ஞாயிறு, 18 ஜனவரி, 2015

காம்ரேட் அச்சுவும்... தவறி வந்த உண்மையும்!

ச்சுதானந்தன்... பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல? ஆளைப் பிழிந்தால், மார்க்சிஸ்ட் சித்தாந்தம் சாறாகக் கொட்டும். கம்யூனிஸ்ட் இயக்கத்தின்  முதுபெரும் தலைவர். மார்க்ஸ், ஏங்கல்ஸ் மார்க்கத்தின் வழித்தோன்றல். வயது 90 கடந்தும், இன்னும் தீவிர அரசியலில் படு தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவர். இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மிக முதுபெரும் தலைவர்களில் ஒருவர். கேரளாவில் கட்சியின் வளர்ச்சியில் இவருக்கு பெரும் பங்கிருக்கிறது. இப்படியெல்லாம் அறிமுகப்படுத்துவதை விட, மொழி, இனவாத அரசியல் செய்து, பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர் என்று சொன்னால்,  சட்டெனப் புரிந்து விடும்!

மிழக, மலையாள மக்கள் அடிப்படையில் வெவ்வேறல்ல. ஒரு மரத்தின் இரு கிளைகள். சொல்லப்போனால், தமிழ் என்ற மூத்த மொழியின், இளைய குழந்தை  மலையாளம். அந்த அடிப்படையில், தமிழர்களின் பாசக்கார சகோதரர்கள். தமிழகத்திலும், கேரளத்திலும் நடக்கிற அரசியல் நிச்சயமாக வித்தியாசமானது.  இங்கு அரசியல் செய்கிறவர் அங்கு போனால், பிழைப்பு நடத்த முடியாது. அங்கு அரசியல் வியாபாரம் செய்கிறவர் இங்கு வந்தால், காலம் தள்ளமுடியாது.  இங்கிருப்பவர்கள், பொழுதுக்கொரு பொய் சொல்லி, போட்டி வியாபாரிகளை விடவும் திறம்பட தொழில் செய்கிறவர்கள்.

அங்கிருப்பவர்களும் பொய் சொல்லிகளே. ஆனால், வித்தியாசம் இருக்கிறது. பொழுது விடிந்தால் குடையை எடுத்து கக்கத்தில் சொருகிக் கொண்டு வேட்டி  நுனியை பிடித்த படி சாலையில் நடக்கிற அப்பாவி மலையாளியை, ஏறக்குறைய தமிழகத்துக்கும், தமிழகர்களுக்கும் எதிரான ஒரு போராளியாகவே மாற்றுகிற  அளவுக்கு இன, மொழிவாதம் வளர்த்துக் கொண்டிருக்கிற பொய்சொல்லிகள். இந்தத் தொழிலில் காம்ரேட் - காங்.ரேட் வித்தியாசமே கிடையாது. ஐந்து மாவட்ட மக்களின் குடிக்கிற தண்ணீருக்கும், விளைகிற நெல்லுக்கும் ஜீவாதாரமாக இருக்கிற பெரியாறு அணையை உடைத்தே தீருவேன் என்று கொஞ்ச காலம்  முன் கோடாரியுடன் சிலிர்த்துக் கிளம்பினார்கள் காம்ரேட் அச்சுதானந்தனும், அவர் வழி வந்தவர்களும்.

பெரியாறு அணையை உடைக்க காம்ரேட் பரிவாரங்கள் புறப்பட்டு சென்ற கோலத்துக்கும், பாபர் மசூதியை இடிக்க சங்கப் பரிவாரங்கள் படை திரண்டு  சென்ற சம்பவத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் பெரிதாக நமக்கு வித்தியாசம் தெரியாது. இரண்டுமே மக்களின் உணர்வுகளை உசுப்பி விட்டு, லாபம் சம்பாதிக்கிற செயல். இன்னும் அழுத்தமாகச் சொல்வதென்றால்... மனிதர்களை மோத விட்டு, வழிகிற ரத்தத்தை நக்கி ருசிக்கிற வக்கிர செயல். காம்ரேட்டுகள்  செய்தார்கள் என்றால், அடுத்து வந்த காங்.ரேட்டுகள் (அதாங்க, காங்கிரஸ்... காங்கிரஸ்!) அதை விடவும் ஒரு படி உயரம் தொட்டார்கள்.

தமிழினம் மீது பகை வளர்த்து அரசியல் செய்வதில் யார் நம்பர் 1 என்பதில் ‘கை’க்கும், அரிவாள் சுத்தியலுக்கும் அங்கு செமப் போட்டி. இன்றைய தினம்  வரைக்கும் ரிசல்ட் வந்த பாடில்லை. ஒரு ரவுண்டில் கை ஜெயிக்கிறது. மறு ரவுண்டில் சுத்தியல் முந்துகிறது. ஆனால், தமிழார்வலர்கள் அஞ்சத்  தேவையில்லை. பெரியாறு அணையை அவ்வளவு சீக்கிரம் உடைக்கத் துணிய மாட்டார்கள். அது இருக்கிற வரைக்கும்தானே இன, மொழிவாத அரசியல்  பிழைப்போட்டமுடியும். அண்ணன் - தம்பிகளான தமிழ், மலையாள மக்களை கொத்துப் பரோட்டா அடித்து பிழைப்பு நடத்தும் கேரளாவின் தற்போதைய  முதல்வர் உம்மன் சாண்டி, மாஜி முதல்வர் அச்சுதானந்தன் இரண்டு பேரும் கைகோர்த்து கடந்த வாரம் டில்லி போனார்கள்.

