சனி, 7 பிப்ரவரி, 2015

கிளவிக்கு ‘இச்’ வேண்டாம்!

‘இதெல்லாம் தேவையே இல்லை ப்ரோ. க்கு, ச்சு போட்டு எழுதலைனா என்னா அர்த்தம் மாறிடப்போவுது? அதெல்லாம் இல்லாம அப்டியே எழுதிக்கலாம். ச்சும்மா சந்தி, வலி, வல்லெழுத்துனு டார்ச்சர் பண்றாங்க...’ என்று சில ‘இணைய’ தலைமுறையினர் கேண்டீனில் காபி குடிக்கிற போது கமெண்ட் அடித்ததாக சேதி வந்தது. ‘க்கு, ச்சு போடலைனா என்னா அர்த்தம் மாறிடப் போவுது?’ என்று அவர்கள் கேட்பது சரியாக பட்டாலும் கூட... சரியில்லை. மகா தப்பு. அர்த்தம் மாறி அனர்த்தம் ஆகி விடும். எப்படி..? இங்கே கொஞ்சம் சாம்பிள்ஸ்.

* வேலை தேடு - ‘தம்பி படிச்சு முடிச்சுட்டு எவ்வளவு காலம்தான் சும்மா இருப்ப? நல்ல ஜாப்புக்கு போகவேண்டாமா?’ என்று அம்மா கேட்பார்களே... அது! வேலைத் தேடு என்று ஒரு த்தன்னா போட்டு விட்டால்... போச்சு. அறுபடை வீடு கொண்ட முருகப் பெருமானின் ஆயுதத்தை தேடு என்று அர்த்தம். அம்மா வேலை தேடச் சொல்வார்களா இல்லை, வேலைத் தேடச் சொல்லுவார்களா?

* ஏழை சொல் - ஏழையின் அபலக் குரல் என்று அர்த்தம். தேவையில்லாமல் ஒரு ச்சன்னா போட்டு ஏழைச் சொல் என்று எழுதினால்... ஏழாம் நம்பரைச் சொல் என்று அர்த்தமாகி விடும்... புரியுதா?
*  கைக்குட்டை - அழகான பெண்களை / ஆண்களை பார்க்கிற போது லேசாக முகத்தில் ஒற்றி எடுக்க பயன்படுகிறதே... கர்சிப், அது. ‘க்’ இல்லையென்றால்... கை குட்டை. இதற்கு விளக்கம் தேவைப்படாது.
*  மருந்துக் கடை - இப்படி எழுதினால் மெடிக்கல் ஷாப். க்கன்னா இல்லாமல் மருந்து கடை என்று எழுதினால், பாத்திரத்தில் மூலிகைகளை அள்ளிப் போட்டு மத்து வைத்துக் கொண்டு மருந்தை கடை என்று அர்த்தம்.
 - இனி கேண்டீனில் சொல்பவர்கள் பேச்செல்லாம் கேட்கமாட்டீர்கள்தானே?

சரி. எந்தெந்த இடத்தில் ஒற்றுப் போட்டு எழுதவேண்டும் என்று எக்ஸ்பிரஸ் வேகத்தில் போன வாரம் ஐந்து விதிகள் பார்த்தோம். இந்த வாரம் இன்னும் சில முக்கியமான விதிகள் மட்டும் (இது பேஸிக் கோர்ஸ்தான் ப்ரோ) பார்க்கலாம்.

விதி நம்பர் 6:

பண்புத்தொகை சொற்களில் கட்டாயம் ஒற்றுப் போட்டு எழுதவேண்டும். (சொல்லக்கூடிய விஷயத்துடன் வண்ணம், வடிவம், அளவு, சுவை இதில் ஏதாவது ஒரு பண்பு மறைந்து நிற்குமானால் அது பண்புத் தொகை).
உதாரணம்: வெள்ளைத் தாள் (வெள்ளை + தாள்), மெய்ப்பொருள் (மெய் + பொருள்), பொய்ப்புகழ் (பொய் + புகழ்).


