செவ்வாய், 12 மே, 2015

உத்தமவில்லனா... இம்சை அரசனா?

டிப்பு என்கிற சப்ஜெக்டைப் பொறுத்த வரைக்கும், இன்றைய தேதிக்கு, உலக நாயகன் எனப்படுகிற கமல் ஹாசன்தான் தமிழ் சினிமாவின் அத்தாரிட்டி. நடிக்கிற விஷயத்தில், அவரை அடித்துக் கொள்வதற்கெல்லாம்... தேடினாலும், ஆள் கிடைக்காது. மகாநதி, நாயகன், குணா... என்று அவரது மாறுபட்ட நடிப்புக்கு உதாரணங்கள் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆகையால், ரசிக சிகாமணிகள், ஆஸ்கார் நாயகன் என்று அவரை அன்போடு (சிறிதுகாலம்) அழைத்தார்கள். கிடைக்காத வருத்தமோ... ஆஸ்கார் ரவிச்சந்திரன் கோபித்துக் கொள்வார் என்ற எண்ணமோ... ஆஸ்கார் நாயகன் பட்டம், உலக நாயகன் ஆகி, இன்றளவுக்கும் தொடர்கிறது. ஓவர் பில்டப் ஒர்க் அவுட் ஆகாது என்பதால் (இதற்கும் அவரது படங்களை உதாரணம் காட்டலாம்), உலக நாயகனின் ‘உத்தமவில்லன்’ படம் குறித்த நமது கட்டுரையை நேரடியாகவே துவக்கி விடலாம்... சரிதானே?

சேர நாட்டின் தெய்யம் என்கிற நாட்டுப்புற கலையை கூத்துக் கட்டி ஆடுகிற கலைஞனாக, முகமெல்லாம் வண்ணக்கலவை ஒப்பனை செய்து கொண்டு கடந்த வருடம் உத்தமவில்லன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை கமல் வெளியிட்ட போதே பற்றிக் கொண்டது பரபரப்பு. அதுகுறித்து ‘பூனைக்குட்டி’ அப்போதே ஒரு கட்டுரை வெளியிட்டு (காப்பி ஹாசன்) கவனம் ஈர்த்தது நினைவில் இருக்கலாம். ஆக, ஒரு மாறுபட்ட படம், புதிய விஷயத்தை அறிமுகம் செய்கிற படம் என்கிற அளவில் உத்தமவில்லனுக்கு நிறைய எதிர்பார்ப்பு இருந்தது உண்மை. சினிமாக்களில் அதிக நாட்டம் இல்லாத பூனை கூட, தெய்யம் பற்றி தெரிந்து கொள்வதற்காக, படம் எப்போ வரும் என வழி மேல் வால் வைத்துக் காத்திருந்தது.


மே1 ரிலீஸ் தேதி அறிவித்து, ஏகப்பட்ட இழுபறி, சர்ச்சைகளுக்குப் பிறகு மறுநாள் படம் வெளியானது. உடனடியாக சென்று பார்க்கிற வாய்ப்பு கிடைக்கவில்லை. 1ம் தேதி வெளியான திரைப்படத்தை 9ம் தேதிதான் பார்க்கிற பாக்கியம் (!?) கிட்டியது. இடைப்பட்ட நாட்களில் பிரபல நாளிதழ்கள், வார இதழ்கள், இணைய பத்திரிகைகளில் உத்தமவில்லன் விமர்சனங்களை ஒன்று விடாமல் படித்துப் பார்த்தது பூனை. யாரும் அப்படி ஒன்றும் மோசமாக எழுதவில்லை. பிரபல வார இதழ் 42 மதிப்பெண்கள் கொடுத்து சபாஷ் போட்டிருந்தது. அப்புறம் என்ன... இன்னுமா டிக்கெட் எடுக்கலை என்று மனச்சாட்சி பிறாண்டியது. கிளம்பி விட்டது பூனை!

