ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

வால்பாறையும்... சில யானைகளும் - 6

திருநெல்வேலிக் காரர்களைப் பார்க்கிற போது நமக்கு பொறாமையாக இருக்கும். நினைத்த நேரத்தில் இருட்டுக்கடைக்குப் போய் அல்வா சாப்பிட முடிகிறது  பாருங்கள். வால்பாறைக் காரர்களும் அப்படியே. அவர்களைப் பார்த்து பொறாமைப்படவும் நிறைய விஷயங்கள் இருக்கிறது. இங்குள்ள பேக்கரிகளில் ஒரு  விதமான விசேஷ அல்வா கிடைக்கிறது. பட்டாக்கத்தி அல்வா என்று வேண்டுமானால் நாம் அதற்கு பெயர் வைத்துக் கொள்ளலாம். காரணம், பெரிய  கத்தியை வைத்து மட்டன் கடைகளில் இறைச்சியை வெட்டுவது போல வெட்டி எடுத்து எடைபோட்டுத் தருகிறார்கள். செம டேஸ்ட். அப்புறம் சில்லி  என்கிற ஒரு காரம். இங்கு மட்டும்தான் இது கிடைக்கிறது. வால்பாறை போகும் போது, அள்ளி வர மறக்கவேண்டாம்.

துரையை நோக்கிய எனது பயணம் மறுநாள் (அதாவது டிசம்பர் 30) அதிகாலையில் துவங்கியது. ஆட்டோ பிடித்து வால்பாறை டவுனுக்குப் போனோம்.  டவுன் என்பது கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட சொல். சின்னதாய் ஒரு கோடு கிழித்தது போல தார்ச்சாலை. அதற்கு இரு பக்கங்களிலும் கடைகள். அதற்கு  கீழே மலைச்சரிவுகள். பள்ளத்தாக்குகள். அவ்வளவுதான். வால்பாறை என்றில்லை. பொதுவாகவே, மலைப்பகுதிகளில் இயற்கையான ஒரு அழகை நாம்  அனுபவிக்கமுடியும். சாலைகள் காலையில் பார்க்கும் போது கழுவி விட்டது போல பளபளப்பாய் இருக்கும். ஆழ்ந்து சுவாசிக்க ஆர்வம் தூண்டுகிற வகையில்  செம ஃப்ரெஷ் ஜில் காற்று வீசிக் கொண்டே இருக்கும். வால்பாறையும் அப்படியே. ஷங்கர் சினிமா பாணியில் சொல்வதானால், ‘அதுக்கும் மேல!’.

எஸ்டேட் மருத்துவமனைகள் கூட, புல்வெளிகளும் பூந்தோட்டங்களுமாக அவ்வளவு அழகு (அட்மிட் ஆகாத வரைக்கும் ரசிக்கலாம்!). போக்குவரத்துத்துறை  ஊழியர்கள் ‘அறவழிப் போராட்டம்’ அன்றும் தொடர்ந்தது. நல்லவேளை. ஊடக நண்பர் ஜெபராஜ் எனக்கு வாகன வசதி ஏற்பாடு செய்து தந்திருந்தார்.  அவருக்கு நன்றி. மாநிலம் முழுக்கவே பஸ்கள் ஓடவில்லை என்பதால்... ஊர் போய்ச் சேருகிற வரை ரிஸ்க். ஆகவே, துளி நேரம் வீணாக்காமல் அங்கிருந்து  கீழிறங்கத் துவங்கினோம். பனி படரும் பகுதியான கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் வழக்கம் போல பனி படர்ந்திருந்தது. நான் மதுரை நோக்கிப் போகிற  விஷயம் தெரியாமல், கார்வர் மார்ஷ் வால்பாறைக்குப் போவதற்கான வழியைக் காட்டிக் கொண்டிருந்தார். தொடரின் இரண்டாவது பாகத்தில் இவரை  படித்திருக்கிறோம். மறக்கலையே!

மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக உச்சியில்... அதாவது 3 ஆயிரத்து 914 அடி உயரத்தில் இருக்கிற வால்பாறையில் சுமாராக ஒரு லட்சத்துக்கும் அதிக மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் 49 சதவீதம் ஆண்கள். 51 சதவீதம் பெண்கள். இந்த அழகிய மலைப்பகுதியில் பார்க்கவும், ரசிக்கவும் நிறைய, நிறைய  இடங்கள் இருக்கின்றன. தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்று (யார் வைத்த பெயரோ!) அழைக்கப்படுகிற சின்னக்கல்லார் எஸ்டேட் 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. மழை ஜோராக பெய்யுமாம். 9 கிலோ மீட்டரில் பாலாஜி கோயில், 14 கிலோ மீட்டரில் அக்காமலை கிராஸ் ஹில்ஸ், 23 கிலோ  மீட்டரில் சோலையாறு அணை எல்லாம் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்கள். இதுதவிரவும், இன்னும் நிறைய இடங்கள் இருக்கின்றன. சுற்றிக் காட்டுவதற்கும், விபரம் சொல்வதற்கும் நல்லதாக கைடுகள் கிடைக்கிறார்கள்.

மலைச்சாலையின் இருபுறங்களிலும் ‘சிங்கவால் குரங்குகள் நடமாடுகிற பகுதி. மெதுவாகச் செல்லவும்’ என்கிற அறிவிப்பு. நிறைய சி.வா.குரங்குகள் வாகனங்களில் அடிபட்டு பரகதி அடைந்த காரணத்தால், ஒரு மரத்தில் இருந்து மறு மரத்துக்கு (சாலையை கிராஸ் செய்ய அவசியமில்லாத படிக்கு) பாலம்  போல மரப் பலகைகள் போட்டு இணைப்பு ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள் வனத்துறைக்காரர்கள். நல்ல விஷயம். ஒரு காலத்தில் வால்பாறை வனப்பகுதியில்  ஆயிரக்கணக்கில் சி.வா.குரங்குகள் இருந்திருக்கின்றன. மரங்களையும், வனங்களையும் அழித்ததற்குப் பிறகு, அவற்றின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து  விட்டது. இப்போது (புதுத்தோட்டம் பகுதியில் 150, சின்கோனா பகுதியில் 60 என) மொத்தமே 250க்கும் குறைவான சி.வா.குரங்குகள்தான் இருக்கின்றனவாம்.  சோலைகள் இணைப்பு மூலம், இவற்றின் எண்ணிக்கையை மேலும் கணிசமாக உயர்த்த முடியும் என்கிறார்கள் சூழலியல் நண்பர்கள்.


நதிகள் இணைப்பு பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன சோலைகள் இணைப்பு? அதை தெரிந்து கொள்வதற்கு முன்பாக, வால்பாறையில் உள்ள சோலையாறு பற்றி தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். அக்காமலை பகுதியில் உருவாகி கேரள எல்லை வரை 19 கிலோ மீட்டருக்கு சலசலத்து ஓடுகிறது  சோலையாறு. ஆற்றின் இரு கரைகளும் அடர்ந்த வனங்களும், சோலைகளுமாக ஒரு காலத்தில் இருந்தன. விலங்குகளுக்கு மட்டுமே என இயற்கை எழுதிக்  கொடுத்திருந்த நிலப்பரப்பு அது. மனித சஞ்சாரம் துவங்கியதும் எல்லாம் மாறிப் போனது. சோலையாற்றின் இரு கரைகளிலும் இருந்த வனப்பரப்புகள் அழிக்கப்பட்டன. சூரிய ஒளி கூட உள்ளே எட்டிப் பார்க்க தயங்குகிற அளவுக்கு அடர்ந்த சோலைகளாக இருந்த இடங்கள் இன்றைக்கு இல்லை. சோலைகள்  இருந்த இடம் இப்போது தேயிலை, காபி தோட்டங்களாக மாறி விட்டன. 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலைத் தோட்டம், 5 ஆயிரம் ஏக்கர்  பரப்பளவில் காபி தோட்டம். இதுதவிர, 8 ஆயிரம் ஏக்கர் நிலப்பகுதி தனியார் வசத்துக்கு போய் விட்டது. அத்துடன் முடிந்ததா என்றால்... இல்லை. மேலும்  10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டு தனியார் நிறுவனங்களின் கட்டிடங்களாகவும், கெஸ்ட் ஹவுஸ்களாகவும் மாறி நிற்கின்றன.

