ஞாயிறு, 14 டிசம்பர், 2014

மதவெறி - ஒரு பொய்யும், ஒரு உண்மையும்!


தங்கள், மனிதனை நல்வழிப்படுத்துகின்றனவா...? விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அறுதியிட்டு கூறுகிற அளவுக்கு இதுவரை பதில்  கிடைத்தபாடில்லை. ஆனால், மதவெறி...?
அது நிச்சயம் அழிக்க மட்டுமே வல்லது. டைனோஸர்களின் காலம் முடிந்து, மனித இனம் மண்ணில் கால் பதித்த  நாள் துவங்கி இன்றைக்கு வரைக்கும், மதவெறி... அழிவை மட்டுமே தந்து கொண்டிருக்கிறது. சத்தியம் செய்கிற அளவுக்கு நிச்சய உண்மை.


சதைகளை இட்டு எரித்து...

தீயின் கங்குகளைக் காட்டிலும் அதிகம் அபாயமானது மதவெறி. மதவெறித் தீயின் கோர நாக்குகள் பற்றிப் பரவி, சுற்றிச் சுழன்று தழுவி எரித்த உடல்கள்,  உயிர்களின் பட்டியல், வரையறைகளுக்கு அப்பாற்பட்டது. உலகின் ஆதி நாட்கள் தொட்டு, கட்டுரையின் இந்த வரியைக் கடந்து கொண்டிருக்கிற நிமிடம்  வரையிலும் மதவெறியின் கோர நாக்குகள் அப்பாவிகளை தொடர்ந்து பதம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன. மதவெறி நெருப்பு மூட்டி, மக்களின்  சதைகளை இட்டு எரித்து, குளிர் காய்கிற கூட்டம் வரலாறு நெடுகவே தனது பணியை சிறந்த திட்டமிடலுடன் தெளிவாக செய்து கொண்டிருக்கிறது.

அறிவியலின் துணை கொண்டு மதவெறியைப் பரப்ப இணையத்தையும் இந்தக் கும்பல் கையில் எடுத்து முழுமையாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது.  மிக அண்மையில், முகநூல் பக்கங்கள் ஒரு பரபரப்பை கொளுத்திப் போட்டன. அடுப்பில் எரிகிற விறகுக்கட்டைகள் போல, கொளுந்து விட்டு எரிகிற தீயில்  சில மனித உடல்கள் கருகிக் கொண்டிருக்கின்றன. ஆகக் கொடூரமான விஷயம் இது. மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்கமுடியாது. அந்தப் படத்தை  வெளியிட்டு, அதன் கீழேயே நஞ்சு கக்குகிற சில வாக்கியங்கள்.

‘‘இந்தக் கோரம் வேறு எங்கும் நடைபெற வில்லை. நமது நாட்டிலே, ஜம்முவில் 8 இந்துக்களை உயிரோடு எரித்துக் கொன்றுள்ளனர். இச்செய்தியை எந்த டிவி  சேனல்களிலும் ஒளிபரப்பவில்லை. ஊடகங்களும் மூடி மறைத்து விட்டன. இதைப் பார்த்தும் நாம் விழித்துக் கொள்ளவில்லை என்றால், நாளை நாமும்  இதுபோல எரிந்து சாம்பலாக வேண்டியதுதான்.... இருக்க இடம் கொடுத்தோம், ஆனால், இவனோ எங்களை இருக்க விடுவதில்லை. மதவெறி பிடித்த வ ந்தேறிகள்....’’ - இப்படியாக நீள்கிறது அந்த விஷம் தடவிய வாக்கியங்கள்.

கட்டுரையைப் பதிந்தவருக்கும், பகிர்ந்தவர்களுக்கும் சில கேள்விகள்.

* டிவியோ, ஊடகமோ வெளியிடாத இந்தத் தகவல், மேற்படி மேதாவிகளுக்கு எப்படி கிடைத்தது?

* பகவத்கீதை, சம்ஸ்க்ருதம், பசுமாடு என்று புதிய தேசிய அடையாளங்களைத் தேடிக் கொண்டிருக்கிற புண்ணியவான்களிடம் இந்தத் தகவல்களை கொண்டு  செல்லலாமே? அவர்களும் கை விட்டு விட்டார்களா?

*தீவிரவாதம் செய்து பிடிபடுகிற பிற வகுப்பார்களை விட்டு விட்டு, ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டும் ‘‘------’’ தீவிரவாதிகள் என மத இனிஷியல் கொ டுத்து செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கிற ஊடகங்களா, இந்தச் செய்தியை மூடி மறைக்கப் போகின்றன? அப்படி மறைக்கவேண்டியதன் காரணம்தான் என்ன?

* ‘இருக்க இடம் கொடுத்தோம்...’ - வாழைப்பழத்தில் ஊசியேற்றுகிற வாக்கியம் இது. யாருக்கு, யார் இருக்க இடம் கொடுத்தது? வரலாற்றில் இருந்து சான்று  காட்டி நிரூபிக்க முடியுமா?

