திங்கள், 25 மே, 2015

எக்மோர் ஸ்டேஷனில் என்ன பிரச்னை?


வாழ்க்கைக்கு மட்டுமல்ல... வார்த்தைக்கும் கூட தேவையான நேரத்தில் இடைவெளி முக்கியம் என 26வது தொடரின் ஆரம்பத்தில் ஒரிரு பத்திகள் பார்த்தோம். ‘ஏன்... பிரித்தால் என்ன தப்பு? என்ன கெட்டுப் போகும்?’ என்று (சற்று தாமதமாக) ஒரு நண்பர் கடிதம் போட்டிருக்கிறார். இந்த வாரத்தை அவருக்கு ‘டெடிகேட்’ செய்யலாம். தவறான முறையில் பிரித்து எழுதினால், அர்த்தம் மாறி அனர்த்தம் ஆகிவிடும். மட்டுமல்ல... பக்கத்தில் இருப்பவர்கள் ‘டின்’ கட்டி விடுகிற அபாயத்தையும் நமது வார்த்தைகள் ஏற்படுத்தி விடும். ‘அறிவில்லாதவன்’ என்ற சொல் பற்றி கடந்தவாரம் பார்த்தோம். அதில் இருந்தே ஆரம்பிக்கலாம். அறிவில்லாதவன் - இந்த வார்த்தையை அறிவு + இல்லாதவன் என்று பிரிப்பதற்கும், அறிவில் + ஆதவன் என்று பிரிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதுதானே?


பழங்  கள் கிடைக்குமா?

வைகை எக்ஸ்பிரஸ் பிடித்து சென்னை எக்மோரில் இறங்குகிறீர்கள். முதலாவது பிளாட்பாரத்தில் ஒரு அறிவிப்புப் பலகை. ‘பயணிகள் சாப்பிடும் இடம்’. தேவையில்லாமல் ஒரு ஸ்பேஸ் விட்டு ‘பயணி கள் சாப்பிடும் இடம்’ என்று எழுதி வைத்தால் என்ன ஆகும்? ‘நல்லதாப் போச்சு’ என்று ‘குடிமகன்’கள் கூட்டம் எக்மோர் ஸ்டேஷனுக்கு புறப்பட்டு வந்து விடாதா? ஒரே ஒரு தேவையற்ற இடைவெளி, ஸ்பேஸ் ‘குடிமகன்’களை கூட்டி வந்து விட்டது பார்த்தீர்களா? முதலாவது பிளாட்பாரத்திலேயே, பழக்கடை இருக்கிறது கவனித்திருக்கிறீர்களா? தேவையற்ற இடைவெளி போட்டு, ‘இங்கு பழங் கள் கிடைக்கும்’ என்று எழுதி வைத்தால், டிரெய்னில் இருந்து இறங்குகிறவர்களில் நிறையப் பேர் அந்தக் கடைக்குப் போய் விசாரித்து ஏமாற்றமடைந்து விடமாட்டார்களா?

ன்னும் ஒரு உதாரணம். ‘இருந்து - லிருந்து’. சேர்க்க - பிரிக்க விதியில் இந்த வார்த்தைகளும் கூட சில அர்த்தக் குழப்பங்களை ஏற்படுத்தி விடும். ‘சார் எனது வீட்டிலிருந்து கிளம்பினார் - சார் எனது வீட்டில் இருந்து கிளம்பினார்’. பார்க்க ஒன்று போலவே தெரிந்தாலும் இரு வாக்கியமும் வெவ்வேறு அர்த்தம் சொல்கின்றன. ‘வீட்டில் இருந்து’ என்று பிரித்து எழுதும் போது, ‘வீட்டில் தங்கி விட்டு போனார்’ என்கிற மாதிரி அர்த்தம் காட்டி விடும். ‘அவரைப்பூவில் காணலாம்’ என்பதை ‘அவரைப் பூவில் காணலாம்’ என்று எழுதக்கூடாதில்லையா? ‘அம்பிகா காபீக்கடை’ என்று எழுதுவதற்குப் பதில் ‘அம்பி காகா பீக்கடை’ என்று எழுதியிருந்தால், யாராவது கடைப்பக்கம் எட்டியாவது பார்ப்பார்களா?

பிரிப்பது எப்போது?