மே 9ம் தேதி மாலையில் இரண்டரை மணிநேரம்  பூனையின் பொழுது உத்தமவில்லனோடு  கழிந்தது. அந்த இரண்டரை மணிநேரத்துக்குப் பிறகு, தலைமுடியை லேசாக பிய்த்து உதிர்த்துக் கொண்டே தியேட்டரை விட்டு வெளியே வந்த பூனைக்குட்டியின் கேள்விகள், சந்தேகங்களின் தொகுப்பை உங்கள் பார்வைக்கு... பூனையின் குரலில் அப்படியே இங்கே பதிவு செய்கிறோம்.

படத்தின் ஒன் லைன் ஸ்டோரி:
பிரெய்ன் டியூமர் வந்து, நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் பலே மஜாவான, சூப்பர் ஸ்டார் நடிகர், தனது காலத்துக்குப் பிறகும் உலகம் தன்னை நினைவில் வைத்திருப்பது போல கட்டக்கடைசியாக ஒரு படத்தை  உருவாக்குகிறார். அதான் உத்தமவில்லன் (படத்துக்குள் படம்).

பூனையின் ஒன் லைன் கருத்து:
இப்படி ஒரு படம் தயாரித்து வெளியிட்டால், செத்தும் கெடுத்தான்யா... என்று பொதுமக்கள் புழுதி வாரித்தான் தூற்றுவார்களே தவிர, தலையில் வைத்துக் கொண்டு கரகம் ஆடமாட்டார்கள்.

நாளிதழ், வார இதழ்கள் ‘ஆஹா.. ஓஹோ...’ என்று ஆளுயுர மாலை சூட்டுகிற அளவுக்கெல்லாம் படம், நிச்சயமாக இல்லை. ஒருவேளை பூனையின் ரசிப்புத் திறன் தான் மங்கி விட்டதா; கலாரசனை குறைந்து விட்டதா... தெரியவில்லை. படத்தை நீங்களும் பாருங்கள். படம் முடிந்து வெளியேறுகையில் பூனையின் கட்சியில் உறுப்பினர் கார்டு போட்டு விடுவீர்கள் என சத்தியமடிக்கிறேன்.

லக நாயகன் சார் மிகத் தேர்ந்த நடிகர் என்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்து இருக்கமுடியாது. இன்னும் சொல்லப்போனால், இன்றிருக்கிற இந்திய நடிகர்களில், அவருக்கு மிகச் சிறப்பான இடம் உண்டு. சரி. ஒரு படத்தின் வெற்றிக்கு வெறும் நடிப்புத் திறன் மட்டுமே போதுமா? போதும் என்றால், நாயகன் படத்தில் அவர் வினோதமாக ஒலி எழுப்பிய படி அழுவாரே, குணா படத்தில் டாக்டரிடம் பேசியபடியே சுவற்றில் முட்டிச் சாய்வாரே, மகாநதி படத்தில் பாரதி கவிதை உச்சரித்த படியே கையை துண்டித்துக் கொள்வாரே... இப்படிக் காட்சிகளாக தொகுத்து திரையிடலாமே? அதெல்லாம் டிவி நிகழ்ச்சிக்கு சரிப்படுமே தவிர... திரையரங்கிற்கு சரிவராது.

திரையரங்குகளில் ஒரு படம் ஓட வேண்டுமானால், கோடிகளைக் கொட்டி எடுத்த விநியோகஸ்தர்களும், லட்சங்களை முதலீடு செய்யும் தியேட்டர்காரர்களும் தப்பிப் பிழைக்கவேண்டுமானால், நடிப்புக்கும் மேலாக ஒன்று தேவைப்படுகிறது. அந்த ஒன்று... கதை. நல்ல கதை, அதை மக்கள் ரசிக்கிற விதத்தில் உருவாக்கி வழங்குதல் - இதுதான் ஒரு படத்தின் வெற்றிக்கு அடிப்படையான தேவைகள்.