*‘மதவெறி பிடித்த வந்தேறிகள்...’ - இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி? பதிவாளர் ‘யாரை’க் குறிப்பிடுகிறார் என்ற குழப்பம் வந்து விடாதா?

நோக்கம் புரிகிறது

அதிகம் குழப்பிக் கொள்ள அவசியமில்லை. விஷயம் இதுதான். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இப்படி ஒரு சம்பவமும் நடந்து விடவில்லை. ஆதாரப்பூர்வமாக  தெரிவிக்கப்பட்டு விட்ட தகவல் இது. பாகிஸ்தான் அல்லது ஆப்கனில் நடந்த ஒரு கொடூர சம்பவம் இது. எரிக்கப்பட்டவர்களோ, எரித்தவர்களோ நிச்சயம்  வெவ்வேறு சமூகத்தவர்கள் அல்ல. இணையத்தில் மேய்ந்து திரிந்து, சேகரித்த இந்தப் படத்தை வைத்துக் கொண்டு விஷ விதையை விதைக்க நினை க்கிறவர்களின் நோக்கம் புரிகிறது. மதவெறியை, ஒரு பொய்யின் துணை கொண்டு வளர்க்க நினைக்கிறவர்களின் விருப்பம் தெரிகிறது. அவர்களுக்கு, ஒரே ஒரு  உண்மையை மட்டும் கூறிக் கொண்டு இந்தக் கட்டுரையை முடித்து விடலாம்.

சத்ருக்களை சினேகியுங்கள்

நிஜத்தில், இந்த இந்திய மண்ணில் மதவெறி கொடூரமான ஒரு எரிப்புச் செயலைச் செய்யத்தான் செய்தது. 1999ம் வருடத்தின், ஜனவரி 22ம் நாள் அந்தக் கொடூரம் நடந்தது. ஒடிசா மாநிலம் (அப்போது ஒரிசா), கியோன்ஜர் மாவட்டத்தில் அதிகாலை இருள் அகலாத நேரத்தில் நடந்தது அந்த கோரம். அதிகம்  படிப்பறிவற்ற மலைவாழ் மக்களுக்கு சேவையாற்ற வந்திருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸ், அவரது பச்சிளம் குழந்தைகள்  பிலிப், திமோதி ஆகியோர் ஒரு ஜீப்பிற்குள் தூங்கிக் கொண்டிருந்தனர். கவனிக்க... ஆடம்பர விடுதியிலோ, பங்களாவிலோ அவர்கள் தூங்கிக் கொண்டிருக்க  வில்லை. ஜீப்பில் தூங்கிக் கொண்டிருந்த பச்சிளம் பாலகர்களையும், பாதிரியாரையும் ஒரு அடிப்படைவாத இயக்கத்தைச் சேர்ந்த நாசகாரக் கும்பல் எரித்துக்  கொன்றது.

எரித்துக் கொன்றவர்கள், தங்கள் செய்கைக்காக வருந்தியவர்களல்ல. மதவெறியின் முழுமையான ஆளுமைக்குள் சிக்கியிருந்த அவர்கள், தங்கள் செயலை ஒரு  புண்ணிய காரியமாகவே அடையாளப்படுத்திக் கொண்டனர். பிஞ்சுக் குழந்தைகளின் மாமிசம் தீயில் பொசுங்கி கருகுகிற வாடையை ஆழ்ந்து சுவாசித்த  படியே, தங்கள் முகங்களில் அவர்கள் பெருமிதத்தின் அடையாளங்களையே தவழ விட்டனர்.
 தனது கணவரையும், அன்புக் குழந்தைகளையும் எரித்துக் கொன்ற பாவிகளிடமும் அன்பை வெளிப்படுத்தினார் கிளாடிஸ் ஸ்டெயின்ஸ். ‘‘உங்கள் சத்துருக்களையும் சினேகியுங்கள்...’’ என்று பைபிள் வசனத்தை மேற்கோள் காட்டி, மன்னித்தார்.

மதவெறி நெருப்பு மூட்டுகிற சகோதரர்கள், தங்கள் செயல்களை இன்னும் மேலதிகமாக தொடர்ந்து கொண்டுதான் இருப்பார்கள். சிந்திக்கத் தெரிந்தவர்கள்...  பாக்கியவான்கள்!
- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

5 கருத்துகள்:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு.கடவுள் ஆட்சி அமைப்பதாக அழைக்கும், ஐ.எஸ்.ஐ.எஸ், ஆர்.எஸ்.எஸ்போன்ற அமைப்புகள் அனைத்தும் அழிவுக்கான விதைகளே. விழிப்புணர்வுடன் வருங்கால இளைஞர்கள் இது போன்ற கட்டுரைகள் படிப்பது நலம்.

    பதிலளிநீக்கு

  3. பூனைகுட்டி நன்றாக இருக்கிறது. இதுபோல கட்டுரைகளை இனி தவிர்க்கவும். உள்நோக்கத்துடன் எழுதப்பட்டிருக்கிறது. இதை நிருபிக்கமுடியும். யாரையும் உயர்த்தவும் வேண்டாம். தாழ்த்தவும் வேண்டா.ம் மீ.ரா. செங்கை

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...