அல்வாவை கத்தியால் வெட்டிக் கொடுப்பார்கள் என்று ஆரம்பத்தில் சொன்னேன் இல்லையா? அல்வா வெட்டுவது போல, வனப்பகுதியையும் வெட்டி  துண்டு போட்டு ஆக்கிரமித்து விட்டார்கள். அங்கிருந்த யானை, சிறுத்தை, சிங்கவால் குரங்கு, காட்டெருமை என சகலமும் கதி கலங்கிப் போயின. நான் குவழிச்சாலை போடுவதற்காக கிராமங்களில் நில ஆர்ஜிதம் செய்யும் போது, ஒட்டுமொத்த கிராம மக்களும் கைகோர்த்து உண்ணாவிரதம், போராட்டம்,  கல் வீச்சு என்று அதகளப்படுத்துவார்கள். காடுகளை மனிதர்கள் ஆக்கிரமிப்பு செய்தபோது, அதுபோல போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த வன விலங்குகளுக்கு தெரியவில்லை... பாவம். சோலைகள் இப்போது துண்டாகி விட்டன. உணவு, குடிநீர் தேடி ஒரு சோலையில் இருந்து மறு சோலைக்குச் செல்லும்  போது அவை தேயிலைத் தோட்டங்களையோ, மக்கள் குடியிருக்கிற பகுதிகளையோ கடக்க நேரிடுகிறது. தவிர்க்க முடியாமல் மனித - விலங்கு மோதல்  அப்போது நடக்கிறது.

வால்பாறையை மீண்டும் பழைய நிலைக்கு, முழுமையான சோலைப் பகுதியாக (கடவுளே நினைத்தாலும்!) இனி மாற்றமுடியாது. சரி, என்னதான் தீர்வு? இந்தக்  கேள்விக்கான பதில்தான் சோலைகள் இணைப்பு. ஒரு சோலைக்கும், அடுத்த சோலைக்கும் இடைப்பட்ட தோட்டங்களில் குறிப்பிட்ட அளவுக்கு நிலப்பரப்பை  கையகப்படுத்தவேண்டும். அப்புறம், இரு சோலைகளையும் இணைக்கிற வகையில், அந்த கையகப்படுத்தப்பட்ட பகுதியில் புதிதாக (இணைப்பு) சோலைகளை  உருவாக்கவேண்டும். இது ஒன்றும் ஆகச் சாத்தியமற்ற விஷயம் அல்ல. இப்படி சோலைகள் உருவாக்குவதன் மூலம், எதிர்காலத்தில் யானை, சிறுத்தை  உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவதை முடிந்த மட்டும் குறைக்கலாம். அவற்றின் நடமாட்டத்துக்கு என சோலைகள் உருவாக்கித் தந்து விட்டால், அப்புறம் எதற்கு பாதை மாறி வரப்போகிறது?

முதற்கட்டமாக, அக்காமலை முதல் சோலையாறு அணை வரை 19 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடிக் கொண்டிருக்கிற சோலையாற்றின் இரு கரைகளிலும் 10  மீட்டர் தூரத்துக்கு சோலைகளை உருவாக்கவேண்டும். காஞ்சமலை, இஞ்சிப்பாறை, பன்னிமேடு உள்ளிட்ட ஏழு எஸ்டேட் பகுதிகளில் ஒரு சோலைக்கும்,  மறு சோலைக்கும் இடையே உள்ள தோட்டங்களில் இணைப்பு வனங்களை / இணைப்புச் சோலையை உருவாக்கவேண்டும். இதை செய்து விட்டால் வன  விலங்குகளுடன் நாம் டிஷ்யூம் போட அவசியம் இருக்காது. இன்றே இந்தப்பணியை வனத்துறையும், அரசாங்கமும், இங்குள்ள தனியார் நிறுவனங்களுடன்  பேச்சுவார்த்தை நடத்தி, துவக்கவேண்டும். அப்படிச் செய்கிற பட்சத்தில், வால்பாறையின் அடுத்த தலைமுறை மக்கள், வன விலங்கு ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம். வால்பாறையின் அடுத்த தலைமுறை விலங்குகள், மனித டார்ச்சர்களில் இருந்தும் தப்பிக்கலாம். சரியா?

