வியாழன், 9 அக்டோபர், 2014

மக்களின் முதல்வரும்... சிக்கலில் மக்களும்!

ம்மாவை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வீடுகளில் உணவு சமைக்க மறுத்து ஒரு நாள் போராட்டம் - இந்த ஒரு அறிவிப்பு மட்டும்தான் அனேகமாக பாக்கி. மற்றபடி எல்லாமே ரவுண்டு கட்டி நாளொன்றாக வந்து கொண்டிருக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் கறார் ஜட்ஜ் ஜான் மைக்கேல் டி குன்ஹா கொளுத்திப் போட்ட வெடி, ஆயிரம் வாலா சரவெடியாக தமிழகத்தில் தொடர்ந்து வெடித்துக் கொண்டே... இருக்கிறது.

முன்னாள் முதல்வர்.... மன்னிச்சுக்குங்க... ‘மக்களின் முதல்வர்’ ஜெயலலிதா ஜெயிலுக்குப் போனதற்கு பிறகான சம்பவங்கள் ரசிக்கத்தக்கதாக நிச்சயம் இல்லை. ஈழத் தமிழர் விவகாரம், காவிரி, முல்லைப் பெரியாறு விஷயங்களில் காட்டிய உறுதி என்று அவர் குறித்து பெருமைப்பட சில விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் கூட, தப்பு செய்தால் யாராக இருந்தாலும் தண்டனை சரிதானே? குற்ற வழக்குகளில் இதுதானே நடைமுறை? சட்டத்துக்கு முன் யாராக இருந்தாலும்... சமம்தானே?

இந்த விவகாரத்தில், லோக்கல் அதிமுகவினர் அடிக்கிற கூத்து இருக்கிறதே... அடடா! அகில இந்தியாவே ஆச்சரியப்பட்டு பார்க்கிறது. பெற்ற தாய்க்கு சிங்கிள் டீ, பொறை வாங்கிக் கொடுத்திராத பாசக்கார தொண்டர்கள், ‘அம்மா.. அம்மா....’ என்று கதறி அழுத படி மொட்டை அடிக்கிறதையும், தீக்குளிக்க முயல்கிறதையும் டிவியில் பார்க்கிற போது, ‘இவய்ங்க, இவ்வளவு நல்லவய்ங்களா’ என்று உச்சி மண்டையில் சுர்ர்ர்ர்ங்குது.
அடுத்தது, அவர்கள் அடித்து ஒட்டுகிற போஸ்டர்கள். ஏடியெம்கே உறுப்பினர் கார்டை காட்டி விட்டு, ஏவிஎம்மில் சினிமா டயலாக் எழுதப் போகலாம். பாசமலர், பாகப்பிரிவினை சென்டிமென்ட்டெல்லாம் பக்கத்தில் நிற்க முடியாது. ‘‘நீதி தேவதையே... தர்ம தேவதைக்கு தண்டனையா?’’ என்று தேவதைகளுக்கு இடையே மோதல் ஏற்படுத்துகிறது ஒரு போஸ்டர்.
‘‘தெய்வத்துக்கு மனிதன் தண்டனை கொடுப்பதா?’’ என்ற போஸ்டர் வாக்கியம்தான் உச்சக்கட்டம். சென்னையில் சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம் நடத்திய போது, முதுகுக்குப் பின்பாக அடித்து ஒட்டியிருந்தார்கள். என்ன செய்வது... திறமையை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு! ஆனால், அவர்களுக்கு மதுரையில் இருந்து சென்றது போஸ்டர் சவால். ‘‘அனுப்பி வைத்தால் தமிழக முதல்வர். அடைத்து வைத்தால் கர்நாடக முதல்வர்...’’ - சித்தராமையா படித்திருந்தால்... வெலவெலத்துப் போயிருப்பார்.

இதெல்லாம் கூட ஒரு குட்டிப் புன்னகையுடன் சகித்துக் கொள்ள முடிந்தது. மதுரை நகர வீதிகளில் பார்த்த ஒரு போஸ்டர் தான், ஆளை கிறங்கடித்து கீழே விழச் செய்கிறது.