தாரணங்கள் ஓவர் டோஸ் ஆகியிருக்கும். இனி இலக்கணம் பார்க்கலாம். சொற்தொடர்களை பிரிப்பதற்கும், சேர்ப்பதற்கும் கூட விதிகளை வகுத்து வைத்திருக்கிறது தொல்காப்பியம்... எப்போது பிரிக்கவேண்டும், எப்போது பிரிக்கக்கூடாது என்று. பிரித்து எழுதக்கூடாத இடங்களின் பட்டியல்:

* வினைத்தொகை: மூன்று காலங்களையும் ஒருசேரக் குறிக்கிற ஒரு பெயர்ச்சொல். ஊறுகாய், ஏவுகணை, ஆடுகளம், ஓடுதளம். இதெல்லாம் பிரிக்கப்படாது.
* பண்புத்தெகை: நிறம், வடிவம், சுவை, குணம், எண்ணிக்கை என ஏதாவது ஒரு பண்பின் பெயரைச் சேர்ந்து வருகிற பெயர்ச்சொல். கருங்குரங்கு, வட்டமுகம், புளிச்சோறு, வெறிநாய், முக்கனி.

* இருபெயரொட்டு பண்புத்தொகை: சிறப்புப்பெயர் முன்பாகவும், அதற்கு அடுத்தாக பொதுப்பெயரும், இடையே ‘ஆகிய’ என்கிற பண்பு உருபு மறைந்து வருமானால், அது இருபெயரொட்டு பண்புத்தொகை - பிரித்து எழுதக்கூடாது. சாரைப்பாம்பு, தமிழ்நாடு, நல்லபாம்பு, மாமரம், கடல்நீர்.
* உம்மைத்தொகை: இருசொற்களின் இடையே ‘உம்’ என்கிற உம்மை உருபு மறைந்து நிற்பது. செடிகொடி, ஆடுமாடு.
* உவமைத்தொகை: இரு சொற்களைக் கொண்ட ஒரு வார்த்தை. முதல் சொல் உவமையாக இருக்கும். புலிப்பாய்ச்சல், நிலாமுகம்.
* வேற்றுமை உருபுகளை பிரிக்கக்கூடாது. வீட்டிலிருந்து.
* இடைச்சொல்லையும் பிரிக்கத் தடா. அவர்தான் (அவர் தான் அல்ல).
* துணைவினையை சேர்த்துத்தான் எழுதணும்: வந்துவிடு, செய்துமுடி.

புத்தகங்களை வடிவமைக்கிற போது இப்போதெல்லாம் இஷ்டத்துக்கு வார்த்தைகளை உடைத்து எழுதுகிறார்கள். அர்த்தம் கெடாத அளவுக்கு வார்த்தைகளை உடைக்கவேண்டும். ‘தொழிலாளர்கள் வன்முறையில் இறங்கக்கூடாது’ என்ற வரியை உடைத்து எழுதும் போது ‘தொழிலாளர் கள்வன் முறையில் இறங்கக்கூடாது’ என்று உடைத்து எழுதினால், நன்றாகவா இருக்கும்? அடிக்கடி செய்கிற சில தவறுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அடைப்புக்குறிக்குள் இருப்பது தவறான பிரயோகம்.
அவ்வூர் (அவ் வூர்), வந்தவுடன் (வந்த உடன்), வீட்டிலிருந்து (வீட்டில் இருந்து), அவர்களிடம் (அவர்கள் இடம்), வெளியேறினார் (வெளி ஏறினார்), வந்துவிட்டார் (வந்து விட்டார்), பயனளிக்குமானால் (பயனளிக்கும் ஆனால்), பலாச்செடி (பலாச் செடி), கட்டளையிட்டார் (கட்டளை இட்டார்), திருநாவுக்கரசர் (திரு நாவுக்கரசர்).

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

2 கருத்துகள்:

  1. மிகவும் சிறப்பான ஒரு பதிவு. தேவையற்ற இடங்களில் பிரித்து எழுதினால் அதன் பொருளே மாறிவிடும். தமிழ் ஒரு டேஞ்சரான மொழி, சிறிய பிழை விட்டாலும் அது பொருளை தலைகீழாக்கி விடும். ஆனால் இப்போது எல்லாம் பல தமிழ் செய்தி தாள்கள், தொலைக்காட்சிகள், இணையதளங்களில் கொஞ்சம் கூட எழுத்துப் பிழைகளை வாக்கியப் பிழைகளை திருத்தாமல் வெளியிடுகின்றார்கள். தமிழ் தி இந்து போன்ற இணையதளங்களில் என்ன எழுதுகின்றார்கள் என புரிந்து கொள்ளவே முடியவில்லை. இந்நிலை மாற வேண்டும். இந்த ஊடங்களில் பயன்படுத்தப்படும் தமிழை கண்காணிக்கவும் தொடர்ந்து பிழைகள் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கவும் ஊடகத் தமிழ் கண்காணிப்பகத்தை தமிழ் ஆர்வலர்களும், தமிழக அரசும் ஏற்படுத்த வேண்டும்.

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...