எனது வாகனம் இப்போது அட்டக்கட்டியைக் கடந்து கொண்டை ஊசி வளைவுகளின் எண்ணிக்கையை ஒவ்வொன்றாகக் குறைத்துக் கொண்டிருந்தது. 40,  39, 38... ஹேர்பின் பெண்டுகள் குறைந்து கொண்டே இருக்க, அந்த பெண்டுகளுக்கு சற்றுத் தள்ளிய பள்ளத்தாக்குகளுக்கு கீழிருந்து பனிப்புகை அடர்த்தியாக  மேலேறி வந்து கொண்டிருந்தது. கீ....ழே, வெகு கீ...ழே ஆழியாறு அணை பிரமாண்டமாக காத்திருந்தது.

மலைச்சாலைகள் முற்றாக முடிந்த தருணத்தில்,  ஆழியாறு அணைக்கு அருகே அறிவுத் திருக்கோயில் பக்கத்தில் ஒரு கடையில் வாகனம் நிறுத்தி சற்றே இளைப்பாறினோம். அங்கிருந்து கிளம்பி, பொள்ளாச்சி,  பழநி, மதுரை... என திருமங்கலம் வந்து சேர்வதற்கு இரவாகி விட்டது. அதிகாலையில் துவங்கிய எனது பயணம், இரவு சுமாராக 10 மணிக்கு முடிந்திருந்தது.  ஆழியாறு அணையின் தேநீர் விடுதியில் இருந்து புறப்படுவதற்கு முன்பாக, பின்னோக்கி ஒருமுறை திரும்பி, கடந்து வந்த பாதையைப் பார்த்தேன். மேற்குத்  தொடர்ச்சி மலைத்தொடர் பிரமாண்ட அழகில் சிறிதும் குறைவின்றி அமைதியாக நின்றிருந்தது.

இந்த மலையும், இயற்கையும், அது நமக்கு அளிக்கிற கொடைகளும் நேற்றும் இருந்தது. இன்றும் இருக்கிறது. நாளையும் இருக்கும். அது கொடுத்துக் கொண்டே  இருக்கிறது. பதிலுக்கு நாம் என்ன திருப்பிச் செய்கிறோம்? எல்லாம் தருகிற இயற்கையை கொஞ்சம், கொஞ்சமாக கொத்திப் போட்டு அழிப்பதைத் தவிர!  இயற்கையையும், சூழலையும் நாம் காக்கிற போது, அது நம்மை விடவும் பல மடங்கு அதிகமாக நம்மை பாதுகாக்கும். இது இயற்கையின் மாறா படிநிலை.  இயற்கையைப் பொருத்த வரை, நிலமும், நீரும்... நீண்டு பரந்திருக்கும் வனப்பரப்புகளும், தேயிலை போட்டு குடிக்கிற மனிதர்களுக்கு மட்டுமல்ல. தானுண்டு,  தனது பிழைப்புண்டு என வனப்பரப்புகளில் மறைந்து திரிந்து, இயற்கையைக் கெடுக்காமல் வாழ்க்கை நடத்துகிற யானைகளுக்கும், சிறுத்தைகளுக்கும், சிங்கவால் குரங்குகளுக்கும், இன்னபிற விலங்குகளுக்கும் சேர்த்தேதான்.


