ஞாயிறு, 18 ஜனவரி, 2015

வலி... கூடுமா, குறையுமா?

‘என்னுடைய லவ்வர் என்று சொன்னால்... ஆன் தி ஸ்பாட், அடி விழும்’ என்று ஹன்சிகா படத்துடன் மேட்டரைப் படித்ததும் பல டீன் ஏஜ் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்களுக்கு ரத்தக்கொதிப்பு அளவு சற்றே கூடிய விஷயத்தை, அடுத்தடுத்த நாட்களில் வந்த தொலைபேசி / கடித விசாரிப்புகளின் மூலம் அறியமுடிந்தது. ர.கொ.வுக்கு மாத்திரை எல்லாம் தேவையில்லை. இந்த வாரம் படித்ததும், லெவல் நார்மல் ஆகிவிடலாம். அதற்கு முதலில் இன்னொரு முக்கியமான விஷயம் பார்த்து விடலாம்.

பகுத்தறிவு... ரொம்ப முக்கியம்!

பேசும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. அதில் முக்கியம் திணை, பால். தமிழ் உள்பட உலகின் பெரும்பான்மை மொழிகளில் திணை (Class) என்று ஒரு விஷயம் இருக்கிறது. தமிழ் இதற்கு மிகத்தொன்மையான இலக்கணம் வகுத்திருக்கிறது.
‘‘உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே;
அஃறிணை என்மனார் அவர்அல பிறவே...’’ -என்கிறது கி.மு. 3ம் நூற்றாண்டு தொல்காப்பியம்.
 விஷயம் சிம்பிள். பகுத்தறிவு உடையவர்களாகக் கருதப்படுகிற மனிதர்கள் உயர்திணை. உயிர் இருந்தும் கூட பகுத்தறிந்து செயல்பட முடியாத விலங்குகள் மற்றும் உயிரற்ற பொருட்கள் அஃறிணை (அல்+திணை -அதாவது, உயர்திணை அல்லாதது). ‘பகுத்தறிவு இலக்கண’த்தை வைத்துப் பார்த்தால், மனிதனே இன்றைக்கு உயர்திணை லிஸ்ட்டில் இடம் பெற போராடவேண்டியிருக்கும் என்பது வேறு விஷயம். மனிதன், இறைவனை உயர்திணை (Rational Class) என்கிறது திணை இலக்கணம். விலங்கு, மரம் போன்ற உயிருள்ள (அதேசமயம், பகுத்தறிவற்ற) பிற ஜீவராசிகள், கல், மண், சோப்பு டப்பா, முகப்பரு க்ரீம், சிகப்பழகு சாதனம் போன்ற உயிரற்ற பொருட்கள் அஃறிணை (Irrational Class).

அதி வச்சினதி!

அடுத்தது பால் (Gender). மனிதர்களுள் ஆணை குறிக்கும் சொல் ஆண் பால் (Masculine Gender). விஜய், சூர்யா, அஜித், ஆர்யா (யாரும் மிஸ்ஸாகலையோ?) அவன், இவன்... இதெல்லாம் ஆண் பால். பெண்ணைக் குறிக்கிற சொல் பெண் பால் (Feminine Gender). ஸ்ரீதிவ்யா, சமந்தா, அமலா பால், அவள், இவள்... இதெல்லாம் பெண் பால். மக்கள், பலர், அவர் என பன்மையை குறிப்பது பலர் பால் (Masculine / Feminine Plural). மக்கள், பலர் ஆகிய சொற்கள் அடிப்படையிலேயே பன்மைதான். மக்கள்கள், பலர்கள் என்று எழுதினால் வெட்கக்கேடு.

மொழிக்கு மொழி, இந்த ஆண் பால், பெண் பால் லிஸ்ட் மாறுபடும். உதாரணத்துக்கு, தெலுங்கு மொழி உயர்திணையில் பெண் பால் என்ற பிரிவு இல்லை. தெலுங்கில் பெண்கள் பலரை (கூட்டமாய் நின்று கும்பலாய் சிரித்துக் கலாய்ப்பவர்களை) குறித்து பேசுகிற போது உயர்திணை பலர்பால் பயன்படுத்தப்படுகிறது. அதே சமயம், கூட்டம் முடிந்து, கும்பலில் இருந்து பிரிந்து, சிங்கிளாக, தலையைக் குனிந்து கொண்டு ஒரு பெண் வந்தால்... அஃறிணை. அவள் வந்தாள் என்று தமிழில் சொல்கிறோம் இல்லையா? (ஒரிஜினல்) தெலுங்கில் ‘அதி வச்சினதி’ என்பார்கள். ‘அது வந்தது’ என்பது அர்த்தம்!

ஸ்ரீதிவ்யாவுடன் வந்தது யார்?

