சனி, 16 மே, 2015

கரும்பு தின்னக் கூலி வேணுமா?

‘புலி உருமுது.. புலி உருமுது...’ என்று ஒரு சினிமா பாட்டு சில காலம் முன் பட்டையைக் கிளப்பியது, கேட்டிருப்பீர்கள். ஹீரோ வர்றாராம்! இது என்ன அணி? உயர்வு நவிற்சியா அல்லது இல்பொருளா? குழப்பமே வேண்டாம். இது உருவக அணி. அதுபோல, இதுபோல என்று கம்பாரிசன் செய்தால் அது உவமை என்று பார்த்திருக்கிறோம். ‘அதுதாண்டா இது; இதுதாண்டா அது!’ என்று ஆணியடித்தது போல சத்தியமடித்துச் சொன்னால்... அது உருவகம். ஹீரோவை புலி என்று வர்ணித்திருக்கிறார்களே... அப்படியானால், இதை உயர்வு நவிற்சி அணி என்று சொல்லக்கூடாதா?


புலியா... கிளியா?

விஷயம் ரொம்ப சிம்பிள். உவமை, உருவகம், உயர்வு நவிற்சி மூன்றுக்கும் கொஞ்ச, கொஞ்சம்தான் வித்தியாசம்.
* புலி போல சார் செம ஸ்பீடு - இது உவமை. ‘புலி போல’ என்று இவரையும், அதையும் ஒப்பீடு செய்திருப்பதால்.
* ஆட்டத்துல அவர் புலிங்க. அவர் பக்கத்துல நிக்க முடியுமா என்ன? - இது உருவகம். ‘சார்தாங்க புலி’ என்று சாரை அஃறிணை லிஸ்ட்டில் சேர்த்து விடுகிறார்கள் இல்லையா, அதனால்!
* ‘சார் உடம்புல புலியோட எனர்ஜி இருக்கும் போல. அதான், இந்த வேகம்...’ - இது உயர்வு நவிற்சி.
இன்னும் கூட ஒரு உதாரணம். கிளி போல பொண்ணு’ என்றால் உவமை. ‘கிளிடா அவ...’ என்று சொக்கிப் போய் சொன்னால் உருவகம். ‘கிளி மாதிரி அவ்ளோ அழகா கொஞ்சிக் கொஞ்சிப் பேசுறாடா...’ என்று உருகினால், உயர்வு நவிற்சி. வித்தியாசத்தை கேட்ச் பண்ணீட்டிங்களா?

போனவாரம் ‘மா மன்னா... நீ ஒரு மாமா மன்னா...’ பார்த்தோமில்லையா, வஞ்சப்புகழ்ச்சி அணி? அதற்கு நெருங்கிய ஒரு விஷயம் சிலேடை. ஏறக்குறைய ‘மா மன்னா...’வையும் கூட சிலேடை லிஸ்ட்டில் சேர்க்கலாம். ஒரு சொல்லோ அல்லது வரியோ இரண்டு விதமான அர்த்தங்கள் கொடுப்பது (அதாவது, டபுள் மீனிங்!!) சிலேடை அணி. இரட்டுற மொழிதல் அணி என்றும் சொல்லலாம். ‘அறிவில்லாதவனே... புத்தியில்லாதவனே!’ என்று யாரையாவது சொன்னால்... சும்மா விடுவார்களா? அதுவும், மதுரை பக்கம் என்றால், மேட்டர் முடிந்தது. ஆனால், கொஞ்சம் தமிழ் தெரிந்தவர், தமிழ் ஆர்வலர் என்றால், ‘தேங்க்யூ... ஸேம் டூ யூ’ என்று உங்களை தமிழில் பாராட்டவும் வாய்ப்பு இருக்கிறது. ஏன்?

அறிவில்லாதவனே...!

