சனி, 4 ஏப்ரல், 2015

எதுகை, மோனை எத்தனை வகை?

தொடை இலக்கணம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே திடீரென இல்பொருள் உவமை அணி கடந்த வாரம் ‘கிராஸ் டாக்’ ஆனது.

அதென்ன  இல்பொருள் என்று நண்பர்கள் தொலைபேசினர். உவமை அணி, உருவகங்கள் பற்றி அடுத்த வாரங்களில் விரிவாக பார்க்க வேண்டியிருக்கிறது.

என்றாலும், ஒரு சின்ன டீஸர்.


ல்லாத பொருளை உவமையாகக் கூறி ஒரு விஷயத்தை விளக்குவது இல்பொருள் உவமை அணி. மகனுக்கு பெண் பார்த்து விட்டு வீட்டுக்கு  வருகிறார் அம்மா. போட்டோவை மகனிடம் காண்பித்து ‘பொண்ணு... மகாலட்சுமி மாதிரி இருக்கா பாருடா...’ என்கிறார். அப்டியே ‘கட்’  பண்ணி விட்டு அடுத்த சீனுக்கு போகலாம். பையன், நண்பர்கள் வட்டத்தில் உட்கார்த்திருக்கிறான். ‘ஃபோட்டோ பாத்தியா...? பொண்ணு  எப்படிரா மாப்ள?’ நண்பர்கள் கொக்கி போடுகிறார்கள். ‘விடு மச்சான்... சோகத்தில இருக்கேன். பொண்ணு, பேய் மாதிரி இருக்கா...’ -  புலம்புகிறான் பையன்.

சண்டைக்கு வராதீங்க!

படிக்கிற தோழிகள் சண்டைக்கு வரவேண்டாம். நீங்கள் வேண்டுமானால், பையனை பொண்ணாக மாற்றிப் படித்துக் கொள்ளலாம், தப்பில்லை.  மேட்டர் இதுதான். சாமி மாதிரி இருப்பதாக அம்மா சொல்கிறார். பேய் மாதிரி இருப்பதாக பையன் சொல்கிறான். இறைமறுப்பு கோட்பாடுடைய தோழர்களைப் பொருத்தவரை, அவர்களுக்கு சாமியும் இல்லை. பூதமும் இல்லை. அவர்களிடம் கேட்டால், ‘மகாலட்சுமி மாதிரி, பேய் மாதிரி... உவமை எல்லாம் ஹம்பக் தோழர். இல்லாத விஷயத்தை உதாரணம் காட்டறதால, இது இல்பொருள் உவமை அணி’ என்பார்கள்.  உயர்வுநவிற்சி அணி என்று ஒரு பிரிவு இருக்கிறது. இதையும், அதையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. நம்ம சினிமா ஹீரோக்கள் போல கொஞ்சம்  பில்டப் கொடுத்துப் பேசினால் அது உ.ந. அணி. பரிட்சைக்கு போகிற பையனை நிறுத்தி, ‘எப்டிரா படிச்சிருக்க? எத்தனை மார்க் எடுப்ப?’ என்று  கேட்கும் போது, ‘நூத்துக்கு, நூத்தி முப்பது மார்க் எடுப்பேன்...’ என்று அவன் பில்டப் கொடுத்தால், அதுதான் உயர்வுநவிற்சி. ரைட்டா? இனி,  எதுகை - மோனை!

எதுகை, மோனை இரண்டிலும் எட்டெட்டு வகை இருப்பதாக 19வது அத்தியாயத்தின் முடிவில் ‘பஞ்ச்’ வைத்திருந்தோம். எட்டையும் எக்ஸ்பிரஸ்  வேகத்தில் பார்க்கலாமா? பெரும் புலவர்களாக விரும்புகிறவர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும்!

1) அடி மோனை / அடி எதுகை (1, 1):

* அடுத்தடுத்த அடியில் முதல் சீரின் முதல் எழுத்து ஒன்றாக இருந்தால் அ.மோ (இளங்காத்து வீசுதே / இசை போல பேசுதே - இ / இ)
அடுத்தடுத்த அடியில் முதல் சீரில் இரண்டாம் எழுத்து ஒன்றாக இருந்தால் அ.எ (மேடை ஏறிடும் பெண்தானே நாட்டின் சென்சேஷன் / ஜாடை பேசிடும் கண்தானே யார்க்கும் டெம்ப்டேஷன் - (மே)டை / (ஜா)டை)

2) இணை மோனை / இணை எதுகை (1, 2):
ஒரு அடியின் முதல் இரு சீர்களிலும் வருகிற மோனை, இணை மோனை (சிங்கம் சிங்கிளா வரும் - சி / சி)
 ஒரு அடியின் முதல் இரு சீர்களிலும் வருகிற எதுகை, இணை எதுகை (சாலையோரம் சோலையொன்று வாடும் - லை / லை)


3) பொழிப்பு மோனை / பொழிப்பு எதுகை (1, 3):
 ஒரு அடியின் முதல், மூன்றாம் சீர்களில் வருகிற மோனை, பொ. மோனை (லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் - லே / லே)


 ஒரு அடியின் முதல், மூன்றாம் சீர்களில் வருகிற எதுகை, பொ. எதுகை (மாப்பு வெச்சிட்டியே ஆப்பு - ப் / ப்)

4) ஒரூஉ மோனை / ஒரூஉ எதுகை (1, 4):
 ஒரு அடியின் முதல், நான்காம் சீர்களில் ஒன்றாக வந்தால் ஒரூஉ மோனை (ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்... - ஒ / ஒ)
 ஒரு அடியின் முதல், நான்காம் சீர்களில் ஒன்றாக வந்தால் ஒரூஉ எதுகை (ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்... - ழு / ழு)

5) கூழை மோனை / கூழை எதுகை (1, 2, 3):
 ஒரு அடியின் முதல் மூன்று சீர்களிலும் வருகிற மோனை, கூழை மோனை (கல்விக் கரையில கற்பவர் நாள்சில... - க / க / க)
 ஒரு அடியின் முதல் மூன்று சீர்களிலும் வருகிற எதுகை, கூழை எதுகை (பற்றுக பற்றற்றான் பற்றிறை... - ற் / ற் / ற்)

எதுகை, மோனை குடும்பத்தில் இன்னும் மூன்றே மூன்று பாக்கி இருக்கிறது. அது, அடுத்த வாரம் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

2 கருத்துகள்:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...