சனி, 21 பிப்ரவரி, 2015

மண்டை ஓடு மாந்த்ரீகமா ஏவல் வினை...?

ந்திப்புகள், சந்திக்கிற தருணங்களில் ‘இச்.. இச்...’ கொடுப்பதா / கூடாதா என்பதான சமாச்சாரங்கள் எவ்வ்வ்வ்வளவு முக்கியமானவை என்பதற்கு நமது நம்மொழி செம்மொழி தொடர் சிறந்த உதாரணம். பாருங்கள்... எல்லாவற்றையும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் சொல்கிற இந்தத் தொடரில், ‘சந்தி’ மேட்டர் மட்டும் கிட்டத்தட்ட ஆறு வாரங்களாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருப்பதால், வேறு வழியின்றி சடன் பிரேக் அடித்து, வேறு ரூட்டில் வண்டியைத் திருப்ப வேண்டியிருக்கிறது. இந்த வாரம், ‘இச்’ கொடுக்கக்கூடாத இடங்கள்... அதாவது, வல்லெழுத்து மிகாத இடங்கள்.


நயன்தாராவும், சரவெடியும்

தற்கு முன்னதாக புணர்ச்சி இலக்கணம் என்கிற விஷயமும் லேசாக தொட்டு விடலாம். காரணம், சந்திப்பிழை என்கிற ‘கடலில்’ இதுவும் ஒரு துளி. இங்கேயே பார்த்தால் மட்டுமே ஆச்சு. தமிழில் இரு சொற்கள் இணைகிற / சந்திக்கிற போது, உச்சரிப்பில் ஏற்படுகிற மாற்றம் குறித்து பேசுவது புணர்ச்சி இலக்கணம். இரு சொற்கள் இணைகிற போது முதலில் வரும் சொல் நிலைமொழி எனவும், வந்து இணைகிற சொல் வருமொழி எனவும் ஏற்கனவே படித்திருக்கிறோம்... மறந்திருக்காது என நம்புகிறேன்.

புணர்ச்சி இலக்கணத்தை இரண்டாக பிரிக்கலாம். இயல்பு புணர்ச்சி. அதாவது, சொற்கள் எவ்வித மாற்றமும் இன்றி இயல்பாக இணைந்து பொருள் தருவது. நயன்தாரா வந்தார். வாழை மடல். அவரது வீடு. இதில், இரு சொற்கள் இணைகிறது. எவ்வித மாற்றமும் பெறாமல் அர்த்தம் தருகிறதுதானே? அடுத்து, திரிபு புணர்ச்சி. இங்கு, இரு சொற்கள் இணைகிற போது எழுத்துக்கள் கூடவோ, குறையவோ அல்லது புதுவித மாற்றம் பெறவோ செய்யும்.
* சொல்லி + கொடு = சொல்லிக் கொடு. இரு சொற்கள் இணைகிற இங்கே, ஒரு எழுத்து கூடுகிறது.
சரம் + வெடி = சரவெடி. ஒரு எழுத்து குறைகிறது. இரு சொற்கள் சேர்ந்ததும், ‘ம்’ விரட்டியடிக்கப்பட்டு விட்டது கவனித்தீர்களா? நயன்தாரா தீபாவளிக்குச் சரவெடி வெடித்தார் என்றுதான் எழுதவேண்டும். சரம்வெடி வெடித்தார் என்றல்ல.
 பால் + கடல் = பாற்கடல். எழுத்தே மாறி விட்டது பாருங்கள். ‘ல்’ என்கிற எழுத்து ‘ற்’ ஆகி விட்டது. ஆனால், அர்த்தம் அதேதான். இது, இந்தளவுக்கு போதும். இனி, மெயின் மேட்டருக்குப் போகலாம்.

