சனி, 28 மார்ச், 2015

இனிக்கிற வலி எது?

தொடை இலக்கணம் நிறையப் பேருக்கு பிடித்திருக்கிறது. அதிலும், எதுகை - மோனை மேட்டர். காரணம் இருக்கிறது. கிராமம் முதல் நகரம் வரை அனைத்து சென்டர் மக்களின் பேச்சிலும் அன்றாடம் புழங்குகிற விஷயம் இது. ‘‘எள்ளு எண்ணெய்க்கு காயுது; எலிப்புழுக்கை என்னத்துக்கு காயுது? அகப்பட்டவனுக்கு அட்டமத்துல சனி...’’ - காது வளர்த்த நமது பாட்டிகள் இலக்கண, இலக்கியமெல்லாம் தெரியாமலேயே, வயக்காட்டு வரப்புகளில் போகிற போக்கில் எதுகை, மோனை பின்னி எடுப்பார்கள், கவனித்திருக்கிறீர்களா? இலக்கியத்தை புத்தகங்களில் படித்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் நமக்கு, இயல்பாய் அவர்களிடம் இருந்து வந்து விழுகிற எ / மோ வார்த்தைகள் நிரம்ப வியப்பு தரும்.

ரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள். விளையாடுவதற்கு வெகு சிறப்பாக களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது தமிழ் இலக்கணம். சூட்சுமம் தெரிந்து விட்டால் போதும், நீங்கள் பேசுகிற, படித்துக் கொண்டிருக்கிற இந்த மொழியை வைத்து எக்கச்சக்கமாய் விளையாடலாம். விளையாடிக் களைத்து, ஓய்ந்து உட்கார்ந்தப் பிறகும் கூட... உங்கள் மொழியின் ஆழமான வளத்தில் ஒரு சதவீதம் கூட நீங்கள் பயன்படுத்தியிருக்க மாட்டீர்கள். விவரிப்புகளுக்கு அப்பாற்பட்டு விரிகிற வானம் போல... தமிழ் இலக்கண வளம் பிரமிப்பில் ஆழ்த்தும். இவ்வளவு பேசி விட்டு, அந்த விளையாட்டுகளை கோடிட்டுக் காட்டாமல் போனால் எப்படி?

புரிகிற மாதிரியாக இருக்கவேண்டும் என்பதால், இரு சினிமா பாடல்கள் (ஒரு பழசு, ஒரு புதுசு... ஓகே?) மட்டும் பார்க்கலாம். தொடை இலக்கணத்தில் முரண் பற்றி போன வாரம் படித்தோம். ‘பெருக்கத்து... சுருக்கத்து’ என ஒரு திருக்குறளும் எடுத்துக்காட்டு பார்த்தோம். அதில் கூடுதல் விளக்கம் வேண்டும் என நிறைய வற்புறுத்தல். ஆகவே, ஏறக்குறைய... முரணோடு இணைந்த ஒரு விஷயம் இந்த வாரம். முதலில் பாட்டு.

இது நதியில்லாத ஓடம்!

‘ஒரு தலைராகம்’ சினிமா பற்றி உங்கள் அப்பாக்களிடம் கேட்டால் கதையாகச் சொல்வார்கள். கதை முடித்து வெளியில் வரும் போது கன்னத்தைத் தடவினால்... தாடியே முளைத்திருக்கும். காதலையும், கண்ணீரையும் சம பங்கு கலந்து கட்டி, வடித்து பரிமாறிய படம் அது. படத்தின் பாடல்கள்... இன்றைக்கும் பிரமாதம். பாடல் ராகமும் (மெட்டு) சரி, வரிகளும் சரி... டி.ராஜேந்தர் என்கிற ஆகச்சிறந்த படைப்பாளியை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டின. அற்புதமான மெட்டுக்கள். அதனுடன் ராஜேந்தர் கோர்த்து தைத்திருந்த வார்த்தைகள்...

