சனி, 14 மார்ச், 2015

சித்தூர தாண்டுனா காட்பாடி; சிவாஜிய தொட்டா டெட்பாடி

‘வாடா எம் மச்சி... வாழக்கா பஜ்ஜி...’ என்று அதகளமான தலைப்பே இந்த வாரம் என்ன மேட்டர் என்பதை சொல்லி விட்டது - இப்படி நிறையப் பேர் தொடர்பில் வந்து தலைப்பு சஸ்பென்ஸை தகர்த்தார்கள். உண்மைதான். ‘ஏ டண்டணக்கா... ஏ டணக்குணக்கா; நிம்மிய கண்டா கும்மியடிப்பேன்... ரம்மியக் கண்டு விம்மி வெடிப்பேன்...’ என்று அடுக்கு மொழி வசனங்களை அள்ளித் தட்டி, எதுகை மோனை இலக்கணம் பற்றி எழுதுகிற வேலையை ரொம்பவே சுலபப்படுத்தி வைத்திருக்கிறார் டி.ஆர். சப்ஜெக்ட்டுக்குள் போவதற்கு முன்பாக ஒரு விஷயம்.


ஹன்சிகாவோடு... ஓடும் போது!

ம்மொழி செம்மொழி தொடரை ரெகுலராக படிக்கிற கல்லூரி மாணவர் திடீரென தொடர்பில் வந்தார். ‘ஓடும் போது உரசிக் கொள்ளலாமா, கூடாதா சார்?’ - ஆர்வமாகக் கேட்டார். ‘கூடவே கூடாது... கூடாது பிரதர்...’ என்று அழுத்த்த்தம் திருத்த்த்தமாக பதில் அளித்தேன். - தொடரின் 16வது அத்தியாயம் இப்படி முடிந்திருந்தது. அதென்ன உரசல் இலக்கணம் என்று அடுத்தவாரம் ஆர்வமாக பார்த்தவர்களுக்கு ஏமாற்றம். உரசல் இலக்கணம் கடந்த வாரம் மிஸ்சிங். 17ல் விட்டதை, 18ல் பார்த்து விடலாமா?

செம்மொழி தொடரின் 11வது அத்தியாயம் ஞாபகத்தில் இருக்கிறதா? (எப்படி மறக்கும்...? வேற்றுமை உருபுகள் சப்ஜெக்ட்டை ஹன்சிகா கற்றுக் கொடுத்தாரே!). ‘ஓடு’ என்ற மூன்றாம் வேற்றுமை உருபில் ஒரு வார்த்தை முடியுமேயானால், அங்கு வலி மிகாது. அதாவது ஒற்று வந்து உரசக்கூடாது. ‘ஹன்சிகாவோடு சாப்பிட்டேன், ஹன்சிகாவோடு சண்டை போட்டேன்...’ இப்படியாக எழுதும் போது ஹன்சிகாவுக்குப் பின்னால் ‘இச்’ நோ. இதுதான் உரசல் இலக்கணம். இனி, இந்த வார மேட்டர்.

கவித... கவித...!

தமிழ் இலக்கணத்தில் ரொம்பவே இன்ட்ரஸ்டிங்கான விஷயம் எதுகை மோனை. இது இல்லாமல் நமது பேச்சே இல்லை. ‘மாப்பு... வெச்சிட்டியே ஆப்பு...!’ என்று சாதாரணமாக பேசுகிற போதே, ‘எகனை மொகனை’யா புகுந்து விளையாடுவோம். இலக்கணம் தெரியாத போதே, இந்த ஆட்டம் என்றால்... சரி வாருங்கள், அதையும் தெரிந்து கொண்டால் போச்சு.
தமிழ் இலக்கணம், செய்யுளை (அதாங்க, கவித... கவித...!) ஆறு பிரிவுகளாக பிரித்து வைத்திருக்கிறது. 1) எழுத்து, 2) அசை, 3) சீர், 4) தளை, 5) அடி, 6) தொடை. முதல் ஐந்தும் அப்புறம். ஆறாவது விஷயம் இருக்கிறதே... அதென்ன தொடை? பெயரே மார்க்கமா இருக்கே என்று யோசிக்கவேண்டாம். ஒரு செய்யுளின் அடிகளையோ, சீர்களையோ ஒன்றுடன் ஒன்று தொடுப்பது - தொடை. அம்புட்டுத்தான். தொடையில் நான்கு விஷயங்கள் இருக்கிறது. 1) மோனை (Alliteration), 2) எதுகை (Rhyme), 3) முரண், 4) இயைபு. நான்குமே, படிக்கப் படிக்க பரவசம். ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

முதலில் மோனை. ஒரு செய்யுளில் முதல் எழுத்து ஒன்றி வந்தால்... அது மோனை. போட்டுக் கொடுக்கும் உங்கள் தோஸ்த்தை பார்த்து, ‘பத்த வெச்சிட்டியே... பரட்டை!’ என்கிறீர்கள். ‘ப’னாவுக்கு ‘ப’னா வருகிறதில்லையா? அது மோனை. ‘இளங்காத்து வீசுதே... இசை போல பேசுதே!’ என்று பிதா மகன் படத்தில் அற்புதமான பாடல் போட்டிருப்பார் இளையராஜா. ‘இ’னாவுக்கு ‘இ’னா மோனை. இங்கே நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. ‘ஓங்கி அடிச்சா... ஒன்னரை டன் வெயிட்ரா...’ என்று சூர்யா இடி இடித்தது போல எக்கோ வாய்சில் கர்ஜிப்பாரே... அது மோனை இல்லை. ஏன்?

தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி

எதுகையோ, மோனையோ... குறில் என்றால் குறிலாக இருக்கவேண்டும். நெடிலென்றால் நெடிலாக இருக்கவேண்டும். அப்போதுதான் அது கோல். இல்லாவிட்டால் ‘ரெட் கார்டு’ காட்டி அனுப்பி விடுவார்கள். ‘தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி... தாளம் வந்தது பாட்டை வெச்சி...’ இந்தப் பாடலில் முதல் அடியின் முதல் எழுத்து த (குறில்). இரண்டாம் அடியின் முதல் எழுத்து தா (நெடில்). அப்படியானால் இது மோனை இல்லை. சூர்யா வசனத்திலும் ‘ஒ’னாவுக்கு ‘ஓ’வன்னா வந்ததால், அதுவும் மோனையில்லை. ரைட்டா?

இன்னொரு ‘சூப்பர்’ விஷயமும் பார்த்து விடலாம். ‘சித்தூர தாண்டுனா... காட்பாடி; சிவாஜிய தொட்டா... டெட்பாடி!’ - கேட்கும் போதே விசில் பறக்கிற பஞ்ச் டயலாக் இல்லையா இது? அப்ப... ஒன்றோடு நிறுத்தினால், எப்படி? ‘சிக்ஸூக்கு அப்புறம் செவன்டா... சிவாஜிக்கு அப்புறம் எவன்டா...!’ - கேட்டதும் கிறுகிறுக்க வைக்கிறதுதானே? இரு டயலாக்குகளும் ‘அடி மோனை’ இலக்கணப் பிரிவின் கீழ் வருகின்றன. அதென்ன அடி மோனை? ‘சூப்பர்’ வசனம் என்பதால் தடாலடி மோனை என்று ‘எக்ஸ்ட்ரா பில்டப்’ கொடுத்து சொன்னாலும் தப்பில்லை! ‘சூப்பரை’ தெரிந்து கொள்ள ஒரு வாரம்!
- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

2 கருத்துகள்:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...