‘‘காவிரி வெச்சிக்கோ... அம்மா குடு....’’ என்று ஒரு குட்டிக் குழந்தை கையை, காலை அடித்துக் கொண்டு அழுகிற மாதிரி வால் போஸ்டர். தமிழகம் முழுவதுமே அடித்து ஒட்டியிருக்கிறார்கள். நீங்களும் பார்த்திருக்கிலாம். காவிரி என்பது பெரும்பங்கு தமிழக விவசாயிகளின் ஜீவாதாரப் பிரச்னை. அது இல்லாமல் போனால் ஆயிரக்கணக்கில் விவசாயக் குடும்பங்கள் தற்கொலைக்குத் தள்ளப்படும். வறட்சி பெருகும். விளைவாக, கொள்ளை, வழிப்பறிகள் அதிகரிக்கும். அந்தக் குட்டிக் குழந்தைக்கு இதையெல்லாம் புரிந்து கொள்கிற அறிவோ, மூளை வளர்ச்சியோ இருக்காதுதான். போஸ்டர் அடித்த புண்ணியவான்களுக்குமா அது இல்லாமல் போகும்? அம்மாவிடம் நல்லபெயர் வாங்க காவிரியும், முல்லைப் பெரியாறும்தானா கிடைத்தது?

அதிமுக எம்எல்ஏக்களைக் காட்டிலும் ஒரு படி விசுவாசம் காட்டும் சினிமாக்கார எம்எல்ஏ ஒருவர் அம்மாவைப் பார்க்க பரப்பன அக்ரஹாரா போயிருந்தார். சினிமாக்காரர்களைப் பார்த்தால் டிவி, பத்திரிகை கேமராக்கள் ஓடி வரத்தானே செய்யும்.
‘‘அம்மா இல்லாமல் தமிழகமே இருள் சூழ்ந்திருக்கிறது...’’ என்றார். ‘கூலிங் கிளாசை கழட்டிட்டு பாருங்க நாட்டாமை...’ என்று பதில் ஸ்டேட்டஸ் பறக்க விட்டார்கள் ரசிகர்கள். அவரும் படித்திருப்பார். என்ன செய்வது? அரசியல் வியாபாரத்தில் நஷ்டம் வந்து விடக்கூடாதில்லையா?
 ‘குன்ஹா ஜட்ஜே இல்லை... அவர் இன்னும் பி.எல் அரியர் முடிக்கவே இல்லை’ என்று யாராவது வசனம் எழுதித் தந்திருந்தால்... நாட்டாமை இன்னும் கலக்கியிருப்பார். நடிகர்களுக்கு ஜெயா தொலைக்காட்சி அவார்ட் கொடுப்பதாக இருந்தால், சென்னையில் திரையுலகக்காரர்கள் நடத்திய உண்ணாவிரதத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். நடிப்பில் பின்னி பெடலெடுத்திருந்தார்கள்.


ஆனாலும், சட்டசபையில் நடந்த கண்ணீர் காட்சிகளை ‘பீட்’ செய்வது சிரமமே. இந்தியாவிலேயே... ஏன், உலகத்திலேயே இப்படி ஒரு பதவியேற்பு விழா இங்குதான் நடந்திருக்கும்.
கண்ணீர் விட்டபடியும், கதறி அழுத படியும், துக்கம் தொண்டையை அடைக்க.... ஒவ்வொரு அமைச்சரும் பதவி பிரமாணம் ஏற்ற போது, பழைய கால பீம்சிங் படங்கள் ஞாபகத்துக்கு வந்து போனது. கவர்னர் ரோசய்யா கூட ஒரு சமயம் லேசாக கண்களை துடைத்துக் கொண்டார். அமைச்சர்களின் அழுகையைப் பார்த்து, அவருக்கும் பொத்துக் கொண்டிருக்கலாம். பாவம், அவரும் மனிதர்தானே?

ரஷ்யப் புரட்சி, பிரெஞ்ச் புரட்சி, ஜெர்மானியப் புரட்சி... என்று உலக சரித்திரம் எத்தனையோ போராட்டங்களைக் கடந்து வந்திருக்கிறது.
தமிழகத்தில் நடந்த ஒப்பாரிப் புரட்சி உலகம் அறிந்திராதது. தீர்ப்பு வந்த தேதியில், சென்னையின் பிரதான சாலைகளில் அதிமுக மகளிர் அணி பெண்கள் நெஞ்சில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுத காட்சியை இப்போது பார்த்தாலும், ஷட்டரை திறந்த மேட்டூர் அணை போல, நம் கண்களில் இருந்து தண்ணீர் வெள்ளமாக பாய்ந்து புறப்படும்.

