ஞாயிறு, 14 டிசம்பர், 2014

‘ஆ’ என்றால் முட்டும்; ‘ஊ’ என்றால் ருசிக்கும்!

(தமிழ் மீது பேரன்பு கொண்டவர்கள், கரை கண்டவர்களுக்கானது அல்ல இந்தப்பகுதி.
 ஃபேஸ் புக், ட்விட்டர் என மொழியின் மரபுகளில் இருந்து விலகி வெளியே சென்று கொண்டிருக்கிற அடுத்த தலைமுறையினருக்கு, நமது மொழியை ‘அவர்களது மொழியில்’ கொண்டு சேர்க்கிற எளிய முயற்சி.)



ட்டுரைக்குள் நுழைவதற்கு முன்னதாக, இரு விஷயங்கள்.

1) கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

2) வரும்ம்ம்ம்ம்... ஆனா வரா...து...

- 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய திருக்குறளுக்கும், 2 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த சினிமா டயலாக்கிற்கும் ஒரு ‘நெருக்க்க்க்மான’ ஒற்றுமை இருப்பது  உங்களுக்குத் தெரியுமா? இந்த இரு விஷயங்களுமே ‘அளபெடை’ என்கிற மையப்புள்ளியில் இருந்து பிறந்தவை.

அதென்ன அளபெடை? வார்த்தைகளினூடாக உணர்ச்சிகளை கொட்டுகிற மொழி தமிழ் என்று கடந்த அத்தியாயங்களில் பார்த்தோமில்லையா? அப்படி, உணர்ச்சிகளை  காட்டுவதற்கு பயன்படுத்துகிற இலக்கண விஷயங்களில் மிக முக்கியமானது அளபெடை. அந்தக்காலத்து திருக்குறள் துவங்கி... இந்தக் காலத்து தெருக்குரல் வரைக்கும்...  இந்த அளபெடை இலக்கணத்தை பயன்படுத்தாமல் எதுவும் ஆகாது தெரிந்து கொள்ளுங்கள்.

அரை மாத்திரை போடுங்க!

அளபு என்றால் அளவு (Measurement). கலவையான உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு, எழுத்துக்களை எவ்வளவு கால அளவில் ஒலிக்க வைப்பது என்பதை  விளக்குகிற இலக்கணம் அளபெடை. தமிழில் இன்னின்ன எழுத்தை, இவ்வளவு நேரம் ஒலித்து உச்சரிக்கவேண்டும் என்று அளவு உண்டு. இந்தக் கால அளவுக்கு ‘மாத்திரை’  என்று பெயர். ஒரு மாத்திரை நேரம் என்பது, கைநொடிப் பொழுதும், கண்ணிமைப் பொழுதுமாகும் என கிமு 4ம் நூற்றாண்டிலேயே தமிழ் இலக்கணம் அறிவியல் ரீதியில்  நெறி வகுத்திருக்கிறது.

கைநொடிப் பொழுது என்பதையும் சுலபமாகப் புரிந்து கொள்ள உதவுகிறது ‘உன்னல் காலே, ஊன்றல் அரையே, முறுக்கல் முக்கால், விடுத்தல் ஒன்றே...’ என்கிற செய்யுள்.  நொடி நேரத்தை நான்கு பாகமாக பிரிக்கிறது இந்த செய்யுள். அதாவது, விரல்களை சேர்த்து ஒரு சொடக்கு போடவேண்டும் என்று நினைக்கிற (உன்னல்) நேர அளவே கால்  மாத்திரை. அதற்காக, இரு விரல்களை ஒன்றோடு ஒன்று வைக்கும் போது (ஊன்றல்) அரை மாத்திரை கால அளவை எட்டி விடுகிறோம். சொடுக்குவதற்காக விரல்களில்  ஒரு அழுத்தம் (முறுக்கல்) கொடுக்கிறோம் பாருங்கள்... அப்போது முடிந்து விடுகிறது முக்கால் மாத்திரை. சேர்ந்திருந்த விரல்கள் ரிலீஸ் ஆகி ‘டக்’ என்று சொடக்குச் சத்தம்  கேட்கிற பொழுது... முழுதாக ஒரு மாத்திரை நேர அளவு முடிகிறது. எப்ப்பூடி?
தமிழில், குற்றெழுத்துக்களை (Short Vowels - குறில்: குறுகிய ஒலியுடைய அ, ஈ, உ, எ, ஒ) ஒரு மாத்திரை நேரத்துக்கும், நெட்டெழுத்தை (Long  Vowels - நெடில்: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ) இரு மாத்திரை நேரத்துக்கும் ஒலித்தல் வேண்டும். மெய்யெழுத்தை (Consonants) அரை மாத்திரை  நேரத்துக்கு ஒலிக்கவேண்டும். இதுதாங்க விதி.