த்தமவில்லன் படத்தின் கதையெல்லாம் சரிதான். அந்தக் கதையை உருவாக்கிய, திரையாக்கம் செய்த விதத்தில், படம் பார்க்க வருகிற மக்களின் கழுத்தில் கயிறைக் கட்டி  தூணில் தொங்க விட்டு விடுகிறார்கள். நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிற ஒரு ஹீரோவைப் பற்றிய கதை. திரையில் அவனது கண்ணீரைப் பார்க்கிற ரசிகன், தானும் கண்ணீர் வடிக்கவேண்டும். அங்காடித் தெரு என்று ஒரு படம். வணிக நிறுவனத்தில் பணிபுரிகிற இளம்பெண், ஏமாற்றத்தின் வலி தாங்காமல், பல அடுக்குமாடி கடையின் மேல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வாள். அந்த நிமிடத்தில் இடைவேளை கார்டு போடப்பட்டு, வெண்திரையில் ஒளி அடங்கும்.

ந்தப் படத்துக்கு பூனையும் போயிருந்தது. வழக்கமாக இடைவேளை நேரத்தில் பாப்கார்ன், ஐஸ்கிரீம்களை ஒரு கை பார்க்கிற பூனைக்குட்டி, அந்தக் காட்சி தந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல், இருக்கையிலேயே ஆழப் புதைந்து அமிழ்ந்து கிடந்தது. சில நிமிட சுதாரிப்புக்குப் பிறகு அக்கம் பக்கம் திரும்பிப் பார்க்க... தியேட்டருக்கு வந்திருந்த பல நூறு ரசிகர்களும் காட்சி தந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் பிரமித்திருந்தனர்.

ரு சினிமாக் கலைஞனின் வெற்றி அது. திரையில் பிம்பங்கள் உணருகிற, வெளிப்படுத்துகிற வலியை, எதிரே நாற்காலியில் அமர்ந்து பார்க்கிற ரசிகனின் மனதுக்கு கடத்தவேண்டும். பிம்பங்களின் வலியை, ரசிகன் அனுபவித்து கண்ணீர் வடிப்பானேயானால்... படம் சக்சஸ். திரைக்கும், ரசிகனுக்குமான இடைவெளியை இல்லாமல் செய்கிறவன் மகா கலைஞன். கதாபாத்திரங்களின் வலியை, படம் பார்க்கிறவரின் மனதுக்கு கடத்தி கண்ணீர் விட வைத்ததன் மூலம்... தமிழ் சினிமாவின் உன்னதமான படங்களில் ஒன்றாக அங்காடித் தெரு இடம் பிடித்தது.

த்தமவில்லன் படத்தில் மரணத்தின் பிடியில் தத்தளிக்கிற மனோரஞ்சன் கதாபாத்திரத்தின் வேதனை, படம் பார்க்கிறவர்களிடம் பெரிதாக எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. படம் முடிந்து தேம்பி அழுத படியே யாரும் திரும்பிப் போனதைப் பார்க்க முடியவில்லை. உலக நாயகனின் ஆளவந்தான் படத்திலும் இதேதான் நடந்தது. அந்தப் படத்தில் வில்லன் போல வருகிற இரண்டாவது கமல்ஹாசனின் பரிதாப பின்புலமோ, அவரது சோக முடிவோ படம் பார்க்கிற ரசிகனை கண்ணீர் சிந்த வைக்கிற அளவுக்கு பலமானதாக இல்லை. விளைவு...? ஆளவந்தான் மக்களால் நிராகரிக்கப்பட்டது. உத்தமவில்லனுக்கும் அதே நிலைதான். சோக காட்சிகள்... துரதிர்ஷ்டவசமாக சோகத்தைத் தரவல்லதாக இல்லை.