பெரிய மனசு

சந்திப்பிழை என்பது ‘க், ச், த், ப்’ போடவேண்டிய இடங்களில் போடாமல் இருப்பது மட்டுமல்ல. போடக்கூடாத இடங்களில் போட்டு வைப்பதும்தான். எங்கெங்கே ‘இச்’ கூடாது என்று பாயிண்ட், பாயிண்ட்டாக பார்க்கப் போகிறோம்.
அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு - இந்த சொற்களுக்குப் பின்னால் ‘இச்’ கூடாது.
நயன்தாரா மனசு அவ்வளவு பெரியது. இங்கே, அவ்வளவுப் பெரியது என்று எழுதினால் ரொம்பத் தப்பு. எவ்வளவு, இவ்வளவுக்கும் இதேதான்.
அத்தனை, இத்தனை, எத்தனை. இதற்குப் பின்னாலும் கூடாது.
இது தீபாவளி நேரம். உங்கள் தோஸ்த் அறைக்குப் போகிறீர்கள். அலமாரியைத் திறந்து பார்த்ததும் ஆச்சரியப்பட்டுப் போகிறீர்கள். ‘அடேயப்பா... இத்தனை பாட்டில்களா?’. நன்றாக கவனிக்க. ‘இத்தனைப் பாட்டில்களா?’ என்று ‘ப்’ போட்டு, ஓவர் உணர்ச்சி காட்டக்கூடாது.

அது, இது, எது / அவை, இவை, எவை / அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு - இந்தக் கூட்டணி வந்தாலும் ஒற்று மிகப்படாது. அது + பள்ளி = அது பள்ளி தான். அதுப்பள்ளி என்று எழுதினால், கர்நாடகா பார்டரில் இருக்கிற கிராமத்தின் பெயர் என்று நினைத்து விடுவார்கள்.

இரட்டைக் கிளவி (தனியாக ஒரு வாரம் படித்திருக்கிறோம்... ஐஸ்வர்யா ராய் படம் போட்டு. ஞாபகம் வந்திருச்சா?), அப்புறம் அடுக்குத் தொடரில் வல்லினம் மிகாது. கிழவிக்கு ‘இச்’ தரலாம். சந்தோஷப்படுவார்கள். ‘இன்னொண்ணு கொடுறா பேராண்டி...’ என்பார்கள். ஆனால், கிளவிக்கு ‘இச்’ கூடவே கூடாது (கிழவி என்றால் கிராமம்; கிளவி என்றால் கிராமர் என்று ஏற்கனவே படித்ததை ரீவைண்ட் செய்து பார்க்கவேண்டிய நேரம் இது). ‘சல சல, தக தக - இது இரட்டைக் கிளவி’ ‘சலச்சல’ என்று ‘இச்’ போட்டால், அது ராங் கிளவி. அடுக்குத் தொடரிலும் வல்லினம் மிகாது.

மண்டையோடு மாந்த்ரீகம்!

வல்லினம் எங்கெங்கு மிகக்கூடாது என்று இன்னும் நிறைய விதிகள் இருக்கின்றன. இந்த வாரத்துக்குள் முடிக்க முடியவில்லை. ஆகவே, அடுத்தவாரமும் சந்திப்பிழை சப்ஜெக்ட் தான். வல்லினம் மிகக்கூடாத இன்னும் கொஞ்சம் ஏரியாக்களை பார்க்கப் போகிறோம். அதற்கு முன்னதாக, நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. ஏவல் வினை பற்றி கேள்விப் பட்டதுண்டா? மண்டையோடு மலையாள மாந்த்ரீகம், பில்லி சூனியம் கேள்விப் பட்டிருக்கலாம். ஏவல் வினை அந்தளவுக்கு பயப்படுத்துகிற விஷயம் அல்ல. ஆனாலும், பயப்படுத்துகிற விஷயமே. அந்த ‘திக் திக்’கை தெரிந்து கொள்ள... ஜஸ்ட் ஒரு வாரம்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

  1. அடடா...! உணர்ச்சி வயப்பட்டாலும் சேர்ப்பதை சேர்க்க வேண்டும்... அழகான விளக்கங்கள்...

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...