சனி, 7 மார்ச், 2015

வாடா எம் மச்சி, வாழக்கா பஜ்ஜி...!

மிழ் உணர்வு அதிகம் இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக சுத்த தமிழ் சொற்களை தேடிப் பிடித்து பயன்படுத்துபவர்களை நிறையப் பார்த்திருக்கலாம். ‘நல்லதா ஒரு கைபேசி வாங்கணும் அய்யா... வீட்டில் இருக்கிற தொலைபேசி பழுதாகிப் போச்சு...’ - ஒழுங்கா பேசியிருந்தால் கூட, அவர் தமிழ் உணர்வு மீது சந்தேகம் வந்திருக்காது. தொலைபேசி, கைபேசி என்று தப்புத் தப்பாகப் பேசி தனக்குத்தானே டெபாசிட் பறிகொடுத்து விட்டார். சரி. தொலைபேசி, கைபேசி... சரிதானே? இதில என்ன தப்பு என்று கேள்விக்குறி எழுப்புவீர்களேயானால்... அடுத்த பாராவில் இருக்கிறது ஆன்ஸர்.


சிறிய, பெரிய... மிகாது!

தொலைவில் இருந்து ஆன்டனா / கேபிள் வழியாக வருகிற நுண் அலைகள் மூலம் வீட்டில் அமர்ந்து படம் பார்க்கிறோம் இல்லையா? டிவி - அதை தமிழில் எப்படிச் சொல்கிறோம்? தொலைக்காட்சி - இப்படித்தானே. தொலைகாட்சி என்றில்லையே? காட்சியை தொலை என்று அர்த்தமாகி விடும். எனில், தொலைப்பேசி என்றுதானே வீட்டில் இருக்கிற போனை தமிழில் கூப்பிட வேண்டும். செல்போனை கைப்பேசி என்று சொல்வதுதானே சரி? கைக்குழந்தை, கைக்குட்டை, கைப்பை, கைக்கடிகாரம் போல, கைப்பேசிதானே சரி?

தொலைக்காட்சியை சின்னத்திரை என்கிறோம். அதுவும் தப்பு. தியேட்டரில் படம் பார்த்தால் பெரிய திரை. டிவியில் பார்த்தால் சிறிய திரை. சிறிய, பெரிய என்னும் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது. சின்னதிரை, சின்ன தம்பி, சின்ன கடை என்றுதான் எழுதவேண்டும். சின்னத்திரை என்றால் சின்னம் + திரை = தேர்தல் காலத்தில் சின்னம் வரையப்பட்ட திரை என்று அர்த்தமாகி விடும் பிரதர்ஸ்.

வினைத்தொகையில் வேண்டாமே!

வினைத்தொகையிலும் வல்லினம் மிகாது. அதெல்லாம் சரி, அதென்ன வினைத்தொகை? ரொம்ப ஈஸி. வினைச்சொல்லின் பகுதியும், பெயர்ச்சொல்லும் இணைந்து வந்தால், அது வினைத்தொகை. அவ்வளவுதான். ‘நாக்கை தொங்கப் போட்டுகிட்டு தெருவில் டேஞ்சரா திரியுதே... அது கடிநாய்ப்பா... ரொம்ப ஜாக்கிரதை!’ என்று உங்கள் நட்புக்குரியவர்களுக்கு வார்னிங் கொடுக்கிறீர்களே... அந்த ‘கடிநாய்’ என்கிற சொல் வினைத்தொகை. அந்த நாய் நேற்று கடித்தது, இன்றும் கடிக்கிறது, நாளையும் கடிக்கும் என்று நாயின் கேரக்டரை புரிந்து கொள்ள வைக்கிறது பாருங்கள்... அது வினைத்தொகை. குடிநீர், சுடுகாடு, உரைகல் இதெல்லாமும் வினைத்தொகையே. சுடுக்காடு என்று எழுதி, அதை கோபப்படுத்தி விடக்கூடாது.

உம்.. உம்... நோ.... நோ!