றிவில்லாதவன் என்கிற சொல்லை இரண்டு விதமாக அர்த்தம் கொள்ளலாம். நேரடியான முதல் அர்த்தம்... ‘மண்டையில் சரக்கு இல்லை’. இன்னொரு பிரமாதமான அர்த்தமும் இருக்கிறது. கொஞ்சம் தமிழ் தெரிந்தவராக இருக்கவேண்டும். அறிவில் ஆதவனே... அதாவது, அறிவில் சூரியன் மாதிரி பிரகாசிக்கக் கூடியவனே. இதெப்டி இருக்கு? இதுதான் சிலேடை எனப்படுகிற இரட்டுற மொழிதல் அணி. சொற்பொருள் பின்வருநிலை அணி என்று ஒன்று இருக்கிறது. சின்னச்சின்ன ஆசை, சிறகடிக்க ஆசை, முத்து முத்து ஆசை, முத்தமிட ஆசை... இப்படி ஆசை, ஆசை, ஆசை என்று வருகிறில்லையா? இது சொ.பொ.பின்வருநிலை அணி.

பிறிதுமொழிதல் அணியை மட்டும் பார்த்து விட்டு, அணி மேட்டருக்கு புள்ளி வைத்து விடலாம். சொல்ல வந்த விஷயத்தை வெளிப்படையாகச் சொல்லாமல், வேறொரு விஷயத்தை சொல்லி அதன் மூலமாக புரிய வைப்பது பி.மொ. அணி. இலக்கணச் சுத்தமாக சொல்வதானால், ‘உவமானத்தைக் கூறி விட்டு, உவமேயத்தை கூறாமல் விட்டு விடுவது’. உவமானம், உவமேயம் பற்றி ஏற்கனவே படித்திருக்கிறோம். எதைப் பற்றி சொல்ல வருகிறோமோ, அந்த விஷயம் உவமேயம். அந்த விஷயத்தை விளக்கவோ, புரிய வைப்பதற்கோ நாம் பயன்படுத்துவது உவமானம். ஒரு உதாரணம்: குரங்கு போல முகம். இந்த வரியில், விளக்க வருகிற விஷயம் முகம். இது உவமேயம். அதை புரிய வைப்பதற்காக நாம் பயன்படுத்துவது குரங்கு. இது உவமானம்.

தோழருக்கு எங்க வேலை?

ன்னும் சுலபமாக புரிந்து கொள்ளலாம். உங்களுக்கு தெரிந்த நண்பர். வாசிப்பதில் பெரிய ஆர்வம் கொண்டவர். தேடித் தேடி படிக்கிற அவருக்கு ஒரு நூலகத்திலேயே வேலை அமைந்து விட்டதானால்...? அந்த நண்பரை சந்திக்கிறீர்கள்.
‘என்ன தோழர், வேலை கிடைச்சிருக்காமே?’
‘ஆமா தோழர். நூலகத்தில வேலை.’
‘அட! கரும்பு தின்ன கூலிதான் போங்க!’
படிக்கிற ஆர்வம் கொண்ட தோழருக்கு நூலகத்தில் வேலை கிடைத்தால்...? இதை ‘கரும்பு தின்னக் கூலி’ என்ற பதத்தை பயன்படுத்தி புரிய வைக்கிறோம். இதுதான் பிறிதுமொழிதல் அணி. இன்னும் கூட ஒரு உதாரணம். உங்கள் கல்லூரி நண்பரை நீண்டகாலத்துக்குப் பிறகு சந்திக்கிறீர்கள்.
‘என்ன மாமு. எங்க வேலை பார்க்கிற?’
‘அதான்... அந்த (பிரபலமான ஒரு கல்லூரி பெயரைச் சொல்லி) மகளிர் கல்லூரிலதாண்டா’
‘அட. கரும்பு தின்ன கூலிடா!’
துக்கு மேல் உதாரணம் தேவைப்படாது என நினைக்கிறேன். அணிகள் இன்னும் நிறைய இருக்கின்றன. கவிதை எழுதும் போது சரி. ஆனால், உரைநடையில் அணிகளை அளவாகப் பயன்படுத்தினால்தான் நன்றாக இருக்கும் என்பது தமிழறிஞர்களின் அட்வைஸ். அடுத்த வாரம் சந்திக்கலாமா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...