இதுபோன்ற பிரிவினைவாத அரசியல் நடத்தியே, பெருந்தலைகளை பின்னுக்குத் தள்ளி பெரிய இடத்தைப் பிடித்த பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்கள்.  வேறெதற்காம்...? அதே அணை உடைப்பு சமாச்சாரம்தான். தமிழகத்தில் திமுக, அதிமுக ‘கிடா முட்டு’ அரசியலுக்கு மத்தியில், குழம்பிய குட்டையில் மீன்  பிடிப்பது போல நாமும் நான்கைந்து சீட் பிடித்து விடவேண்டும் என்று ‘நந்தவனத்தில் ஒரு ஆண்டி’ கனவில் திருவள்ளுவர் யாத்திரை நடத்திக் கொண்டிரு க்கிறார்கள் பாரதிய ஜனதா கனவான்கள். இப்போது போய் அணையை உடைக்கிற கூட்டம், அழைப்பே இல்லாமல் ஆஜரானால் நன்றாகவா இருக்கும்?  சூடாக ஒரு டீ, சமூஸா கொடுத்து, திருவனந்தபுரம் ரயிலேற்றி விட்டார் மிஸ்டர் மோடி.

வருகிற வழியிலேயே அறிக்கை தயார் செய்து விட்டார் அச்சு என்கிற அச்சுதானந்தன். அவரது அறிக்கையை படித்துப் பாருங்கள்... வேடிக்கையாக இருக்கும்.  ‘‘தமிழகத்தில் திமுக, அதிமுக இரு கட்சிகள் மீதும் ஊழல் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது (இந்த சோலார் பேனல் ஊழல் வழக்கு இருக்கிறதே... அதுவும்,  தமிழகத்தில்தான் நடக்கிறதா அச்சு சார்?). அடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைக்கவேண்டும் என்பதற்காக பெரியாறு அணை விவகாரத்தில் பிரதமர் மோடி  தமிழகத்துக்கு சாதகமாக நடந்து கொள்கிறார் (வேணும்னா... கேரளாவிலயும் ஆட்சியமைக்க அவர்களுக்கு ஒரு சான்ஸ் கொடுத்துப் பாருங்களேன்... உங்களு க்கும் சாதகமாக இருப்பார்). அணையைச் சுற்றியுள்ள மக்களின் நலன்களையும், அங்குள்ள சொத்துக்களைப் பற்றியும் அவர் கருத்தில் கொள்ளவில்லை...’’ -  இப்படிப் போகிறது அவரது அறிக்கை.

‘அணை உடையாது. பலமாக இருக்கிறது...’ என்று கார்ல் மார்க்ஸூம், ஏங்கெல்ஸூம் வந்து சொன்னால் கூட, அவர்கள் பெயர் சொல்லி பிழைப்பு நடத்துகிற  அச்சுதானந்தன் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அணை படு ஸ்ட்ராங்க் என அத்தனை விஞ்ஞானிகளும் சத்தியமடித்து விட்டார்கள். ஆனாலும், உலக  மகா விஞ்ஞானி அச்சுதானந்தன் மட்டும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். காரணம்...? அதுதான், அவரது அறிக்கையிலேயே இருக்கிறதே! தப்பித் தவறி, ஒரே  ஒரு உண்மையை அவரையும் அறியாமல் அச்சு உளறிக் கொட்டி விட்டார். அறிக்கையில் கடைசி  வரியை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்... ‘அங்குள்ள சொத்துக்களைப் பற்றி அவர் கருத்தில் கொள்ளவில்லை...’ - பெரியாறு அணை விவகாரத்துக்குப் பின்னணியில் உள்ள ஒரு விஷயம் இதுதான்.

அச்சுதானந்தன், சாண்டி வகையறாக்கள், பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் இஷ்டத்துக்கு ஆக்கிரமித்து நட்சத்திர விடுதிகளும், குடில்களும், ஹோட்டல்களும், பண்ணைத் தோட்டங்களும் அமைத்து செட்டிலாகி விட்டார்கள். அணையில் நீர்மட்டம் உயர்ந்தால், பண்ணை வீட்டில் கும்மாளமடி க்கிறவர்களுக்கு ஆபத்து. அதான், அணையை ‘டமார்’ ஆக்க திட்டம் போட்டு கைகோர்த்து டில்லிக்கு டிரிப் போகிறார்கள். இனம், மொழிவாத அரசியல்  நடத்துபவர்கள்... இந்தத் தேசத்தின் சாபக்கேடு. அடுத்த தலைமுறை அரசியல்வாதிகளாவது, மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கிறவர்களாக அமைய மாட்டார்களா...?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

4 கருத்துகள்:

  1. பூனையார் முல்லை பெரியார் விசயத்தில் கம்யூ,காங்,பி,ஜே,பி என அனைத்து கட்சிகளின் மக்கள் விரோத போக்கினை தோலுரித்து காட்டுகிறார். சிறந்த விழிப்புணர்வு கட்டுரை . இதனை அனைத்து தளங்களும் கொண்டு செல்லவேண்டும்

    பதிலளிநீக்கு
  2. Super sir. Royal saute to your excellent write up... I share this page in my face book. - Radaki. Tvm.

    பதிலளிநீக்கு
  3. காங்ரேட் , காம்ரேட் பொய்சொல்லிகளின் சொல்லாடலில் பிரிவனாவாதம்..மலையின் ஆக்கிரமிப்பாளர்களின் ஏமாற்றுதல்களில்சேட்டன்களும் சேட்சிகளும் ஏமாளிகளாய்...
    மாறி மாறி ஆட்காட்டி விரலில் மைய்யுடன்...தமிழகத்தில் தகர்க்க முடியாது பென்னிகுவிக் கோட்டையை..

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...