சோகக்காட்சிகள் சோகம் தரவில்லை. சரி, சிரிப்புக் காட்சிகள்?
தனது மரணத்துக்குள் படம் தயாரிக்கிற முயற்சியில் இறங்கியிருக்கிற சூப்பர் நடிகர் மனோரஞ்சன், அந்தப் படத்தை ரசிகர்கள் குலுங்கி குலுங்கிச் சிரிக்கிற அளவுக்கு பிரமாதமான காமெடிப் படமாக தயாரிக்கிறார். அதுதான் உத்தமன் என்கிற தெய்யம் கலைஞன் பாத்திரம். படத்தின் பெரும்பான்மையான நேரத்தை அந்தக் காட்சிகள்தான் ஆக்கிரமிக்கின்றன. சிரிப்புக் காட்சிகளைப் பார்த்து ரசிகர்கள் குலுங்குகிறார்களா என்றால்... இல்லை. குமுறுகிறார்கள்.

ரு இருபது வருடங்களுக்கு முன்பாகவே தமிழ் சினிமா ரசிகர்கள் சிரித்துத் தீர்த்து விட்ட காட்சிகளைத் தான் காமெடி என்று இப்போது காட்டுகிறார் உலக நாயகன். புலியின் வாலைப் பிடித்துக் கொண்டே புலியைத் தேடுவது, கண்ணை மூடு என்றதும் ஹீரோயின் கண்களை மூடப் போவது, விலாவில் உதை என்றதும், ஹீரோயினை உதைக்க வருவது என்று, கமல் சார்... இதெல்லாம் எந்தக் காலத்து காமெடி? தமிழ் சினிமா ரசிகனின் ரசிப்புத் தன்மை எப்படி மாறியிருக்கிறது என்று நீங்கள் அப்டேட் பண்ணிக் கொள்ளவே இல்லை என்று தெரிகிறது. நடப்பு யதார்த்தம் தெரியாமல் காட்சிகளை நீங்கள் கையாண்டிருப்பதன் மூலம்... உத்தமவில்லனில் சோகக்காட்சிகளின் போது சிரிப்பும், சிரிப்புக் காட்சிகளின் போது அழுகையும் ரசிகர்களிடம் பார்க்க முடிகிறது.


த்தமன் என்கிற தெய்யம் கலைஞன் காட்சிகளைப் பார்க்கும் போது, வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் ஞாபகத்துக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அந்தப் படத்தில் வடிவேலுவும், அவரது அரசவை பட்டாளங்களும் அடித்த காமெடியில் ஒரு ஐந்து சதவீதத்தைக் கூட கமல்ஹாசனால் உத்தமன் பாத்திரத்தில் தரமுடியவில்லை. நாசரும், அவரது மந்திரி பிரதானிகளும் சிரிப்புக் காட்டுகிற போது சிரிப்பு வரவில்லை. எரிச்சல்தான் வருகிறது. உத்தமனாக கமல்ஹாசனுக்குப் பதில் வடிவேலு நடித்திருந்தால் கூட ரசிகர்களை ஈர்த்திருக்கும். உண்மையில், இந்தப் படத்தில் தெய்யம் கலைஞனாக கமல்ஹாசனின் உழைப்பு மிக நேர்த்தி. அவர் தவிர யாரும் இந்தளவு செய்திருக்க முடியாது. மிகத் தேர்ந்த நடிப்பு; இணையற்ற உழைப்பு. என்ன பயன்? எல்லாம் வீண்.

எதனால் இந்தப் பிரச்னை...?

