திங்கள், 13 ஏப்ரல், 2015

அடடா... என்னா ஸ்டைலு?!

ரு மொழி, சொற்களால் கட்டமைக்கப்படுகிறது. என்றாலும், அதற்கு இணையான முக்கியத்துவம் வாக்கியத்துக்கும் உண்டு. சொற்கள் இணைந்து பிறக்கிற வாக்கியம்தான், மொழியை முழுமைப்படுத்துகிறது. பேச்சு, எழுத்து என தகவல் தொடர்புகளுக்கான கருவியாக மொழியை மாற்றுவதில் வாக்கியத்தின் பங்கு பிரதானமானது. பொதுவாக வாக்கியங்களை நான்கு வகைகளுக்குள் அடக்கலாம். தமிழ் இதற்கு விரிவான இலக்கணம் வகுத்து வைத்திருக்கிறது. நம்மொழி மட்டுமல்ல... ஏனைய மொழிகளிலும் கூட, இந்த நான்கு பிரிவுகள் இருக்கின்றன. இது இல்லாமல் மொழி இல்லை. வாக்கியங்களின் வகைகள் நான்கையும் ஒரு எட்டு பார்த்து விடலாம், சரியா?

* செப்பு வாக்கியம் (Statement):
அவர்தாங்க சூப்பர் ஸ்டார். இது சிம்பிளான செப்பு வாக்கியம்.
* வினா வாக்கியம் (Question):
அவர் யார்? அவரா சூப்பர் ஸ்டார்?
* விருப்பு வாக்கியம் (Desire):
சூப்பர் ஸ்டார் வாழ்க!
* வியப்பு வாக்கியம் (Exclamation):
அடடா... என்னா ஸ்டைலு?!

விருப்பு வாக்கியம் இருக்கிறது பாருங்கள். அதில் மட்டும் தனியாக நான்கு பிரிவு இருக்கிறது. கட்டளை (Command), வியங்கோள் (Request), வேண்டுகோள் (Entreaty), விழைவு (Wish). வாக்கிய வகைகளின் அடிப்படைகள் தெரிந்து வைத்திருப்பது, மொழியை இன்னமும் ஆழமாக அணுகுவதற்கு உதவும். இனி, மெயின் சப்ஜெக்ட்டுக்கு போலாமா?

ஒரு தொடரின் அடுத்தடுத்த சொற்களில் முதல் எழுத்து அச்சு அசலாக அப்படியே ஒன்றாக இருந்தால் மோனை என்றும், இரண்டாம் எழுத்து ‘காப்பி - பேஸ்ட்’டாக இருக்குமானால் எதுகை என்றும் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தொடை இலக்கணத்தில், இந்த அடிப்படை தெரிந்திருந்தாலே ஓகே. அதையும் தாண்டி, பெரும் இலக்கியம் படைக்க இலக்கு வகுத்து செயல்படுகிற புலவர்ஸ்களுக்காக எதுகை, மோனை இரண்டிலும் உள்ள எட்டு வகைகள் குறித்து கடந்த வாரம் பார்க்க ஆரம்பித்திருந்தோம். எட்டில் ஐந்து முடிந்து விட்டது. மிச்சம் மூன்று இப்போது.

6) கீழ்க்கதுவாய் மோனை /
கீழ்க்கதுவாய் எதுகை (1 -  2 - 4)
* ஒரு அடியில் ஒன்று, இரண்டு, நான்காம் சொற்களின் முதல் எழுத்து ஒன்றாக இருந்தால்... சந்தேகம் வேண்டாம். அதுதான் கீழ்க்கதுவாய். (மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி - ம / ம / இ / ம)
* ஒரு அடியின் ஒன்று, இரண்டு, நான்காம் சொற்களில் இரண்டாம் எழுத்து ஒன்றாக இருந்தால் கீழ்க்கதுவாய் எதுகை (செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் - ல் / ல் / வி / ல்)
7) மேற்கதுவாய் மோனை / மேற்கதுவாய் எதுகை (1, 3, 4)
* ஒன்று, மூன்று, நான்காம் சொற்களில் வருகிற மோனைக்கு இப்படி பெயர் (அரும்பும் இனிமையும் அதன்வழி அணிகொளும் - அ / இ / அ / அ)
* ஒன்று, மூன்று, நான்காம் சொற்களில் எதுகை வந்தால், அது மேற்கதுவாய் (கற்க கசடற கற்பவை கற்றப்பின் - ற் / ச / ற் / ற்)

8) முற்று மோனை / முற்று எதுகை (1, 2, 3, 4)
* ஒரு அடியின் நான்கு சீர்களிலும் முதல் எழுத்து ஒன்றாக வந்தால், அதுதாங்க மு.மோ. (கற்க கசடற கற்பவை கற்றப்பின் - க / க / க / க)
* ஒரு அடியின் நான்கு சீர்களிலும் இரண்டாம் எழுத்து ஒன்றாக வந்தால் மு.எ. (துப்பார்க்குத் துப்பாயத் துப்பாக்கி துப்பார்க்கு - ப் / ப் / ப் / ப்) துப்பார்க்குத்... திருக்குறளை முற்று மோனைக்கும் உதாரணம் சொல்லலாம். தப்பில்லை.

- எதுகை, மோனை சப்ஜெக்ட் இத்தோடு ஓவர். அடுத்துக் காத்திருக்கிறது அணி இலக்கணம். இதை பயன்படுத்தாமல் பேச்சே இல்லை. நமது அன்றாக பேச்சுக்களில் அணி இலக்கணம் சும்மா புகுந்து விளையாடும். எப்படி? அது, அடுத்த வாரம்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...