ஞாயிறு, 22 மார்ச், 2015

ஊதா கலரு ரிப்பன்... உனக்கு யாரு அப்பன்?

ன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
- இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த திருக்குறளுக்கும்....
சித்தூர தாண்டுனா காட்பாடி
சிவாஜிய தொட்டா டெட்பாடி
- இந்த மெகா சூப்பர் வசனத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. முன்னது இலக்கியம். பின்னது ‘கலக்’கியம். இலக் / கலக்கியங்களை இணைக்கிற விஷயம்... மோனை. முதல் எழுத்து ஒன்றி வந்தால் அது மோனை என்று கடந்த வாரம் படித்தோம். (அன்பும் அறனும் - ‘அ’னாவுக்கு ‘அ’னா; பண்பும் பயனும் - ‘ப’னாவுக்கு ‘ப’னா மோனை. சித்தூர... சிவாஜிய - ‘சி’னாவுக்கு ‘சி’னா மோனை.) தொடை இலக்கண சப்ஜெக்ட் கடந்த வாரம் ஆரம்பித்தது. அதில் நான்கு பிரிவுகள் (மோனை, எதுகை, முரண், இயைபு) இருக்கிறது என்றும் பார்த்தாச்சு. முதலில் தொடை இலக்கணம் பற்றி ஒரு பறவைப் பார்வை பார்க்கலாம். அப்புறம் உள்ளே புகுந்து ஆராயலாம். ஓகே?

அதான்டா... இதான்டா...!

மோனை மேட்டர் முடிஞ்சது. அடுத்து எதுகை. இரண்டாம் எழுத்து ஒன்றி வந்தால் அது எதுகை. எப்படி? இன்னொரு ‘சூப்பர்’ உதாரணம். ‘அதான்டா... இதான்டா... அருணாச்சலம் நான்தான்டா...’ பாட்டு கேட்காதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க வாய்ப்பில்லை. இந்தப் பாட்டில் ‘அதான்டா, இதான்டா’ இரு சொற்களிலும் இரண்டாம் எழுத்தான ‘தா’வன்னா ஒன்றி வருகிறதா? அப்டினா இது எதுகை. ‘நிம்மிய கண்டா கும்மியடிப்பேன்... ரம்மிய கண்டா விம்மி வெடிப்பேன்...’ என்று டி.ஆர் போட்டுத் தாக்குவாரே. நிம்மி, கும்மி, ரம்மி, விம்மி... இரண்டாம் எழுத்து ‘ம்’மன்னா. சந்தேகமேயில்லை, எதுகையேதான்!


அடுத்து, முரண். பெயரிலேயே அர்த்தம் இருக்கிறது பாஸ். முதல் அடியும், அடுத்ததும் எதிரும், புதிருமாக... ஹீரோவும், வில்லனுமாக முறைத்துக் கொண்டிருக்குமேயானால்... அது முரண். சினிமா உதாரணமாக பார்த்துப் பார்த்து திகட்டியிருக்கலாம். இலக்கியப் பெரியவர்களும் ஏகத்துக்கு டென்ஷன் ஆகியிருப்பார்கள். என்பதால், திருக்குறள் உதாரணம்.
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு
- இந்தக் குறளைப் பாருங்கள். முதல் அடியில் பெருக்கத்து, இரண்டாவது அடியில் சுருக்கத்து. அதாவது, பெருக்கம் * சுருக்கம் என்று முதல், இரண்டாவது அடிகள் பிளஸ் - மைனஸ் திசைகளுக்கு திரும்பி நிற்பதால் இது முரண். தமிழ் சினிமா பாடல்களிலும் இதற்கு எக்கச்சக்கம் உதாரணம் காட்டலாம்.

பக்கம் வர துடித்தேன்!

கட்டக்கடைசியாக, இயைபு. ஒரு பாடலில் ஒன்றுக்கு மேற்பட்ட வரிகளின் இறுதி எழுத்து அல்லது சொல் ஒன்றி வந்தால், அது இயைபு. ‘பார்த்தேன்.. சிரித்தேன், பக்கம் வர துடித்தேன். உனைத்தேன் என நான் நினைத்தேன். அந்த மலைத்தேன் இவளென மலைத்தேன்...’ என்று தாத்தாக்கள் காலத்து பாட்டு கேட்டிருக்கலாம். தேன்... தேன்... என கவிஞர் கண்ணதாசன் பின்னியெடுத்திருக்கிறார் பாருங்கள். அது இயைபு. ‘தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி, தாளம் வந்தது பாட்ட வெச்சி. தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி... தூக்கி எறிஞ்சா கண்ணு குளமாச்சி...’ - வரிக்கு வரி ச்சி.. ச்சி... என்று பிச்சி எடுத்திருக்கிறாரே டி.ஆர். இது இயைபு. ‘ஊதா கலரு ரிப்பன்... உனக்கு யாரு அப்பன்’ என்று ஸ்ரீதிவ்யாவைப் பார்த்து சிவகார்த்திகேயன் ‘ரிப்பன்... அப்பன்’ ரைமிங்கில் பாடினால், அதுவும் இயைபே.
(இந்த இடத்தில் ஒரு தன்னிலை விளக்கம். ஒவ்வொரு வாரமும், அடுத்தவார சப்ஜெக்ட்டையே முதல் வாரத்துக்கு தலைப்பாக போட்டு புதுமை செய்து பார்த்தோம். புதுமை, புரட்சி எல்லாம் 18 வாரத்துக்கு ஓகே. இனி, வழக்கமான பாணியில், அந்தந்த வார மேட்டரையே தலைப்பாக்கிடுவோம். ரைட்டா?)

பறவைப் பார்வை முடிந்தது. இனி, களத்தில் இறங்கிப் பார்க்கலாமா? எதுகை, மோனை என்று மேலோட்டமாகச் சொன்னாலும் கூட, இரண்டிலும் எட்டெட்டு வகைகள் இருக்கிறது. 1) சிக்ஸூக்கு அப்புறம் செவன்டா... சிவாஜிக்கு அப்புறம் எவன்டா 2) பத்த வெச்சிட்டியே பரட்டை. சி - சி, ப - ப... இந்த இரண்டுமே மோனை தான். முதலெழுத்து ஒன்றி வருவதால். ஆனால், இரண்டுக்கும் எக்கச்சக்க வித்தியாசம் இருக்கிறது. அது, அடுத்தவாரம்.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

2 கருத்துகள்:

 1. இனிக்கும் இலக்கணம்.
  பாமரனுக்கும் புரியுமாறு எளிய தமிழில் அருமை அய்யா தொடருங்கள்.
  தொடர்கிறேன்.
  த ம 2

  பதிலளிநீக்கு
 2. இயைபு விளக்கம் உட்பட அனைத்தும் அருமை...

  ரசித்தேன்...

  பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...