகவே இருக்கும்.

கட்டக்கடைசியாக, செயப்படுபொருள் (Object).சொல்லாமலே புரிகிறது இல்லையா? என்ன செய்யப்பட்டது? பயனிலையில் சொல்லப்பட்ட விஷயம் யாரை / எதை முன்வைத்து செய்யப்பட்டது? அவ்வளவுதான். சச்சின் கிரிக்கெட் விளையாடினார். இங்கே செய்தது யார்? சச்சின். அவர் எழுவாய். என்ன செய்தார்? விளையாடினார். அது பயனிலை. என்ன விளையாடினார்? கிரிக்கெட். அதுதான் செயப்படுபொருள். இது எப்போதும் பெயர்ச்சொல்லாகவே இருக்கும். இன்னும் ஒரே ஒரு உதாரணம். ‘அஜித் கார் ஓட்டினார்’. இந்த வாக்கியத்தை பிரித்துப் பாருங்கள். செய்தவர் யார்? அஜித். அவர் எழுவாய். என்ன செய்தார்? ஓட்டினார். அது பயனிலை. எதை ஓட்டினார்? கார். இது செயப்படுபொருள். புரிஞ்சிடுச்சா?

ழுவாய், பயனிலை, செயப்படுபொருளை இந்த வரிசையில்தான் பயன்படுத்தவேண்டும் என்று நம்ம இலக்கணம் எந்தக் கட்டுப்பாடும் போடவில்லை. சும்மா புகுந்து விளையாடுங்க... என்று விளையாட அனுமதிக்கிறது. சச்சின் கிரிக்கெட் விளையாடினார் (எழுவாய், செயப்படுபொருள், பயனிலை), கிரிக்கெட் சச்சினால் விளையாடப்பட்டது (செ.பொ, எழு., பய.,), சச்சின் விளையாடிய கிரிக்கெட் சூப்பர் (எழு., பய., செ.பொ.,). ஒரு வாக்கியத்தில் இந்த மூன்றும் இருந்தே ஆகவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ‘கிரிக்கெட் விளையாடினேன்’ என்ற வாக்கியத்தில் செயப்படுபொருள் (கிரிக்கெட்), பயனிலை (விளையாடினேன்) இருக்கிறது. யார் என்பதை குறிக்கிற எழுவாய் இல்லை. அதற்காக, வாக்கியம் ஒன்றும் புரியாமல் போய்விடுவதில்லையே? இந்தப் புரிதல்களுடன்... வாக்கியத்தில் எப்படியெல்லாம் ஜாலம் காட்டலாம் என அடுத்தவாரத்துக்கு தயாராகலாமா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

3 கருத்துகள்:

  1. கலைச்செல்வன், அரூர்28 மே, 2015 அன்று PM 1:13

    இப்படி பாடம் நடத்தியிருந்தால் தமிழ் இலக்கணத்தில் 200 வாங்கியிருபேன்

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான முயற்சி.தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  3. ரசிக்க வைக்கும் விளக்கத்துடன் அருமையான பாடம்...

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...