திங்கள், 11 மே, 2015

மாமன்னா... நீ ஒரு மாமா மன்னா!

வாழ்க்கைக்கு மட்டுமல்ல... வார்த்தைக்கும் இடைவெளி அவசியம். சேரவேண்டிய இடத்தில் சேர்ந்தும், பிரிய வேண்டிய நேரத்தில் பிரிந்தும் இருக்காவிட்டால்... அர்த்தம் கெட்டு விடும். அதிகம் குழப்பிக் கொள்ளவேண்டாம். 25வது வாரத்தை முடிக்கும் போது, ‘அணிவகுப்பு’ பார்த்தோம். அணிவகுப்பு என்று சேர்த்தால், பேரணி, ஊர்வலம். அணி வகுப்பு என்று பிரித்தால் அணி இலக்கணம் கற்றுக் கொள்கிற வகுப்பு. இல்லையா?

‘காலையில் பள்ளிவாசலுக்குப் போனேன்’ என்று நீங்கள் சேர்த்து எழுதினால், ‘அப்படியா, லொஹர் தொழுகை முடிஞ்சதா?’ என்று கேட்பார்கள். ‘பள்ளி வாசலுக்குப் போனேன்’ என்று பிரித்து எழுதினால், ‘அங்க என்னங்க உங்களுக்கு வேலை? பையனை கொண்டு போய் கிளாஸ்ல விடறதுக்கா?’ என்று கேட்பார்கள்.
 பள்ளிவாசல், பள்ளி வாசல்... இரண்டுமே ஒழுக்கம் கற்றுத் தருகிற இடங்கள் என்றாலும் கூட, நாம் குறிப்பிடுவது எந்த இடம் என்பதை இடைவெளி மட்டுமே தீர்மானிக்கும். ‘இன்றுமுதல் போட்டி துவங்குகிறது...’ என்பதற்கும், ‘இன்று முதல் போட்டி துவங்குகிறது’ என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளமுடிகிறதா?

கருங்குரங்கை பிரிக்கலாமா?

சேர்ப்பதற்கும், பிரிப்பதற்கும் கூட நெறிமுறைகள் வகுத்திருக்கிறது தமிழ் இலக்கணம்.
* முதற்சொல்லின் கடைசி எழுத்து புள்ளி வைத்ததாக இருந்தால் பிரிச்சிடுங்க (காவியத் தலைவன், நச்சுப் பாம்பு).
* முக்காலமும் பொருந்துகிற வினைத்தொகையாக இருந்தால்... பிரிக்கப்படாது (சுடுநீர், ஆடுகளம்).
* குணம், நிறம் போன்ற பண்புகளைக் குறிக்கிற சொல் (பண்புத்தொகை) மறைந்திருந்தால், பிரிக்க தடா (கருங்குரங்கு, வெறிநாய்).


* பொதுப்பெயரும், சிறப்புப் பெயரும் சேரும் போது பிரிக்கவே கூடாது பாஸ் (தென்னைமரம் - மரம் என்பது பொதுவான பெயர். தென்னை என்பது சிறப்புப் பெயர்)
 * இரு சொற்களுக்கு இடையே ‘உம்’ என்கிற பதம் மறைந்து நிற்குமாயின்... பிரிக்காதீங்க (செடிகொடி - செடி(யும்) கொடி(யும்), ஆடுமாடு - ஆடு(ம்) மாடு(ம்).
* இரட்டித்து வருகிற எழுத்துகள் சேர்த்தே எழுதப்படவேண்டும் (முத்துமுத்தாக, திரும்பத்திரும்ப, மளமளவென)
- இந்த அளவுக்கு ‘சேர்க்க - பிரிக்க’ விதிகள் போதும். ‘அணி’ காத்திருக்கிறது.

பச்சைபோர்டு கூப்பிடுதா?