ஆறு பாகங்களாக விரிந்து, தொடர்ந்த இந்தத் தொடரை முடிவுக்குக் கொண்டு வருகிற கடைசிப் பாராவை இப்போது நாம் வந்தடைந்திருக்கிறோம்.  சட்டீஸ்கர் மலைகளிலும், ஜார்கண்ட் வனங்களிலும் இயற்கை சீரழிக்கப்படுவதை படித்தும், கேட்டும் வியர்த்துப் போகிறோம். நமது கண் முன்பாக, மேற்குத்  தொடர்ச்சி மலைத்தொடரை சூறையாடிக் கொண்டிருப்பதை சலனமற்று எப்படி அனுமதிக்கிறோம். வாட்டர் பாக்கெட்டை கடித்து, குடித்து விட்டு  வீசியெறிந்து செல்கிற மெகா குப்பைத்தொட்டியாக இல்லையா.

மே.தொ.மலைத்தொடரை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். உண்மையில், ஐக்கிய நாடுகள்  சபையின் யுனெஸ்கோ அமைப்பு, இமயமலையை விடவும் வயதில் மூத்ததாகக் கருதப்படுகிற இந்த புராதன மலைத்தொடரை உலக பாரம்பரியச் சின்னமாக  அறிவித்திருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? உலகின் பதிவுகளில் இருந்து விடைபெற்று விட்டதாகக் கருதப்பட்ட எத்தனையோ அரிய உயிரினங்கள் இந்த  மலைத்தொடரின் உட்கிடைகளுக்குள் மீட்டெடுக்கப்பட்ட விஷயம் தெரியுமா? மேற்குத் தொடர்ச்சி மலையும், அதன் வளங்களும், இயற்கை நமக்களித்த சொத்து. இந்தத் தொடரின் மூலம்... இயற்கையையும், விலங்குகளையும் பாதுகாக்கத் தூண்டுகிற ஒரு சிறிய விதை ஆழ நடப்படும்; அது அழியாது பாதுகாக்கப்படும் என்கிற பாசிட்டிவ் நம்பிக்கைகளுடன் வால்பாறையும்... சில யானைகளும் ஆறாவது பாகத்தின் கடைசி வரியை இங்கே எழுதி, கட்டுரைத் தொடரை இனிதே நிறைவு செய்கிறேன்.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்  -
(skrishnakumar09@gmail.com)

(கட்டுரை குறித்த உங்களது மேலான கருத்துக்கள், ஆலோசனைகள், திருத்தங்களை எதிர்பார்க்கிறேன். நன்றி.)

* இந்தக் கட்டுரை தொடரின் முதல் பகுதியை படிப்பதற்கான இணைப்பு:

* இரண்டாம் பகுதியை படிப்பதற்கான இணைப்பு:

* மூன்றாம் பகுதியை படிப்பதற்கான இணைப்பு:

* நான்காம் பகுதியை படிப்பதற்கான இணைப்பு:

* ஐந்தாம் பகுதியை படிப்பதற்கான இணைப்பு:

* குங்குமம் வார இதழில் வந்த வால்பாறை அவலங்கள் குறித்த கட்டுரையை படிப்பதற்கான இணைப்பு:

3 கருத்துகள்:

  1. சுவையான பயண அனுபவம்.

    அழகழகான படங்கள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அழகான பயணத்தொடர். முழுமையாக படித்து ரசித்தோம். ஒரு பயணத்தின் வாயிலாக நிறைய வன அரசியல் பேசியிருக்கிறீர்கள், தொடர்ந்து இதுபோல எழுத வாழ்த்துக்கள்.
    நன்றி

    கோவை ராமமூர்த்தி.

    பதிலளிநீக்கு
  3. "51 சதவீதம் பெண்கள். இந்த அழகிய மலைப்பகுதியில் பார்க்கவும், ரசிக்கவும் நிறைய, நிறைய இடங்கள் இருக்கின்றன. " இதென்ன கோர்வையாக வருகின்றது?????? பெயரிலேயே கிருஷ்ணனை வைத்து இருப்பதன் ரகசியமோ?

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...