உம்மைத்தொகையிலும் ஒற்று வராது. உம்மைத்தொகை என்றதும் ஏடாகூட கற்பனை வேண்டாம். ‘அஞ்சான் யார் நடிச்ச படம்பா?’ என்று உங்கள் தோழி கேட்டால் (இது கூட தெரியாத தோழி... வேஸ்ட்!) ‘சூர்யா, சமந்தா நடிச்ச படம்ப்பா’ என்றுதானே சொல்வீர்கள்? ரைட். இதுதான் உம்மைத்தொகை. அதாவது ‘உம்’ என்கிற விகுதி மறைந்து நிற்கும். ‘சூர்யாவும், சமந்தாவும்’ என ரெண்டு ‘உம்’ மறைந்திருக்கிறதுதானே? ‘அந்த ஹோட்டல்ல இட்லி, சாம்பார் சூப்பராக இருக்கும்’ - இதிலும் இரண்டு ‘உம்’ மறைந்திருக்கிறது (இட்லியும், சாம்பாரும்) கவனித்தீர்களா? காய் கனி, தாய் தந்தை இதெல்லாம் உம்மைத் தொகை.

விளித்தொடரிலும் வேண்டாம்

விளித்தொடர் என்றால்... விளித்தல், அழைத்தல் என்கிற பொருள். ‘ராஜா... சொல்றதைக் கேளுடா’ என்கிறீர்களே, அது. கண்ணா கேள், ராதா பார். இதில் ஒற்று மிகாது.

வடமொழிக்கு தடா

இரு வடமொழி சொற்கள் இணைந்து வருகிற இடத்தில் ஒற்று வேண்டவே வேண்டாம். தேசபக்தி என்றுதான் எழுதவேண்டும். தேசப்பக்தி அல்ல. (தேசம், பக்தி இரண்டும் வடமொழி சொற்கள் ப்ரோ). ஆதிபகவன், கோஷ்டிகானம், சங்கீத சபா... இப்படி வந்தால் ஒற்றை ஒதுக்கி விடுங்கள்.

சந்திப் பிழை சப்ஜெக்ட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற இடம் இது. உண்மையில் சந்திப்பிழை பற்றி தனியாக புத்தகங்கள் எழுதலாம். அவ்வளவு விரிவான விஷயம் இது. ஆனாலும், இது தமிழ் இலக்கணத்தை அறிமுகம் செய்கிற தொடர் மட்டுமே என்பதாலும், இன்னும் பார்க்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருப்பதாலும் இங்கு முற்றுப்புள்ளி தவிர்க்க இயலாததாகி விடுகிறது. இங்கு படித்த அறிமுகங்களுடன், சந்திப்பிழை குறித்து இன்னும் மேலதிகமாக படித்து மொழிநடையை வளப்படுத்த வாழ்த்துக்கள்.

ஏ.. டண்டணக்கா... ஏ.. டணக்குணக்கா...!

சமீபத்தில் ஒரு தமிழ் சினிமா. ஹீரோவுக்கு அடிக்கடி தூக்கம் வருகிற வியாதியாம். ஹீரோயின் திண்டாடிப் போய், கடைசியில் நீச்சல் குளத்துக்கு கூட்டிப் போகிற மாதிரியெல்லாம் காட்சிகள் வரும். அவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டாம். நம்ம டி.ஆர். வசனங்கள் இருக்கிற டேப் ரிக்கார்டரை அவர் முன் ‘ஆன்’ செய்திருந்தால் போதும். ‘ஏ.. டண்டணக்கா... ஏ.. டணக்குணக்கா...’ ‘வாடா எம் மச்சி, வாழக்கா பஜ்ஜி... உம் உடம்ப பிச்சி...’ ‘நிம்மிய கண்டா கும்மியடிப்பேன்... ரம்மிய கண்டு விம்மி வெடிப்பேன்...’ என்று அவர் பேசுகிற வசனங்களை முழு வால்யூமில் போட்டு விட்டால், தூக்கம் பிய்த்துக் கொண்டு போயிருக்கும். அடுத்த ஒரு வாரத்துக்கு வராது... கேரண்ட்டி. அடுத்தவாரம் அவர் சப்ஜெக்ட்தான் மக்களே!

-திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

2 கருத்துகள்:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...