விஷயம் ரொம்ப சிம்பிள். படுமோசமான ஒரு திரைக்கதை, படத்தின் விறுவிறுப்பை கபளிகரம் செய்து விட்டது. கமல் நல்ல நடிகர். என்றால், நடிக்கிற வேலையை மட்டும் செய்து விட்டு ஒதுங்கிக் கொள்வதுதானே சரியாக இருக்கும்? திரைக்கதை விறுவிறுப்பாக எழுதித் தருவதற்குத்தான் எக்கச்சக்கம் பேர் இருக்கிறார்களே? தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நகைச்சுவை என்பது நிறைய மாற்றம் கண்டுவிட்டது. பழைய காலத்து ‘கடி’ காமெடிகள் இன்றைக்கு உதவாது. உலகமறிந்த உலக நாயகனுக்கு இது தெரியாமல் போனது எப்படி? தமிழ் சினிமா ரசிகனின் ரசிப்புத்திறன் என்ன என்பது குறித்த அப்டேட்டட் வெர்ஷனை தனது மூளைக்குள் உலக நாயகன் இன்ஸ்டால் செய்து கொள்ளாததுதான் அடிப்படை பிரச்னை.

றைந்த பாலச்சந்தரை நடிக்க வைத்து புதுமை செய்திருக்கிறார் உலக நாயகன். அவர் அடிக்கடி சறுக்குகிற இடம் இதுதான். நடிக்க வேண்டிய உலகநாயகன் திரைக்கதை எழுதுகிறார். அந்த வேலையை வெகு சிறப்பாகச் செய்யக்கூடிய பாலச்சந்தரை நடிக்க வைத்திருக்கிறார். நடிக்க அழைத்ததற்குப் பதிலாக, இயக்க அழைத்திருந்தால்... ஒருவேளை இந்தப் படம் தப்பித்திருக்கும். பாராட்டக்கூடிய அளவில் ஒரு விஷயம் இருக்கிறது என்றால்... மசாலா குப்பைகளை குவித்து தமிழ் சினிமா ரசனையை கெடுத்துக் கொண்டிருக்கிற லிங்குசாமியை (அவர்தான் தயாரிப்பாளராம்!) இந்த ஒரே படத்தின் மூலம் மூச்சுத் திணற வைத்திருக்கிறார் உலக நாயகன்.

ந்த விஷயத்தில் உச்ச நட்சத்திரத்திடம் இருந்து உலக நாயகன் கற்றுக் கொள்வதற்கு சில பாடங்கள் இருக்கிறது. தனது பலம் எது, பலவீனம் எது என்று நன்றாக புரிந்து வைத்திருப்பவர் உச்ச நட்சத்திரம். நடிக்கிற வேலையைத் தவிர்த்து கதை எழுதுகிறேன், வசனம் எழுதுகிறேன் என்று அவர் போகமாட்டார். இப்போது கூடப் பாருங்கள்... அட்டக்கத்தி, மெட்ராஸ் என்று இரண்டே படங்கள் மட்டுமே எடுத்த இளம் இயக்குனர் ரஞ்சித்தை அழைத்து, தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார். ஷங்கர் மாதிரியான இன்றைய இளைய தலைமுறையின் பல்ஸ் தெரிந்த இயக்குனர்களிடம் இணைந்து பணியாற்றுகிறார். மீண்டும், மீண்டும் ஜெயிக்கிறார்.

ஞ்சித் மாதிரியான இளைய தலைமுறை இயக்குனர்களுக்கு இன்றைய தலைமுறையின் ரசனை என்ன என்பது குறித்த தெளிவான புரிதல் இருக்கும். இன்றைய ரசிகர்கள் என்ன மாதிரியான காமெடியை ரசிப்பார்கள், அவர்களை எமோஷன் ஆக்குவதற்கு எப்படி காட்சி அமைக்கவேண்டும் என்கிற சூட்சுமம் அவர்களிடம் இருக்கும். கடந்த தலைமுறை சரக்கை மூளையில் சேகரித்து வைத்திருப்பவர்களுக்கு அது சாத்தியப்படாது. நேர்மையாக சொல்லவேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. 60 வயதை எட்டி விட்ட உலகநாயகன், 20 வயது கதாநாயகிகளுடன் இன்னமும் நீண்டகாலத்துக்கு டூயட் பாடிக் கொண்டிருக்க முடியாது. ரசிகர்கள் ஒதுக்கி விடுவார்கள்.  நிலைமை புரிந்து, திறமையான இளம் இயக்குனர்களுடன் கைகோர்த்தால் மட்டுமே... தப்பிக்கமுடியம்!