கட்டுரையை முடிக்கிற நேரம் வந்து விட்டது. அமைச்சர்களும், அதிமுக பிரமுகர்களும் அடிக்கிற கூத்தெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை என்று போராட்டத்துக்கு தூண்டி விட்ட போது கூட பெரிதாக தெரியவில்லை. தனியார் பள்ளிகளும் போராட்டத்தில் குதிக்கப் போவதாக அறிவிப்பு வந்தபோதுதான் அலர்ட் ஆனார்கள் மக்கள். எதிர்ப்புக்குப் பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. எல்கேஜி, யூகேஜி குழந்தைகள் தான் பாவம். அம்மாவுக்காக போராட்டக் களத்தில் குதித்து வரலாற்றில் இடம் பிடிக்கிற வாய்ப்பு அவர்களுக்கு இல்லை.

அடுத்து நடக்கப் போகிற தேர்தலில் எம்பி, எம்எல்ஏ, சேர்மன், கவுன்சிலர் இடங்களை வாங்குவதற்காக அதிமுக தொண்டர்கள் கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆட்டம் பார்த்து ஊடகங்களே ஒரு நிமிடம் கிறங்கி கிர்ர்ர்ர்ரடித்து நிற்கின்றன. ஜாமீன் மனு விசாரணையின் போது நடந்தது ஒரு உதாரணம். ‘அம்மாவுக்கு ஜாமீன்... நீதி வென்றது’ என்று வந்த பிரேக்கிங் நியூஸ்களைப் பார்த்து தொண்டர்கள் லட்டு, பட்டாசு முடிப்பதற்குள், ‘இல்லை.. இல்லை... ஜாமீன் இல்லை’ என்று வேறொரு பிரேக்கிங் நியூஸ்.

நடக்கிறதெல்லாம் பார்க்கிற போது... சிகரெட்டை மேலே தூக்கிப் போட்டு, கச்சிதமாக வாயில் கவ்வுகிற பெரிய நட்சத்திர நடிகர் நம்ம ஸ்டேட்டைப் பத்திச் சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருகிறது....       ‘ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது!’
- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்  -

3 கருத்துகள்:

  1. பூனைக்குட்டி புலிக்குட்டியாக வந்ததில் மகிழ்ச்சியே..

    நண்பர் கிருஷ்ணகுமார் அவர்களை மீண்டும் வரவேற்கிறேன். நடப்புத் தமிழகத்தைப் பற்றிய நல்ல கட்டுரை. தொடர்க...

    பழ. தமிழார்வன்

    பதிலளிநீக்கு
  2. தராசு தட்டுகள் எப்போதும் சமமாக இருப்பதில்லை. சில நேரங்களில் சமமாகின்றன. அப்படியான ஒரு நிகழ்வு பெங்களூருவில் நடைபெற்றுள்ளது. தேசியமாகி விட்ட லஞ்சத்தினை தண்டிப்பதற்கு நீதிமன்றங்கள் பேனா முனைகளை உடைக்காமல் தீர்ப்பெழுத முடியாது. அயல்நாடுகளில் லஞ்சத்திற்கான தண்டனையென்பது சிரைச்சேதம் வரை செல்கிறது. ஆனால் இந்தியாவில் 11 நாட்களுக்குள் நடைபெற்ற கூத்துக்களை ஊடகங்கள் வெளியிட்டுக் கொண்டேயிருக்கிறது. ஜனநாயகத்தின் கடைசி புகலிடம் நீதிமன்றங்கள் தான். அப்படியான நீதிமன்றங்களில் அசந்து உறங்கும் நீதிதேவதைகள் 17 ஆண்டுகளுக்குப்பின் துயில் எழுந்துள்ளாள். நீதியின் பெயரால் நடத்தப்பட்ட வழக்கை நீதியின் வாயிலாக சந்திப்பதற்குப் பதில் தீக்குளிப்பு, உண்ணாவிரதம், ஒப்பாரி நாடகங்கள் மூலம் கேலி செய்வதை நீதியையும்,நீதித்துறையையும் கேலி செய்வதற்கு சமமாகும்.

    பதிலளிநீக்கு
  3. இது பூனைக்குட்டி Brother புலிக்குட்டி எழுதினது மாதிரி தெரியுதே???

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...