சனி, 24 ஜனவரி, 2015

வால்பாறையும்... சில யானைகளும் - 4

கோயில்களில் நீங்கள் கொடுக்கிற வாழைப்பழங்களை வாங்கி சாப்பிட்டு விட்டு, தலையைத் தொட்டு ஆசிர்வதிக்கிற யானைகளுக்கும், வால்பாறை மலைப்பகுதியில் குழந்தை, குட்டிகளுடன் வலம் வருகிற யானைகளுக்கும் குணத்தில் பெரிதாக எந்த மாறுபாடும் காணமுடியாது. வயிற்றை நிரப்புவது மட்டுமே பிரச்னை.  கோயில்யானைகளுக்கு தேடி வந்து விடுகிறது. வால்பாறை யானைகள், தேடிச் செல்கின்றன. உணவு, குடிநீருக்கான தேடல் பயணங்களின் போது, குறுக்கே  மனிதன் வந்து விடுகிறான். அப்போதும் கூட அவை சண்டைக்கெல்லாம் பாய்வதில்லை. விலகிச் செல்லவே விரும்புகின்றன. சிறுத்தைகளும் அப்படியே. இந்த  வாரம் யானைகளுடன், சிறுத்தைகளும் நம்முடன் இணைகின்றன.


ஜினி சினிமா ஹீரோ போல, யானைகளோ அல்லது சிறுத்தைகளோ... கரிக்கட்டையால் சுவரில் எழுதி வைத்துக் கொண்டு வந்தெல்லாம் யாரையும் பழி  வாங்கிச் செல்வதில்லை. விலங்கு - மனித மோதலில் உயிரிழப்பு என்பது தற்செயல் நிகழ்வு. திட்டமிட்டு நடப்பதல்ல. தந்தங்களை பிடுங்கவும், தோலை எ டுத்து விற்கவும் மனிதன்தான் திட்டமிட்டு வனம் செல்கிறானே தவிர, வனத்தில் இருந்து அவை எந்தத் திட்டமிடலுடனும் வெளியே வருவதில்லை. என்பதால்,  மனித - விலங்கு மோதல் என்று இதை வர்ணிப்பதே அடிப்படையற்ற அபத்தம்.

யானை வழித்தடங்களில் குடியிருப்புகள், ரிசார்ட்டுகள், கல்லூரி, வழிபாட்டுத் தலங்கள் கட்டுகிறீர்கள். பாதுகாப்புக்காக மின் வேலி அமைக்கிறீர்கள்.  மின்வேலியில் பாய்கிற மின்சாரம் தாக்கி எத்தனை யானைகள் இறைவனடி சேர்ந்திருக்கின்றன தெரியுமா? கேரளாவிலும், வடகிழக்குப் பிரதேசங்களிலும்  இன்னும் கொடுமை. அவற்றின் வழித்தடங்களை ஆக்கிரமித்து ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ரயிலில் அடிபட்டு பரலோகப் பிராப்தி  அடைந்த யானைகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.

யானைகள், கிராமத்துப் பெண்கள் மாதிரி. அதிக கூச்ச சுபாவமும், வெட்கமும் இயல்பிலேயே அவற்றுக்கு உண்டு. மனிதர்களைப் பார்த்து விட்டால், அருகில்  இருக்கிற மரமோ, புதரோ, பாறையோ... பின்னால் சென்று மறைந்து கொள்ளும். அந்தளவுக்கு வெட்கம், நாணம், மடம்... என்று சகலமும் கொண்ட யானை க்கூட்டம், எல்லாம் துறந்து வெளியே வருகிறது என்றால், ஒரே காரணம்... இயலாமை. வாழிட ஆக்கிரமிப்பு, உணவு, குடிநீருக்கு பற்றாக்குறை காரணமாகவே  அவை வேறு வழியின்றி வெளியே ‘தலை’காட்டுகின்றன. இந்த மூன்று டன் தாஜ்மஹால்களுக்கு, சராசரியாக ஒரு நாளைக்கு 200 கிலோ உணவு, 200 லிட்டர்  தண்ணீர் தேவைப்படுகிறது. இன்றைக்கு இருக்கிற சூழ்நிலையில், கால் வயிறு நிறைந்தாலே கவலையில்லை என்ற மனநிலைக்கு அவை மாறிவிட்டன.

