ஞாயிறு, 21 டிசம்பர், 2014

இலவ் பண்ணலாமா...?

மிழ் இலக்கணத்தைப் பொருத்த வரை, ‘அளபெடை’ என்பது நாரை பறக்க முடியாத நாற்பத்து எட்டு மடை கண்மாய் சைஸூக்கு பிரமாண்டமான சப்ஜெக்ட். அதில் இருந்து கடந்த வாரம் ஒரே ஒரு கைப்பிடி அளவு மட்டுமே ருசி பார்த்தோம் (இது, தமிழ் இலக்கணத்தை அறிமுகம் செய்கிற தொடர் மட்டுமே என்பதால்). லிமிடெட் மீல்ஸ் போல அது பசி தீர்க்கவில்லை என நிறையப் பேர் ஆதங்கப்பட்டதால், இந்த வாரம் அளபெடையை மினி மீல்ஸாக பரிமாறுகிறோம்.


ட்வின் பிரதர்ஸ்

ளபு என்றால் அளவு. சொல்ல வருகிற விஷயத்தை புரிபட வைப்பதற்காக, எழுத்துக்களை எத்தனை நேரம் ஒலிப்பது (மாத்திரை!) என்பதை விளக்குகிற இலக்கணம் இது. அதாவது, ஒரு சொல்லில் ஓசை குறையும் போது அந்த இடத்தில் உள்ள எழுத்தோடு, அதன் இணை எழுத்தையும் சேர்த்து ஓசையை முழுமை படுத்துவது. அளபெடை குடும்பம் ரொம்ப, ரொம்பப் பெரிசு. முதல் தலைமுறையில் உயிரளபெடை, ஒற்றளபெடை என இரண்டு பிரதர்ஸ்.

இளையராஜா இலக்கணம்!

உயிரெழுத்தைக் கொண்டு ஓசையை நிறைவு செய்தால் அது உயிரளபெடை. இதுக்கு நான்கு வாரிசுகள்.
இயற்கை அளபெடை: இயல்பாக சொல்லில் வருகிற எழுத்துக்கள் அளபெடுப்பது -மரூஉ (மரூ.....), கிழாஅன் (கிழா.....ன்).
செய்யுளிசை அளபெடை: சொல்லின் முதல், இடை, இறுதியில் உயிர் நெடில் எழுத்துக்கள் அளபெடுத்து வருவது - தொழாஅர் (தொழா.....ர்), உழாஅர் (உழா.....ர்). ‘கா.....தல் கவிதைகள் படிக்கிற நேரம்...’ என்று இளையராஜா பாடல் கேட்டிருக்கிறோமில்லையா? உயிரளபெடைதான்.
 காஅதல் = கா.....தல். கேட்ச் பண்ணீட்டிங்களா?
இன்னிசை அளபெடை: கேட்பதற்கு இனிமையான ஓசை தரும் ஒரே நோக்கத்தில், உயிர் குறில் எழுத்து நெடிலாகி வருவது.
(கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை).
சொல்லிசை அளபெடை: பெயர்ச்சொல்லை, வினையெச்சச் சொல்லாக மாற்றுவதற்காக அளபெடுத்து வருவது.
(உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇஇன்னும் உளேன்).
செய்யுளிசை அளபெடை ‘அ’ என்ற உயிரெழுத்து ஒசையைக் கொண்டு நிறைவு செய்யும். இன்னிசை ‘உ’ என்ற உயிரெழுத்தையும், சொல்லிசை ‘இ’ என்ற உயிரெழுத்து ஓசையையும் கொண்டு நிறைவு செய்யும் என்பது நினைவில் வைத்துக் கொள்ளவேண்டிய முக்கிய விஷயம்.

தம்ம்ம்ம்பீஇ...!