திரும்பவும் திணை சப்ஜெக்ட்டுக்கு வருவோம். குழந்தை, கடவுள் இரண்டும் உயர்திணை, அஃறிணை என இரு பிரிவிலும் வரும். குழந்தை சிரிக்கிறது / சிரிக்கிறான். கடவுள் சோதிக்கிறார் / சோதிக்கிறான்... எப்படி வேண்டுமானாலும் பேசலாம். சந்திரன், சூரியனும் இந்த கேட்டகரியில் வருகிறார்கள். கூடுதலாக இன்னும் ஒரே ஒரு விஷயம் மட்டும் பார்த்து விடலாம். உயர்திணை பெயர்களை அஃறிணை பொருட்களுக்கு அல்லது விலங்குகளுக்கு வைப்பார்கள் நம்மவர்கள். அஃறிணைக்கு வைக்கப்படுகிற உயர்திணை பெயர்களை விரவுப்பெயர்கள் என்கிறது தமிழ் இலக்கணம். இப்படிச் சொன்னால் குழப்பமாக இருக்கலாம்.

‘ஸ்ரீதிவ்யா வந்தார். அவருடன் ராஜாவும் வந்தது’ - இந்த வரியைப் படித்துப் பாருங்கள் ஸ்ரீதிவ்யா வந்தார். சரி, இது உயர்திணை பெண் பால். அவருடன் ராஜாவும் வந்தான் / வந்தார் என்றில்லையா இருக்கவேண்டும். வந்தது என்று இருக்கிறதே... தப்பில்லையா? ஸ்ரீதிவ்யாவிடம் கேட்டால், ‘அட... ராஜா எங்க வீட்டு செல்ல நாய்க்குட்டி சார்...’ என்கிறார் ஜிலீர் சிரிப்புடன். பாருங்கள். அஃறிணையான நாய்க்குட்டிக்கு அழகாக உயர்திணையான ராஜா பெயர். ராஜா என்று பெயர் சூட்டி விட்டதால், அந்த ‘லொள் லொள்’ உயர்திணை ஆகி விடாது. ஆகவே, இங்கு நாய்க்குட்டிக்கு வைக்கப்பட்ட ராஜா என்பது விரவுப்பெயர். சரியா? புரிஞ்சிடுச்சா?

உள்குத்து வேணாம்பா!

திணை, பால் பற்றிய இந்த புரிதல்களுடன், கடந்த வார ஹன்சிகா மேட்டருக்கு நாம் செல்லலாம். ‘இது என்னுடைய லவ்வர்டா...’ -  என்று அறிமுகம் செய்தால், ஆன் தி ஸ்பாட்... தமிழ் இலக்கணம் தெரிந்த காதலியிடம் இருந்து உங்களுக்கு பளார் விழலாம் என்று எழுதியிருந்தோம். காரணம் இல்லாமல் பெண்கள் கோபப்படுவார்கள் என்றாலும் கூட, இந்த ‘பளார்’ கோபத்தில் ஒரு நியாயம் இருக்கிறது. உயிரையும், உடலையும் தனித்தனியாக குறிப்பிடும் போது தமிழ் இலக்கணப்படி இரண்டுமே அஃறிணை. அதேசமயம், மனித உடலும் உயிரும் ஒன்று பட்டு வருமானால் உயர்திணை. ஒருமை, பன்மையை பிரித்துக் காட்ட உதவுகிற ‘அது, உடைய’ (எனது / என்னுடைய) ஆகிய இரு சொற்களும் உயர்திணைக்கு பொருந்தாது என்பது இலக்கண விதி.

‘என்னுடைய லவ்வர் (ச்ச்ச்சே.. எப்பப் பார்த்தாலும் ஒரே லவ்வர்தானா... என்று டென்ஷனாகும் ஓல்ட் இஸ் கோல்ட் பார்ட்டிகள் மன்னிக்க!) என்னுடைய மகன், என்னுடைய மனைவி என்று சொல்லுவீர்களேயானால் மகன், மனைவியை அஃறிணையாக (விலங்காக, குத்துக்கல்லாக!) குறிப்பிடுகிறீர்கள் என்று அர்த்தம். என் லவ்வர் என்று சொன்னால்தான்... அது மனித காதல். இந்த இலக்கணம் நன்றாகவே தெரிந்திருந்தும், ‘என்னுடைய மனைவி’ என்று ஏதாவது உள்குத்து வைத்து நீங்கள் பேசுவீர்களேயானால்... ஆல் தி பெஸ்ட்!

சந்திப் பிழைகளை சரி செய்கிற சப்ஜெக்ட் இரண்டு வாரம் விறுவிறுப்பாக போனது. இந்த வாரம் ஆண் பால், பெண் பால், அமலா பால்... என்று மேட்டர் லேசாக திசை திரும்பி விட்டது. பிரச்னை இல்லை. தமிழில் எந்தெந்த இடத்தில் வலி மிக வேண்டும் (அதாவது க், ச், த், ப் - என ஒற்றுப் போட்டு எழுத வேண்டும்), எந்தெந்த இடத்தில் வலி மிகக் கூடாது என்று அடுத்த வாரம் மீண்டும் விட்ட இடத்தில் இருந்து பிடிக்கலாம்... ஓ.கே?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...