ஞாயிறு, 3 மே, 2015

வாழ்த்துக்கள்... சொன்னால் என்ன தப்பு?

ண்டிகை காலங்கள், மனம் மகிழ்விக்கிற வசந்தகாலங்கள். சில பண்டிகைகளை கடந்து விட்டோம். சில சமீபிக்கின்றன. புத்தாண்டு, பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்து விட்டன. எஸ்எம்எஸ், இ-மெயில், வாட்ஸ் அப், ஃபேஸ் புக் என்று ஒன்று பாக்கி விடாமல் அத்தனையிலும் ‘வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்...!’ என்று விர்ச்சுவல் கைகுலுக்கல்கள் நடத்தி ஓய்ந்திருக்கிறோம், இல்லையா?
 வாழ்த்துக்கள் சொல்கிற குஷியிலும் கூட, நம்மொழியை மறந்து விடக்கூடாது. வாழ்த்துக்கள்... இது சரியான வார்த்தைதானா? காலம், காலமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். எழுதிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், வாழ்த்துக்கள் என்கிற பதம் தப்பு என்கிறார்கள் தமிழ் அறிஞர்கள்.


‘க்’கன்னா எதுக்குண்ணா?

மிழில் மிக அதிகம் சர்ச்சையை, விவாதங்களை கிளப்பி விட்டு சத்தமே இல்லாமல் உட்கார்த்திருக்கும் வார்த்தை, வாழ்த்துக்கள். என்ன தப்பு இந்த வார்த்தையில்? வாழ்த்துக்கள் - வாழ்த்துகள். க்கன்னா போட்டு எழுதவேண்டும் என்று ஒரு தரப்பாரும், போடப்படாது என்று மறு தரப்பாரும் முட்டிக் கொண்டிருக்கிறார்கள். இணையத்தில் ஒரு ரவுண்டு அடித்துப் பாருங்கள்... தெரியும். எது சரி, வாழ்த்துக்களா; வாழ்த்துகளா? க்கன்னா போட்டு வாழ்த்துக்கள் என்று எழுதுவதே சரி என்று நிறையப் பேர் சத்தியமடித்தாலும் கூட, அது தப்பு என்று தமிழ் இலக்கணமும், அறிஞர்களும் உறுதிப்பட நிரூபித்திருக்கிறார்கள்.

இதைத் தெரிந்து கொள்ள, இதற்கு முந்தைய 24 வார ‘நம்மொழி செம்மொழி’ கட்டுரைகளையும், அதில் நாம் படித்து முடித்த குற்றியலுகரம், சந்திப் பிழை, வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம் எல்லாம் ஒரு புரட்டு புரட்டவேண்டும். ஆனால், அதற்கெல்லாம் நேரமில்லை.  ஆகவே, சுருக்கமாக புரிந்து கொள்ளலாம். க், ச், ட், த், ப், ற் - இந்த ஆறு எழுத்துகளுக்குப் பின்னால் வருகிற உகார (த+உ = து, க+உ = கு, ப+உ = பு) எழுத்தைத் தொடர்ந்து புள்ளி வைத்த எழுத்து வரப்படாது. இது விதி. இந்த விதிப்படி பார்த்தால், வாழ்த்து என்ற சொல்லின் பன்மை வாழ்த்துகள். வாழ்த்துக்கள் அல்ல. எழுத்து - எழுத்துகள், கணக்கு - கணக்குகள்... இதுதான் சரி. வாழ்த்துகிறேன் என்றுதானே எழுதுகிறோம். வாழ்த்துக்கிறேன் என்று இல்லையே?

குளிருக்கு என்ன குடிப்பீர்கள்?