துபோன்றி சினிமாக்களில் முக்கியமான மற்றொரு விஷயம் பின்னணி இசை. திரையின் சோகத்தை மனதுக்குள் கூர்மையான கத்தி பாய்வது போல ஊடறுத்துக் கொண்டு பின்னணியில் இருந்து பாய்ச்ச வேண்டும். வெளியில் வந்ததும் ஈஎன்டி ஸ்பெஷலிஸ்ட்டை சந்திக்க வேண்டிய அளவுக்கு டிரம்ஸை மடார்.. மடார் என அடித்து காதுகளை டார்ச்சர் படுத்தியிருக்கவேண்டாம்.

டம் முடிந்து திரும்புகிற போது பக்கத்தில் வந்தவரிடம் கேட்டேன். ‘படத்தோட டைரக்டர் யாருங்க?’ சிறிதுநேரம் யோசித்து விட்டு சொன்னார். ‘ரமேஷ் அரவிந்த் சார்....’. தமிழகத்துக்கு எதிராக கர்நாடக சினிமாக்காரர்கள் நடத்துகிற ஒவ்வொரு போராட்டத்தின் போதும் முதல் வரிசையில் அமர்ந்து, தமிழகத்தை எதிர்த்து படு உக்கிரமாக கோஷம் போடுவாரே... அதே ரமேஷ் அரவிந்த்! மேகதாது, காவிரி என்று இப்போது கர்நாடகத்துடன் நிறைய பிரச்னைகள் இருக்கிறது. மனதுக்குள் இருக்கிற அத்தனை பகையையும் சேர்த்து வைத்து, தமிழகத்தையும், தமிழர்களையும் பழிவாங்க உத்தமவில்லனை சரியான வாய்ப்பாக பயன்படுத்தி விட்டாரோ!

- பூனைக்குட்டி -

4 கருத்துகள்:

  1. பெயரில்லா12 மே, 2015 அன்று AM 11:52

    உண்மைதான். ர«ஷ் அரவிந்தை நடிக்கவும், பாலசந்தரை இயக்கவும் வைத்திருந்தால் படம் ஒடியிருக்கும்.
    ரஞ்சன், வள்ளியூர்.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா12 மே, 2015 அன்று PM 1:50

    மனதுக்குள் இருக்கிற அத்தனை பகையையும் சேர்த்து வைத்து, தமிழகத்தையும், தமிழர்களையும் பழிவாங்க உத்தமவில்லனை சரியான வாய்ப்பாக பயன்படுத்தி விட்டாரோ!

    Super

    பதிலளிநீக்கு
  3. பூனையின் ரசிகன்12 மே, 2015 அன்று PM 5:14

    இந்த வயதிலும் கமல் உடலை வளைத்து ஆடுவது உருக்கம் ... தன் அப்பாவான கமலிடம் நான் உங்க மாதிரி இல்லை என்று சொல்லும் போது மகளின் உடல் மொழி தன் அப்பா போன்று இருப்பதை மறைக்க முயலும் காட்சி சிறப்பு.. விமர்சனம் காரமாக உள்ளது இனிப்புக்காகவாது படத்தின் சில நல்ல காட்சிகளை குறிப்பிட்டுருக்கலாம்

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா13 மே, 2015 அன்று AM 11:27

    ரவிசங்கர், கலையமுத்தூர்:
    குறைகள் இருக்கிறது. உண்மைதான். நீங்கள் சொல்வதெல்லாம் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், இந்தளவு ரிஸ்க் எடுத்து படம் பண்ணக்கூடிய ஒரு நடிகரைக் காட்டுஙங்கள். வெறும் மசாலா படமாக எடுத்து தள்ளினால் திருப்தியா?

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...