சரி. மனிதக் காலடி படுகிறதற்கு முன்பிருந்த வால்பாறை இனி யானைகளுக்கு கிடைக்கப் போவதில்லை. இருக்கிற கொஞ்சமே கொஞ்சம் சோலைக்காடுகளை  அழிக்காமல் இருந்தாலே ஆயிரம் புண்ணியம். இப்படிப் பட்ட சூழலில் ‘‘யானைகள்கிட்ட இருந்து எங்களக் காப்பாத்த இந்த அரசாங்கம் ஒண்ணும் செய்ய  மாட்டங்கிது சாமீ...’’ என்று புகார் வாசிக்கும் வால்பாறை மக்களுக்கு என்னதான் தீர்வு வைத்திருக்கிறது வனத்துறை? அவர்கள் கைவசமும் கொஞ்சம் ஐடியாக்கள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த வால்பாறை பயணத்தின் போது, பஸ் ஊழியர்களின் ‘அறவழிப் போராட்டம்’ காரணமாக, மூன்று நாட்கள்  அங்கேயே முடங்கிப் போனேன் என்று முந்தைய அத்தியாங்களில் கண்ணீர் வடித்திருந்தேன். நினைவிருக்கிறதா? பொழுதுபோகாத ஒரு மாலைப்பொழுதில்,  அங்கிருக்கிற வனத்துறை ஊழியரிடம் பேச வாய்ப்புக் கிடைத்தது.

வன விலங்குகள் பற்றி அவர் சொன்னதை புத்திசாலித்தனமாக ‘ஹிண்ட்ஸ்’ எடுத்து வைத்திருந்தால், ஒரு புத்தகமே தயார் செய்து வெளியிட்டிருக்கலாம். யானை எப்படி நடக்கும், கரடி எப்படி கத்தும், சிறுத்தைக்கு போராடித்தால் என்ன செய்யும் என்று கதை போல நிஜம் கூறினார். எழுதுவதற்கு வேறு எதுவும்  சிக்காத தருணங்களில், அதுபற்றி ‘பூனைக்குட்டி’யில் எழுதுகிறேன். இப்போது, அவர் என்ன சொல்கிறார் என்று காது கொடுக்கலாம்.

‘‘யானையால, மக்களுக்கும்... மக்களால, யானைக்கும் தீங்கு வராம இருக்க வனத்துறை நிறைய முன்னேற்பாடுகளை இப்ப செஞ்சுகிட்டிருக்கு சார். உணவு  தேடி வர்ற யானைகள் வழியில எதிர்பாராதவிதமா குறுக்கிடுற போதுதான் பிரச்னை நடக்குது. இதைத் தடுக்க, இப்ப மக்களுக்கு யானைகள் நடமாடுற  இடங்கள் பத்தி முன்னெச்சரிக்கை தகவல் அனுப்பிடறோம். லோக்கல் கேபிள் டிவிக்கள் மூலமாக யானைகள் இன்னின்ன இடத்தில நடமாடுதுன்னு ஸ்க்ரோலிங் போட வைக்கிறோம்.

யானை நடமாட்டம் இருக்கிற இடம் பத்தி கேபிள் டிவி அறிவிப்பு மூலமா மக்கள் தெரிஞ்சு, அந்தப்பகுதியில நடமாடாம இரு க்கலாம். அதுதவிர, ஒவ்வொரு எஸ்டேட் மக்களோட செல்போன் நம்பரையும் வாங்கி வெச்சிருக்கோம். அந்த எஸ்டேட்ல யானை நடமாட்டம் இருந்தா,  அவங்க செல்போனுக்கு, ‘உங்க எஸ்டேட்ல, இந்த இடத்தில யானை நடமாட்டம் இருக்கு’னு தமிழ், இங்கிலீஷ் ரெண்டுலயும் மெசேஜ் அனுப்பிடறோம். மக்களால, அதுக்கோ... அதால, மக்களுக்கே இனி துன்பம் வந்திடக்கூடாதுங்கிற விஷயத்தில வனத்துறை ரொம்பத் தீவிரமா இருக்கு சார்...’’ - வனத்துறை  நண்பரிடம் பேசி முடித்திருந்த போது, மனதில் இருந்து சந்தேகங்கள் மட்டுமல்ல... செல்போன் பேலன்ஸூம் கூட வெகுவாகக் குறைந்திருந்தது.

