புதன், 14 ஜனவரி, 2015

தையில் நீராடி தவம் தலைப்படுவாயே!

மிழகம், விழாக்களின் தேசம். சங்க காலத்தில் இருந்தே விழாக்களுக்கென தனித்தனியாக பருவம் வகுத்து, அதை மக்கள் வாழ்வியலின் ஒரு அங்கமாகவே மாற்றியிருப்பதை இலக்கியங்களின் வழியாக அறிய முடிகிறது. விழாக்கள் நூறு இருந்தாலும், தைத்திருநாளாம்... பொங்கல் பண்டிகைக்கு தனி இடம் உண்டு.
புத்தாடை, இனிப்பு, பட்டாசு என்று இன்று அமர்க்களப்படுகிற தீபாவளிப் பண்டிகை, நமது மண்ணில் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இல்லை. ஆனால்,  பொங்கல் பண்டிகை இருந்திருக்கிறது. அதற்கு முன்பாகவும் இருந்திருக்கிறது. சங்க இலக்கியங்கள் அதை தெளிவுபட உறுதி செய்கின்றன.


மிழர் மரபுகளும், பண்பாடு, பழக்கவழக்கங்களும் கொஞ்சம், கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிற காலம் இது. திருமண வீடுகளிலும், கோயில் விழாக்களிலும் நமது வாத்தியக் கருவிகளுக்கு இப்போது இடமில்லை. ஜெண்டை மேளக் கச்சேரிகளை வண்டி அமர்த்தி அழைத்து வருகிறார்கள். ஜெண்டை  மேளத்தின் அதிர்வுகளில் தமிழனின் வாத்திய கருவிகள் வாயடைத்து நிற்கின்றன. தனது அடையாளத்தை தானே தொலைத்துக் கொள்வது அவமானமாக  உணரும் நாளில் ஒருவேளை, இந்த அவலம் மாறலாம்.

அதை விடவும் கொடுமை ஒன்று இருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தின், காரைக்குடியில் உள்ள பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடியிருக்கிறார்கள். விழாவுக்கு சின்னஞ்சிறு மழலைகள், மலையாள முண்டு அணிந்து வந்து விழாவை சிறப்பித்திருக்கிறார்கள். நீங்கள் ஒரு விஷயம் கவனித்திருந்தால், புரிந்திருக்கும்.  கடந்த ஆண்டு ஓணம் விழா கேரளாவில் எந்தளவுக்கு பிரமாதமாகக் கொண்டாடப்பட்டதோ, அதற்கு சற்றும் சளைக்காத அளவில் தமிழகத்தின் சின்னஞ்சிறு  நகரங்களிலும் கொண்டாடப்பட்டது. பள்ளிகள் தோறும் ஓணம் விழா அப்படி ஒரு அமர்க்களக் கொண்டாட்டம். அத்தப்பூ கோலமிட்டு, மலையாள கலாச்சார ஆடையணிந்து, நானிருக்கிற திருமங்கலம் பள்ளிகளில் கூட ஓணம் களைகட்டியது. சரி, போகட்டும்.

ஆனால், தமிழர் திருநாளாம் பொங்கல் நாளில் மலையாள ஆடையணிந்து கொண்டாடிய அவலத்தை என்ன சொல்ல? கேரளாவில் ஏதாவது ஒரு ஊரிலாவது பொங்கல் பண்டிகை, தமிழர்களின் ஆடை, அலங்காரங்களோடு கொண்டாடப்படுகிறதா...? ஓணம் கொண்டாட அத்தப்பூ கோலம் போட்டுப் பழகுபவர்கள், தங்களுக்குத் தாங்களே எழுப்பிக் கொள்ளவேண்டிய கேள்வி இது. மதுரையில் உள்ள கல்லூரியில் நடந்த கொடுமை... உச்சக்கட்டம். பொங்கல்  கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச குத்துப் பாடல்களைப் போட்டு, மாணவர்களும், பெண் பேராசிரியைகளும் போட்ட குத்தாட்டம்... வெளிமாநிலத்தவர் பார்த்திருந்தால், நமது கலாச்சாரம் குறித்து காறி உமிழ்ந்திருப்பார்கள்.