அடுத்து, ஒற்றளபெடை (ஒற்று + அளபெடை). செய்யுளில் ஓசை குறைகிற போது அதை நிறைவு செய்வதற்காக மெய்யெழுத்து அளபெடுத்து வருவது ஒற்றளபெடை. இதில், ஆயுத எழுத்தும் (ஃ) கூட அளபெடுத்து வரும். உதாரணம்: வரும்ம்ம்ம், தம்ம்ம்ம்பீ (வெண்ணிற ஆடை மூர்த்தி சினிமாவில் சொல்வாரே?) கலங்ங்கு நெஞ்சம், இலஃஃகு முத்தின், மடங்ங்கலந்த.
நாம் புரிந்து கொள்ளவேண்டிய ஒரு விஷயம்... அளபெடை இலக்கணத்தை பயன்படுத்தாத சினிமா பாடல்களோ... கேலி, கிண்டல் பேச்சுக்களோ இல்லவேஏஏஏஏஏஏஏஏ... இல்லை என்பதுதான்.

‘ஐ’ என்றால் இதுதான் அர்த்தமா?

ஒரு மொழியின் தொன்மையை, அதன் சொல் வளமே உறுதி செய்யும். அந்த விஷயத்தில் தமிழை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது. தமிழில் சொல் வளத்தை அள்ளி அடைத்து வைக்க... சுவிஸ் வங்கி லாக்கர்கள் கூட போதாது. ஓரெழுத்து ஒரு மொழி என்று தனி விஷயம் தமிழில் இருக்கிறது. சிங்கிள் எழுத்து ஒன்று சிங்கம் போல தனித்து நின்று சொல்லாகி, பிரத்யேக அர்த்தம் கொடுத்தால் அது ஓரெழுத்து ஒரு மொழி. ‘வா, போ, நீ...’ என்று நாம் அன்றாடம் பயன்படுக்கிற எழுத்துக்கள் போல இருக்கிறது இன்னும் எக்கச்சக்கம். பிற மொழிகளைக் காட்டிலும் தமிழில் ஓரெழுத்து ஒரு மொழி பயன்பாடு ரொம்ப, ரொம்ப அதிகம். உதாரணத்துக்கு இங்கே கொஞ்சம் (அர்த்தத்துடன்)...
ஆ - பசு, ஈ  - பறவை, ஊ -  இறைச்சி, ஐ -  தலைவன், ஓ -  வியப்பு, மா - பெரிய, மீ  - மேல், மூ -  மூப்பு, மை -  இருள், தா - கொடு, தீ - நெருப்பு, சீ - லட்சுமி, சே - எருது, பா - பாட்டு, பூ - மலர், பை - பசுமை, போ - செல், நா - நாக்கு. இன்னும் கொஞ்சம் அடுத்தடுத்த வாரங்களில்.

லவ் வரும்... ல வருமா?

I is walked. we is going. He are my friend..... என்றெல்லாம் பொது இடத்தில் பேசினால், கசக்கிப் போட்ட குப்பையை பார்க்கிறது போல நம்மை பார்த்து விடுவார்கள். இல்லையா? ஆனால், தமிழில் இப்படித்தான் எக்கச்சக்க தவறுகளுடன் பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருக்கிறோம். திருத்த வேண்டாமா? ‘‘என் ஆளு கேகே நகர் என்ற ஏரியாவில இருக்காடா...’’ - இப்படி சொல்லக்கூடாது. ‘என்ற’ என்கிற வார்த்தை தமிழில் இறந்தகாலத்தை குறிக்கிறது. காதல் காலாவதி ஆகி விட்டது என்று அர்த்தமாகி விடும். ‘‘என் ஆளு கேகே நகர் என்னும் ஏரியாவில இருக்காடா...’’ என்றுதான் சொல்லவேண்டும்.

லட்சுமியை இலட்சுமி என்றும். லங்காவை இலங்கை, லட்சியத்தை இலட்சியம் என்றெல்லாம் எழுதுகிறார்களே... தமிழில் முதல் எழுத்தாக ‘ல’ வராதா? வராது என்றால், லவ்வை எப்படி எழுதுவது? இலவ் என்றா...? அது கேட்க அவ்வளவு நல்லா இல்லையே? ‘அவளைப் பார்த்ததுமே எனக்கு இலவ் வந்திருச்சி மச்சி..’ என்று சொன்னால் ஏற, இறங்க பார்த்து விடுவார்களே என்கிற கவலை மனதை பிசைகிறதா? நியாயமான கவலைதான். அந்தக் கவலையை அடுத்தவாரம் தீர்த்து விடலாம், ரைட்?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

2 கருத்துகள்:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...