இழுக்க... இழுக்க... சிரிப்பு!       

இப்போது அளபெடை மேட்டருக்கு வருவோம். ‘இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்ஞ்ஞ்சு போச்ச்ச்சுடா...’ பாடலை கேட்டிருக்கலாம். ‘புரிஞ்சு போச்சுடா’ என்றுதானே  இருக்கவேண்டும். எதற்காக, புரிஞ்ஞ்ஞ்சு போச்ச்ச்சுடா... என்று ஒரு அழுத்தம்? ‘மாயி அண்ணன் வந்திருக்க்க்க்கா....க... மாப்பிள்ளை மொக்கச்சாமி வந்திருக்க்க்க்கா....க’ என்ற டயலாக் ரொம்ப ஸ்பெஷல். ‘வந்திருக்காக’ என்றுதானே இருக்கவேண்டும். எதற்காக வந்திருக்க்க்க்கா....க... என்று எக்ஸ்ட்ரா அழுத்தம்? ஆனால், இந்த  எக்ஸ்ட்ரா அழுத்தம்தானே, அந்த வார்த்தையை கொஞ்சம் விசேஷமாக்குகிறது? ரசிக்க / சிரிக்க வைக்கிறது? ‘வரும் ஆனா வராது’ என்றால் அது சாதாரண டயலாக்.  ‘வரும்ம்ம்ம்.. ஆனா வரா....து’ என்று நீட்டி இழுக்கும் போதுதானே மனது சிரிக்கிறது?

 இது அளபெடை செய்கிற மாயம். ஒரு விஷயத்தை இனிமையாக ஒலிப்பதற்காக / இசைப்பதற்காக சில எழுத்துக்களுக்கு மட்டும் மாத்திரையை கூட்டி (ஒலிக்கும் கால  அளவை அதிகரித்து) ஒலிப்பது அளபெடை. தமிழ் செய்யுள்களைப் பார்த்தால், இனிய / ரசனைப்பூர்வமான ஓசை தருவதற்காக சில குறில் எழுத்துக்கள் வேண்டுமென்றே  நெடில் எழுத்துக்களாக இழுத்து விடப்படும். புரிஞ்சு போச்சுடா என்றால், அது சாதாரண சொல். புரிஞ்ஞ்ஞ்சு போச்ச்ச்சுடா என்றால், அது அளபெடை. திருக்குறளில்  எக்கச்சக்கமாக அளபெடை கையாளப்பட்டிருக்கிறது. கெடுப்பதூஉம், எடுப்பதூஉம், உண்பதூஉம் என்கிற திருக்குறள் வார்த்தைகள், விஷயத்தின் அழுத்தத்தை அதிகரித்துக்  காட்டுவதற்காக அளபெடை இலக்கணம் பயன்படுத்தி நீட்டித்து ஒலிக்கின்றன. இந்த வார்த்தைகளை கெடுப்பதூ.....ம், எடுப்பதூ.....ம், உண்பதூ....ம் என்று நீட்டி முழக்கி  ஒலிக்கவேண்டும்.

‘ஊ’ வறுவல் இருக்கா?

செய்யுள்கள், சினிமா பாடல், டயலாக்குகளில் மட்டுமல்ல... நமது அன்றாட பேச்சிலும் அளபெடை இருக்கிறது. ‘நீ என்ன பெரிய்ய்ய்ய இவனா? அட, போடாங்ங்ங்ங்...’  என்றெல்லாம் கலாய்த்துக் கொண்டிருக்கிறோமே... இதெல்லாம் அளபெடை அல்லாமல் வேறென்னவாம்?

‘ஆ... ஊ...’ன்னு ஏண்டா அதகளம் பண்ணுற... என்று வீட்டில் சின்னப்பசங்களை அதட்டுவீர்கள்தானே? அப்படி இனி சொல்லப்படாது. ‘ஆ... ஊ...’க்கும் தனி அர்த்தம் இருக்கு.  ‘ஆ’ முட்டினாலும் கூட, ‘ஊ’ ரொம்ப ருசியா இருக்கும் தெரியுமா...? ஒரு வாரம் பொறுங்க!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...