திங்கள், 20 ஏப்ரல், 2015

அரிவாள்களால் சாதித்ததென்ன?

லிகளின் உச்சம், உடலில் அல்ல... மனதில் இருக்கிறது. உடல் காயங்களைக் காட்டிலும், மனக்காயங்கள் தருகிற பாதிப்பு, வலி ஒப்பீட்டளவில் அதிகம்; மிக அதிகம். காயப்பட்டவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும். உடல் காயத்துக்கு மருந்து இருக்கிறது. மனக்காயங்களுக்கு..? காலம்தான் மருந்தென்பார்கள். உண்மைதான். அடித்துக் கொண்டு ஓடுகிற ஆற்று வெள்ளம், பாறையின் வடிவத்தை மாற்றி விடுகிறதைப் போல...!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, இரு பெண் குழந்தைகள். அளவான, நிறைவான குடும்பம்.
விடுமுறை தினத்தின் வடிவில் வினை வந்தது. அருகே ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கம் இருக்கிற செண்பகத்தோப்பு அருவிக்கு குடும்பத்துடன் குளிக்கப் போனார்கள்.


விடுமுறையைக் கொண்டாட, அதே ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இருந்து ஒரு வாலிபர் பட்டாளமும் அருவிக்கு வந்திருந்தது. குளிக்கும் போது வாலிபப் பட்டாளத்துக்கும், இந்தக் குடும்பத்துக்கும் ஏதோ மோதல். வாலிபப் பட்டாளம் ‘உற்சாகத்தில்’ இருந்தது. செய்வது இன்னதென்று அறிய இயலாததொரு அபாய நிலை. வாக்குவாதம் முற்றியது. ஆத்திரத்தை தலைக்கேறச் செய்தது உள்ளுக்குள் இருந்த ‘உற்சாகம்’. கையில் இருந்த அரிவாளை எடுத்து வீசித் தள்ள... தலையிலும், முகத்திலும் வெட்டுக்காயங்கள் விழுந்து, சம்பவ இடத்திலேயே குடும்பத் தலைவனின் ஜீவன் அடங்கியது.

கண் முன்னால், கணவனைப் பறிகொடுத்த வேதனையில் கதறி அழுகிறார் மனைவி. நடந்தது என்னவென்று கூடப் புரிந்து கொள்ளமுடியாத நிலையில் இரு குழந்தைகளும். கைக்குழந்தைக்கு ஒன்றும் தெரியாது. புரியப்போவதும் இல்லை. அடுத்த குழந்தைதான் பாவம்.அதிர்ச்சி அதன் கண்களில் தெரிகிறது பாருங்கள். லீவில், ஜாலியாக, குடும்பத்தோடு, ஊர் சுற்ற வந்த இடத்தில், ரோட்டோரம் விற்ற வண்ணப் பாசியை வாங்கித் தந்த அப்பாவுக்கு இப்ப என்ன ஆச்சு? ரொம்ப நேரமாக ஆளைக் காணோமே? எங்கே போனார்? அவர் எப்ப வருவார்? எதுவும் தெரியவில்லை. தொண்டையை  அடைக்கிற துக்கத்துடன், பெரியவர்கள் பேசுவதும் புரியவில்லை.

பிஞ்சுக் கண்களில், முகத்தில் திகைப்பு, குழப்பம், அதிர்ச்சி, பயம்... அத்தனையும் தெரிகிறது பாருங்கள். அப்பா இனி வரவேமாட்டார் என்பதை அடுத்தடுத்த நாட்கள் அந்தக் குழந்தைக்கு உணர்த்தும். அப்போது, கழுத்தில் கிடக்கிற பாசிமணி... உலகின் மிக மதிப்பு வாய்ந்த பொக்கிஷமாக அந்தக் குழந்தைக்கு மாறும்!

அன்பான ஒரு குடும்பத்தில் மண் அள்ளிப் போட்டு விட்டது அரிவாள். யோசித்துப் பாருங்கள்... அந்தக் குழந்தைகளின் எதிர்காலம்? என்னென்ன கனவுகள் இருந்தனவோ? கலைத்து விட்டது பாழாய்ப்போன அரிவாள்.

தென்மாவட்டங்களில் இருக்கிற இளைஞர்களில் அஞ்சத்தக்க வகையில் மிக அதிகம் பேர் அரிவாள் கலாச்சாரத்துக்கு மிக நெருங்கியே இருக்கிறார்கள். கேடுகெட்ட தமிழ் சினிமாக்கள் முக்கியக் காரணம். அரிவாளுடன் திரிபவன் ஆண்மகன் என்ற விஷ விதையைப் பதித்து, உரமிட்டு, வளரவும் வைத்து விட்டது.
 சினிமா பிம்பத்தின் எதிரொலிப்புகள் இப்படியான விபரீதங்களுக்கு காரணமாக அமைந்து விடுகிறதை யாரும் மறுத்துப் பேசி விடமுடியாது.

மீண்டும் ஒருமுறை பிஞ்சு முகத்தைப் பாருங்கள்.... வளர்ந்தப் பிறகு இந்தக் குழந்தை நம்மை நோக்கிக் கேட்கிற ஒரு கேள்வி, யாரும் பதிலளிக்க முடியாதபடிக்கு இருக்கும்...
‘‘வன்முறையாளர்களே, எதை சாதிக்க நீங்கள் அரிவாள்களை தூக்கிக் கொண்டு அலைகிறீர்கள்...?’’
- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

2 கருத்துகள்:

  1. வாயினுள் சென்ற "உற்சாக அரிவாள்" தான் முக்கிய காரணம்... பாவிகள்...

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா9 மே, 2015 அன்று AM 11:14

    குழந்தை முகம் மனதை உருக்குகிறது. சினிமா, மசாலா செய்திகளை ஒதுக்கி விட்டு சமுக சிந்தனையுடன் செய்தி வெளியிடும் உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன். பின்தொடர்கிறேன். குணா, திருப்பூர்

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...