உண்மையில், தைத்திருநாள் என்பது புராணப் புரட்டுகளைக் கடந்து, மானுட வாழ்வியலின் உன்னதத்தை விளக்குகிற திருநாள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியங்களில் சான்று இருக்கிறது.

தைத்திங்கள் குறித்து நற்றிணையும் (தைஇத் திங்கள் தண்கயம் படியும்), குறுந்தொகையும் (தைஇத் திங்கள் தண்ணிய தரினும்), புறநானூறும் (தைஇத் திங்கள்  தண்கயம் போல), ‘‘தையில் நீராடி தவம் தலைப்படுவாயே...’’ என கலித்தொகையும், இந்த விழாவின் தொன்மையை ஆவணப்படுத்துகின்றன. தைத்திருநாள்  குறித்த குறிப்புகள் இல்லாத சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் இல்லை என உறுதியாகக் கூறலாம். இந்த நூல்கள் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை.  எனும்போது, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, வரலாறு முழுக்க... தமிழர் வாழ்வியலுடன் இணைந்தே பயணித்திருக்கிறது தைத்திருநாள் பொங்கல்  விழா.

தமிழகத்தில் மட்டுமல்ல... மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரிஷியஸ்... என தமிழர்கள் எங்கெங்கு வாழ்கிறார்களோ, அந்த மண்ணில் எல்லாம், தைத்திருநாள் விழாக்கோலம் பூசிக் கொள்ளும்.

தைத்திருநாளின் பின்னணி மிகவும் எளிமையானது. இந்தத் திருநாளுக்கு பின்னணியில் புராணக்கதை பதிவுகள் எதுவும் இல்லை. கடவுள்கள் அவதாரம் எ டுத்து வந்து அசுரர்களை வதம் செய்ததாக புனைவுகள் இல்லவே இல்லை. உழைக்கும் மக்கள், இயற்கைக்கும், இன்ன பிற உயிர்களுக்கும் நன்றி தெரிவிக்கும்  ஒரு உன்னத நிகழ்வின் வெளிப்பாடாக தைத்திருநாள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. கைநிறைய விளைச்சல் கொடுத்த பூமித்தாய், விளைச்சலுக்கு  உரமிட்ட சூரியன், உடன் இருந்து ஒத்துழைத்த கால்நடைகள் என ஒன்று விடாமல், அத்தனைக்கும் நன்றி தெரிவிக்கும் நாள் இது.

நன்றி தெரிவித்தலின் அடையாளமாக சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு வழிபடுகின்றனர். பண்டைத் தமிழர் கொண்டாடிய உழவர் திருநாளின் நீட்சியே,  கரும்பு கடித்து இனிதாய் பொழுது கடத்துகிற இன்றைய பொங்கல் பண்டிகை. தமிழர்களான நாம் இந்தப் பொங்கல் விழாநாளில், நமது பாரம்பரியத்தை  பறைசாற்றும் வேட்டி, சேலை போன்ற ஆடைகளை அணிய வேண்டும். மிகவும் பழமையான தமிழர் பாரம்பரியத்தின் மகத்துவத்தை உணர்ந்து, அதன்படி  நடக்கும் கருத்தை வலியுறுத்தவே இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்றைய இளம் தலைமுறையினர் இதனை உணர்வது மிகவும் அவசியம்.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்  -

3 கருத்துகள்:

  1. பொங்கல் குறித்தும் தற்பொழுது தமிழர்கள் மீது ஏறி வரும் மலையாள வாசனையை சாடும் அருமையான கட்டுரை.

    பதிலளிநீக்கு
  2. இன்னமும் என்னென்ன சீரழிவுகள் நடக்கப் போகிறதோ...

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...