அணிகளில் ரொம்ப இன்ட்ரஸ்டிங், தற்குறிப்பேற்ற அணி. நம்மவர்கள் பேசும்போது அடிக்கடி பயன்படுத்துகிற அணிகளில் இதுவும் ஒன்று. இயல்பான ஒரு விஷயத்தில், தனது சொந்தச் சரக்கை சேர்த்து பேசுவது த.கு. அணி. ‘எனக்கு விருப்பமே இல்லைடா. கடையோட போர்டு பச்சைக்கலர்ல கிரீன் சிக்னல் காமிச்சி கூப்பிட்டதாலதான் போனேன்...’ என்று உங்கள் நண்பர் தள்ளாடிய படியே சொன்னால், தற்குறிப்பேற்ற அணியை தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறார் என்று அர்த்தம். இலக்கியமாக ஒரு உதாரணம் பார்க்கலாம். சிலப்பதிகாரத்தில் (தெரியுமில்லையா?) கண்ணகியும், கோவலனும் மதுரைக்கு வருகிறார்கள். அந்த காட்சியை வர்ணனைப்படுத்தும் போது,
‘‘போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட...’’ - என தற்குறிப்பேற்றுகிறார் இளங்கோவடிகள்.
அதாவது, கண்ணகியும், கோவலனும் மதுரை நகருக்குள் நுழைகின்றனர். அப்போது, மதில் சுவரில் இருந்த மீன் கொடிகள் இயல்பாக காற்றில் ஆடுகின்றன. இளங்கோ சார் என்ன சொல்கிறார் என்றால், ‘அந்தக் கொடிகள் கண்ணகி, கோவலனை வரவேண்டாம்... வரவேண்டாம் இடதும், வலதுமாக ஆடி எச்சரித்தன’ என்று பதிவு செய்கிறார். இதுதான் த.கு. அணி. மனம் போல இந்த அணியில் விளையாடலாம்.

டிரெஸ் சூப்பர்டீ!

அடுத்து, வஞ்சப்புகழ்ச்சி அணி. இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் பார்த்திருக்கலாம். ‘மாமன்னா... நீ ஒரு மாமா மன்னா. நீ ஒரு மொள்ளமாறி. முடிச்சவுக்கி. மூடா. புண்ணாக்கு. அண்டங்காக்கையே...’ என்று அம்பு மீசை புலிகேசி மன்னனிடம், வம்பு பேசி வாங்கிக் கட்டிக் கொள்வார் பாலபத்ர ஓணாண்டி புலவர். இதுதான் சார் வஞ்சப்புகழ்ச்சி அணி. உயர்வாக பேசுவது போல பள்ளத்தில் தள்ளுவதும், கேவலப்படுத்துவது போல, தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதும் இந்த அணி செய்கிற வேலை.

புலிகேசியை ‘மாமா மன்னா, மொள்ளமாறி, முடிச்சவுக்கி, மூடா, புண்ணாக்கு...’ என்றெல்லாம் கேவலப்படுத்தி விட்டு, பிறகு, அதே வார்த்தைகளுக்கே ‘ஆஹா... ஓஹோ...’ அர்த்தங்கள் கொடுக்கிறார் புலவர். அது ஏற்றுக் கொள்ளும் படியாகவும் இருக்கிறது இல்லையா? நீங்கள் கூட, உங்கள் தோழர் / தோழியை இந்த வ.பு. அணியைப் பயன்படுத்தி பலமுறை படுத்தி எடுத்திருப்பீர்கள். ‘இந்த டிரெஸ் உனக்கு சூப்பரா இருக்குடி. என் கண்ணே பட்டுரும் போல இருக்கு. வீட்டுக்கு போனதும் சுத்திப் போட்டிரு...’ என்று தோழி சொல்லும் போது, அவரது முகத்தில் கேலி, கிண்டல் ரேகைகள் ஓடுகிறதா என ஒருமுறைக்கு இருமுறை பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள். ஒருவேளை அது வஞ்சப்புகழ்ச்சி அணியாகக் கூட இருக்கலாம்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...