ஆனது, ஆச்சு. சிறுத்தையையும் லேசாக ‘டச்’ பண்ணிடலாம். சிங்கங்களை தெரிந்த அளவுக்கு (ஓங்கி அறைஞ்சா... ஒன்னரை டன்னுடா!) சிறுத்தைகள் பற்றி  நமக்கு அதிகம் தெரிந்திருக்காது. காரணம், இவை ஃபாரஸ்ட் எக்ஸ்பிரஸ். வன விலங்குகளுக்கு ஓட்டப்பந்தயம் வைத்தால்... தங்கம், வெள்ளி, வெண்கலம்  எல்லாமே சிறுத்தைக் குடும்பத்துக்குத்தான். வனத்தில் வசிக்கிற விலங்குகளில் அதிவேகமாக ஓடக்கூடியவை இவை. மணிக்கு, சாதாரணமாக 60 கிலோ மீட்டர்  வேகத்துக்கு ‘பறக்குமாம்’. என்பதால், சிக்கினால்... நீங்கள் டுகாட்டி மாடல் பைக் வைத்திருந்தாலும் கூட தப்பிக்கமுடியாது. எவ்வளவு எடை கொண்ட  மிருகமாக இருந்தாலும், அடித்துக் கவ்விக் கொண்டு அசால்ட்டாக பாய்ந்து செல்லும். வருத்தப்பட்டு பாரம் சுமக்காது.

அடர்ந்த வனத்துக்குள் ஆனந்தமாக இருப்பதையே இவை விரும்புகின்றன. நீங்கள், தேயிலை காடு வளர்ப்பதற்காக பொக்லைன் வைத்து சோலைகளை  அழித்துக் கொண்டே போனால்... அவை நியாயம் கேட்டு ஐகோர்ட் கிளையிலா வந்து ரிட் பெட்டிஷன் போடும்? மனித ரத்தத்தின் சுவையை அவை அறிந்து  கொள்ள மனிதன்தான் பெரும்பாலும் காரணம் என்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள். ‘பூனைக்குட்டி’ படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதால், நீங்கள்  நாளிதழ்களை படிக்கிற அறிவுஜீவியாகத்தான் இருப்பீர்கள். ஜனவரி 18ம் தேதி நெல்லை, திருமால் நகருக்குள் மூன்று வயதான சிறுத்தைக் குட்டி ஒன்று புகுந்து  அக்கப்போர் செய்ததை அறிந்திருப்பீர்கள். சிறுத்தைக்கு அங்கு என்ன வேலை? அடுத்த வாரம் சிறுத்தையை முடித்து விட்டு, வால்பாறையில் இருந்து கீழிறங்கி  விடலாம்... சரிதானே?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -


* இந்தக் கட்டுரையின் முதல் பகுதியை படிப்பதற்கான இணைப்பு:

* இரண்டாம் பகுதியை படிப்பதற்கான இணைப்பு:

* மூன்றாம் பகுதியை படிப்பதற்கான இணைப்பு:

* குங்குமம் வார இதழில் வந்த வால்பாறை அவலங்கள் குறித்த கட்டுரையை படிப்பதற்கான இணைப்பு...

3 கருத்துகள்:

  1. சந்தேகம் : வனத்துறை செயல்படுகிறதா...?

    பதிலளிநீக்கு

  2. =================யானைகள், கிராமத்துப் பெண்கள் மாதிரி. அதிக கூச்ச சுபாவமும், வெட்கமும் இயல்பிலேயே அவற்றுக்கு உண்டு===============
    சூப்பர். இவ்வளவு நாள் நீங்கெல்லாம் எங்க இருந்திங்க பாஸ்? குணா, கோவை.

    பதிலளிநீக்கு
  3. யானையும் அழகு, உங்கள் எழுத்தைப் போல

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...