ஆனால், இலக்கியங்களிலேயே வாழ்த்துக்கள் என்று இருக்கிறதே என்று நண்பர்கள் மேற்கோள் காட்டி கொக்கி போடலாம். தப்பில்லை. போலி இலக்கணம் தெரிந்திருந்தால், அந்த கொக்கிக்கு அவசியம் இராது. போலி இலக்கணம் ஏற்கனவே படித்திருக்கிறோம். அதாவது, போல இருப்பது போலி. இலக்கண போலி. ஒரு பாடலில், இலக்கியத்தில் சுவை கூட்டிக் காட்டுவதற்காக வேண்டுமென்றே சில நேரம் இலக்கணத்தை மீறுவார்கள். அது இலக்கண போலி. வரம்புகளுக்குட்பட்டு அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், விபரம் தெரியாமல் தப்பு செய்யக்கூடாது. சரியா? இன்னும் ஒன்றே ஒன்று பார்த்து விட்டு ‘அணி’க்கு போகலாம். இது குளிர்காலம். அடிக்கடி தேநீர் குடித்தால் நன்றாக இருக்கும்தானே? நீங்கள் குடிக்க விரும்புவது தேநீரா அல்லது தேனீரா? ரொம்ப சுலபம். தேயிலை போட்டு, ஆவி பறக்க சுடச்சுட குடிக்கிறீர்கள் இல்லையா... அது, தேநீர் (தேயிலை + நீர்). உடல் எடை குறைப்பதற்காக சுடுநீரில் தேன் கலந்து சிலர் குடிக்கக் கேட்டிருக்கலாம். அப்படி தேன் கலந்த நீர் குடித்தால், அது தேனீர் (தேன் + நீர்). நீங்கள் குடிப்பது எது?

இடைவெளி அவசியம்

உவமை அணி (Simile) பற்றி போனவாரம் லேசாக பார்த்தோம். எடுத்துக்காட்டு உவமை அணி என்று ஒரு விஷயம் இருக்கிறது. ‘‘உவமானத்தையும், உவமேயத்தையும் தனித்தனி வாக்கியமாக நிறுத்தி இடையில் உவம உருபு கொடாமல் கூறுவது எடுத்துக்காட்டு உவமை அணி...’’ என்கிறது இலக்கணம். (உவமானம், உவமேயம், உவம உருபு எல்லாம் போன வாரம் படித்து விட்டோம்). எ.கா.உ. அணியைப் புரிந்து கொள்ள ரொம்பவும் சிரமப்படவேண்டாம். ஒரு விஷயத்தைச் சொல்லி, அதன் மூலமாக மற்றொரு விஷயத்தை புரிய வைப்பது எ.கா.உ. அணி. அவ்வளவுதான்.
‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு’ - இந்தத் திருக்குறள் சுலபமாக புரிய வைக்கும். எழுத்துகள் எல்லாம் ‘அ’ என்கிற எழுத்தை முதலாக உடையவை. அதுபோல, உலகம் கடவுளை முதலாகக் கொண்டது. இந்தக் குறளில் ‘அது போல’ என்கிற விஷயம் மறைவாக வருகிறது. நேரடியாக வந்தால், அது உவமை அணியாகி விடும். அதற்கும் ஒரு உதாரணம்.
‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை’ - இந்தக் குறளில் இரு விஷயங்களை ஒப்பிட்டு அதுபோல, இதுபோல என உவமை கூறப்பட்டிருக்கிறது... என்பதால் இது (எடுத்துக்காட்டு அல்லாத) உவமை அணி.

அணிகள் இன்னமும் இருக்கின்றன. அடுத்தவாரமும் கூட அணிவகுப்பு தொடர்கிறது. முடிப்பதற்கு முன்பாக.... அணிவகுப்பை இடைவெளி இல்லாமல் சேர்த்து எழுதினால் ‘பேரணியாக, ஊர்வலம் போல அணிவகுத்து வருவது’ என்கிற அர்த்தம் கிடைக்கும். அணி வகுப்பு என்று இரண்டுக்கும் இடையே இடைவெளி விட்டால்... அணி இலக்கணம் குறித்த வகுப்பு என்று அர்த்தம் மாறி விடும். தேவைப்படுகிற நேரத்தில், இடைவெளியும் கூட ரொம்ப முக்கியம். புரிகிறதுதானே?!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...