ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

ஏய் நீ ரொம்ப அணியா இருக்க!

* ‘ஊர்ல மழை, தண்ணி எப்படி?’
‘போப்பா நீ வேற... மகா விஷ்ணுவைக் கூட பார்த்திடலாம்; மழையத்தான் பாக்க முடியலை!’
* ‘மாமு... தலைவன் படம் பார்த்தியே... எப்டி இருக்கு?’
‘கழுத்தில ரத்தம் வந்திருச்சி மச்சான்...!’
* ‘ஏண்டா... அந்தப் பொண்ணு அவ்வளவு அழகாடா?
‘என்னடா இப்டி கேட்டுட்ட? தேவதை மாதிரி இருப்பாடா?’
‘தேவதை மாதிரியா...?’
‘மாதிரி என்ன மாதிரி... தேவதையேதான்!’

- இதை மாதிரி லட்சக்கணக்கான / கோடிக்கணக்கான டயலாக்குகளை பேசியும், கேட்டும் வளர்ந்தவர்கள் நாம். இல்லையா? ‘ஆமாங்க... ஆமா’ என்று மேலும், கீழுமாக தலையை ஆட்டுவீர்களேயானால், நோட் தி பாயிண்ட்... இதுதான், இனி நாம் பார்க்கப் போகிற அணி இலக்கணம்.

ணி சேரும் முன்பாக, ஒரு தன்னிலை விளக்கம். நமது தொடர் குறித்து வரும் நிறைய கடித / தொலைபேசி அழைப்புகளை பார்க்கிற போது, தமிழ் மீது பேரன்பு கொண்ட நண்பர்களின் நியாயமான ஒரு கவலையை புரிந்து கொள்ளமுடிந்தது. அது, ஆங்கில கலப்பு. தமிழ் குறித்த தொடரில் ஆங்கிலச் சொற்கள் அதிகம் எதற்கு என்று ஆதங்கப்படுகிறார்கள். நியாயம்தான். ஆனால், இந்தத் தொடரின் துவக்க காலம் தொட்டே ஒரு விஷயம் தொடர்ந்து தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. ‘நம்மொழி செம்மொழி’ தொடர், இன்றைய இளைய / இணைய தலைமுறை இளைஞர்களுக்காக. வாசிப்பில் இருந்து விலகி வெகுதூரம் போய் விட்ட பதின்ம பட்டாளங்களை மீண்டும் வாசிப்பின் பால் திருப்பவும், அவர்களுக்கே உரித்தான எளிய, ‘கலகல’ நடையில் தமிழின் தொன்மை, இலக்கண சிறப்புகளைக் கொண்டு சேர்ப்பதும் மட்டுமே நோக்கமேயன்றி... ஆங்கிலத் திணிப்புக்கு வேறெந்தக் காரணமும் இல்லை. சத்த்த்த்தியம். இனி குறைத்து விடலாம். ரைட்டா... (மன்னிச்சுக்கோங்க) சரியா?!

ஏய் நீ ரொம்ப அணியா இருக்க!

இப்போ, அணிக்கு வரலாம். அணி என்ற சொல்லுக்கு தமிழில் அழகு என்பது பொருள். ‘ஏய் நீ ரொம்ப அணியா இருக்க...’ என்று நண்பர்கள் மத்தியில் பேசி, அவர்கள் ஏற, இறங்க உங்களைப் பார்த்தால்... நம்மொழி செம்மொழி தொடர் பொறுப்பல்ல. செய்யுளில் உள்ள அழகு பற்றிக் கூறுவது அணி இலக்கணம். அணிகளில் முக்கியமானது உவமை. ‘மயில் போல பொண்ணு ஒண்ணு... குயில் போல பேச்சு ஒண்ணு...’ என்று இளையராஜா பாடல் கேட்டிருப்பீர்கள். அது போல, இது போல என்று நான்கடிக்கு உயர்த்தி வைத்துப் பேசினால் அது உவமை.
மயில் போல பொண்ணு பாடல் வரியை எடுத்துக் கொள்ளுங்களேன். மயில் என்பது இங்கு உவமை. பொண்ணு என்பது பொருள் (Subject). மயில் என்ற உவமையையும், பொண்ணு என்கிற பொருளையும் இணைப்பதற்காக ‘போல’ என்கிற ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். அதற்கு உவம உருபு என்று பெயர். பொருளை உவமையுடன் இணைக்க உதவுகிற சொல் என்று அர்த்தம். அணி இலக்கணத்தை பொருள் அணி, சொல் அணி என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். உவமை அணி. உருவக அணி, வேற்றுமை அணி, நிரல்நிறை அணி, வேற்றுப்பொருள் வைப்பு அணி, பிறிதுமொழிதல் அணி என்று இதில் நிறைய கிளைகள் இருக்கின்றன.

இவற்றில், ஆகச் சிறந்தது உவமை அணி என்பது தமிழ் தேர்ந்த ஆசான்களின் கருத்து. உவமை அணி ரொம்ப சுலபமானது. எழுதுபவர் தனது எழுத்தில் மிகவும் சிறப்பித்துக் கூற விரும்புகிற ஒரு பொருளை, மக்களால் மிகவும் மதிக்கப்படுகிற மற்றொரு விஷயத்தோடு இணை வைத்து / ஒப்பிட்டுச் சொல்வது உவமை. சொல்லப்படுகிற பொருள், அதை உயர்த்திக் காட்டும் உவமை மற்றும் உவம உருபு ஆகியவை உவமை அணியில் இருக்கும். உவமை அணியில், பொருளைக் காட்டிலும் உவமை உயர்ந்ததாக இருப்பது மரபு. ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ என்று பாடினால் நல்ல உவமை. சபாஷ் என்று பாராட்டலாம். அந்தப் பொண்ணு எப்டி இருப்பா என்று கற்பனை செய்து பார்க்கத் தோணும். ‘கோட்டான் போல பொண்ணு ஒண்ணு...’ உவமை போட்டால்... பொண்ணு இருக்கிற திசைக்கே ஒரு கும்பிடு போடத்தானே தோணும்?

கிளி பேச்சு!

அணி இலக்கணம் பற்றி 12ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தண்டியலங்காரம் பிரமாதமாக விளக்குகிறது.
‘‘பண்பும் தொழிலும் பயனும் என்றிவற்றின்
ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்ந்து
ஒப்புமை தோன்றச் செய்வது உவமை...’’ என்கிறது தண்டியலங்காரம்.
அதாவது சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை, அந்தப் பொருளின் பண்பு, தொழில், பயன் ஆகியவற்றை மையமாகக் கொண்டு வேறு ஒரு விஷயத்துடன் ஒப்பிட்டுச் சொல்வது. கிளி போல பேசுதுப்பா... என்றால் பண்பு. பையன் குதிரை மாதிரி ஓடி உழைக்கிறான் என்றால் தொழில். மழை மாதிரி வாரி இறைக்கிறான் என்றால் பயன்.
எல்லாம் சரி. நட்சத்திரம், நட்சத்திரமாக போட்டு கட்டுரையின் ஆரம்பத்தில் மூன்று வாக்கியங்கள் பார்த்தோமே, அது என்னவாம்? ரசனை கொட்டும் உதாரணங்களுடன் உவமை, உருவக அணிகள் அடுத்தவாரம் கூடுதல் விரிவாக.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...