விதி நம்பர் 7:
திரு, நடு, முழு, பொது, விழு போன்ற முற்றியலுகரச் சொற்களுக்குப் பின் கட்டாயம் ஒற்றுப் போடவேண்டும். (முதலில் முற்றியலுகரம், குற்றியலுகரம் பற்றி தெரிந்து கொள்வோமா? இது ரொம்ப ஈஸியான மேட்டர். ஒரு எழுத்தை உச்சரிக்க நாம் எடுத்துக் கொள்கிற நேர அளவுக்கு மாத்திரை என்று பெயர் என்று ரொம்ப ஆரம்பத்தில் படித்திருக்கிறோம். ஒரு எழுத்து ‘உ’வில் முடிகிறது. அந்த ‘உ’வை உச்சரிப்பதில் நாம் எவ்வளவு கால அளவு கொள்கிறோம் என்பதைப் பொறுத்து குற்றியலுகரமா, முற்றியலுகரமா என்று முடிவு செய்யலாம். கு.லு - மு.லு ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? இப்படி கேட்டால், ‘எனக்குத் தெரியாது’ என்று பதில் சொல்லுங்கள். தமிழாசிரியர் சபாஷ் போடுவார். நிஜம்தான். எனக்கு (க் + உ) - இந்த ‘கு’ உச்சரிப்புக்கான கால அளவு குறைவாக இருப்பதால் இது குற்றியலுகரம். தெரியாது (த் + உ) ‘து’ உச்சரிப்புக்கான கால அளவு கொஞ்சம் ஜாஸ்தியாக இருப்பதால் இது முற்றியலுகரம்).
உதாரணம்: திருக்கோயில் (திரு + கோயில்), நடுத்தெரு (நடு + தெரு), முழுப் பேச்சு (முழு + பேச்சு), பொதுப்பணி (பொது + பணி).

விதி நம்பர் 8:

ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் முன் ஒற்று அவசியம். (ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம் என்ற பெயரைப் பார்த்து திகிலடைத்து விட வேண்டாம். எதிர்மறையான பொருளில் வரும் வினைச்சொல். அதன் கடைசி எழுத்து இல்லாமல் (ஈறு = கடைசி, கெட்ட = இல்லாமல்) வந்து அடுத்து வரும் பெயர்ச் சொல்லுக்கு விளக்கம் தரும். அதுதான் ஈ.கெ.எ.பெ. அடிஷனல் தகவலாக பெயரெச்சம், வினையெச்சம் பற்றியும் ஒரு பார்வை. பெயரைக் கொண்டு முடிந்தால் பெயரெச்சம் - வந்த சமந்தா. வினையைக் கொண்டு முடிந்தால் வினையெச்சம் - வந்து நின்றார் சமந்தா).
உதாரணம்: நிலையாப் புகழ் (நிலையா + புகழ்), அறியாப்பெண் (அறியா + பெண்), தீராத்துன்பம் (தீரா + துன்பம்)

சந்திப்பிழை பற்றி ரொம்ப அத்தியாயமாக படித்துக் கொண்டிருக்கிறோம். இது தமிழ் இலக்கணத்தை அறிமுகம் செய்கிற தொடர் மட்டுமே என்பதால், லேசாக பிரேக் அடித்து, அடுத்த மேட்டருக்கு ஜம்ப் பண்ணவேண்டிய நேரம் வந்து விட்டது. எந்தெந்த இடத்தில் ஒற்று போடவேண்டும் என்று பார்த்தோம். எங்கே போடக்கூடாது... அதாவது வலி மிகாது என்று தெரிந்து கொள்ளவேண்டாமா? இப்போது மீண்டும் கிளவியை சந்திக்கவேண்டியிருக்கிறது. கிளவிக்கு ‘இச்’ கூடாது என்பது இலக்கணம். அடுத்த வாரம் அதைப் பார்த்து விட்டு அடுத்த விஷயத்துக்கு கிளம்பி விடலாம். ஓகே?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

3 கருத்துகள்:

  1. இதையெல்லாம் தமிழ் ஆசிரியர்கள் வகுப்பிலேயே சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். இப்போது பாதி தமிழ் ஆசிரியர்களுக்கே இவை தெரிவதில்லை.போன வாரத்தில் ஒரு தொலைகாட்சியில் ஒரு 12ம் வகுப்பு தமிழ் பாடத்தில் வெற்றி பெறுவது எப்படி என்று ஒரு தமிழ் ஆசிரியை பாதி ஆங்கிலத்தில் விளக்கிக் கொண்டிருந்தார்..அவர் தனக்கு தமிழை விட ஆங்கிலம் அதிகமாக தெரியும் என்பதை பறை சாற்றி கொண்டிருந்தார்.பாதி தமிழ் ஆசிரியர்களின் பிரச்சினையே அவர்களின் தாழ்வு மனப்பான்மைதான். தங்களை மதிப்பதில்லை என்ற குறை. எந்த பாடத்தையும் சொல்லித் தரும் விதத்தில் சொல்லித் தந்தாள் எல்லோரிடமும் மதிப்பு கிடைக்கும். இதை உணர்ந்து தமிழ் ஆசிரியர்கள் செயல்பட்டால் நிச்சயம் தமிழ் வளரும்.
    KALA KARTHIK

    பதிலளிநீக்கு
  2. சந்திப் பிழையை நானும் அடிக்கடி சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன் ,உங்கள் விளக்கம் என்னை தெளிவுபடுத்துகிறது :)
    த ம 3

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...