‘இது குழந்தை பாடும் தாலாட்டு...’ இந்தப் பாடல் முழுவதுமே வரிக்கு வரி முரண்களை கோர்த்து தைக்கப்பட்டிருக்கும்.
‘‘இது குழந்தை பாடும் தாலாட்டு (குழந்தை எப்படி தாலாட்டும்?), இது இரவு நேர பூபாளம் (பூபாளம் என்பது அதிகாலை ராகம்), இது மேற்கில் தோன்றும் உதயம் (மேற்கில் சூரிய உதயம்... சான்ஸே இல்லை), இது நதியில்லாத ஓடம் (நதியில்லாமல் ஓடம்... வேஸ்ட்).’’
இன்னும் பாருங்கள்.... ‘‘நடை மறந்த கால்கள் தன்னில் தடயத்தைப் பார்க்கிறேன் (நடையே இல்லாமல் தடயம் எப்பூடி?), வடமிழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழுக்கிறேன், வெறும் நாரில் கரம்கொண்டு பூமாலை தொடுக்கிறேன். வெறும் காற்றில் உளிகொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்...’’

உண்மையில் இந்தப் பாடல், இன்ன வகை இலக்கணம் என்று அவ்வளவு சுலபத்தில் முடிவுக்கு வந்து விடமுடியாது. தமிழறிஞர்களிடம் கேட்டால், ‘‘ஒரு வகையில் முரண் இலக்கணம். அதேசமயம், சில வரிகளை முரண் இலக்கணத்தில் அடக்கமுடியாது. இல்லாத பொருட்களை உவமையாக காட்டி பாடுவதால் (குழந்தை பாடும் தாலாட்டு, இரவுநேர பூபாளம்) இல்பொருள் உவமை அணி என்றும் சொல்லலாம். ரொம்பவும் இலக்கணப்பூர்வமாக பார்த்தால், இறைச்சிப்பொருள் (கூற வந்த பொருளை வேறொரு விஷயம் மூலம் உணர்த்துவது) என்கிற வகையும் இருக்கு. இல்லாத விஷயங்கள் கோர்த்து எழுதப்பட்டிருப்பதால்...’’ என்கிறார்கள்.

நிஜமுள்ள பொய்!

தமிழறிஞர்களையே தடுமாறச் செய்கிறது போல எப்படி விளையாடிருக்கிறார் பாருங்கள் டி.ஆர்? சரி ஒரு புதுப்பாட்டு. பாரிஜாதம் என்கிற படம். இசையமைப்பாளர் தரண் மேற்கத்திய பாணியில் மெட்டிசைத்த சூப்பர் ஹிட் மெலடி. கவிஞர் பா.விஜய் எழுதியிருக்கிறார்... முரண்களைக் கோர்த்து. ‘உன்னைக் கண்டேனே முதல் முறை...’ பாட்டைக் கேட்டுப் பாருங்களேன். உள்ளே சரணத்தில் இப்படி வரும்...

‘‘எரிகிற மழை இது (மழை எப்பிடி எரியும்), குளிர்கிற வெயில் இது, கொதிக்கிற நீர் இது, அணைக்கிற தீ இது, இனிக்கிற வலி இது, இரும்புள்ள பூ இது... இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே...’’ - பாருங்கள், எதாவது சாத்தியமா? சத்தியமா இல்லைதானே? ‘‘நிஜமுள்ள பொய் இது, நிறமுள்ள இருள் இது, மவுனத்தின் மொழி இது, மரணத்தின் வாழ்விது, அந்தரத்தின் கடல் இது, கண்டு வந்த கனவிது...’’ - அப்பப்பா, கற்பனை சிலிர்க்க வைக்கிறதுதானே? நிஜமுள்ள பொய், நிறமுள்ள இருள், மவுனத்தின் மொழி, கண்டு வந்த கனவு.... எப்படி ஒவ்வொரு முரணாகக் கோர்த்து கவிதையாக தைத்திருக்கிறார் பார்த்தீர்களா?

தமிழ் மொழியில் நீங்கள் எப்படி வேண்டுமானால் விளையாடலாம் என்பதை இந்த இரு பாடல்களும் நிரூபிக்கின்றன. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். இன்னும் நிறைய விளையாட்டு காத்திருக்கிறது. விளையாட பொழுதுதான் போதாது? அடுத்த வாரத்தில் மீண்டும்.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...