சனி, 25 அக்டோபர், 2014

ரஜினின்னா ‘லகலக’ கிளவின்னா ‘கலகல’


(இணையத்தில் எப்போதும் மேய்ந்து கொண்டிருக்கிற இளைய தலைமுறைக்கு, நமது மொழியை, அவர்களுக்கான நடையில் அறிமுகப்படுத்துகிற எளிய முயற்சி இது.)
நாம் பேசுகிற, பயன்படுத்துகிற சொற்களின் பொருள் குறித்து ஆராய்வது சொற்பொருளியல் (SEMANTICS). ஒரு சொல்லின் பொருள் பிளாக் அண்ட் வொய்ட் காலத்தில் ஒரு மாதிரியாக இருந்திருக்கும். ஈஸ்ட்மென் கலர் காலத்தில் கொஞ்சம் மாறியிருக்கும். இப்போது ஒப்பிட்டுப் பார்த்தால்... ‘அப்டியே ஷாக் ஆயிட்டேன்’ என்று உங்களை திக்குமுக்காட வைக்கிற அளவுக்கு அர்த்தம் தலைகீழ் மாற்றத்தை சந்தித்திருக்கும்.

நெய் என்பது, உங்கள் பாட்டிக்கும் பாட்டி காலத்தில் பொதுவான பெயர். எள்ளில் இருந்து / பாலில் இருந்து / கடலையில் இருந்து / இன்னும் எதில் இருந்து எடுத்தாலும் அது நெய் தான். இப்போது அப்படியில்லை. பாலில் இருந்து கிண்டி, கிளறி தயாரிப்பது மட்டுமே இப்போது ‘கம கம’ நெய். மற்றவை தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் என்று தனிக்கட்சியாகி விட்டன. தேங்காய், கடலை எண்ணெய்களில் இருந்து வித்தியாசப்படுத்திக் கொள்வதற்காக, எள்ளில் இருந்து எடுக்கிற எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிவிட்டது.

‘கப்பு’ தாங்கலைடா சாமீய்...!

தமிழ் மொழியில் நடந்துள்ள சொற்பொருள் மாற்றங்களை டாக்டர் மு.வ. 15 தலைப்புகளில் வகைப்படுத்தி பிரித்து வைத்திருக்கிறார். நாம் கடந்த வாரங்களில் பார்த்த இடக்கரடக்கல், மங்கல வழக்கு, குழூஉக்குறி எல்லாம் இந்த லிஸ்ட்டில் தான் வருகின்றன. இந்த 15ல் ஒன்று இழிபொருட்பேறு (DEGRADATION). ரொம்ப உயர்வான அர்த்தத்தில் பேசப்பட்ட ஒரு சொல், இப்போது படு கேவலமான அர்த்தத்தைத் தருகிற மாதிரியான மாற்றத்தைச் சந்தித்தால்... அது இழிபொருட்பேறு.


காலை, இரவு என இருவேளை பல் தேய்த்தல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்கிறது நவீன மருத்துவம். சரி! ஒரு வேளை கூட (ஒழுங்காக) தேய்க்காமல் இருந்தால் எப்படி? பக்கத்தில் வந்தாலே... கூட்டம் தெறித்து கலைந்து விடாதா? ‘நாற்றம் தாங்கலைடா சாமீய்ய்...’ என்று ஓடுவார்கள்தானே? உண்மையில், ‘நாற்றம்’ என்கிற சொல்லுக்கான அர்த்தமே வேறு. ‘நல்ல மணம், இனிமையான வாசனை’ என்கிற உயர்ந்த அர்த்தங்களை குறிக்கிற வார்த்தையாக ஒரு காலத்தில் இருந்தது. அதன் தலையெழுத்து... கேட்டாலே, ஓட வைக்கிற பரிதாப சொல்லாக இன்று சிறுமைப்பட்டு விட்டது. இது, இழிபொருட்பேறு.


டோன்ட் வொர்ரி கேர்ள்ஸ்!

‘பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா; இல்லையா?’ -  தமிழறிஞர்களிடம் இந்தக் கேள்வியை கேட்டால்... ‘நாற்றம் அடிக்கும்’ என்பார்கள். - கடந்தவார கட்டுரை இப்படி முடிந்திருந்தது. படித்த பல டிரெண்டி டீன் ஏஜ் பெண்களுக்கு ஷாக். நல்லதாய் வேறு என்ன ஷாம்பு வாங்கலாம் என்றெல்லாம் யோசித்திருக்கிறார்கள். இந்த கட்டுரையைப் படித்ததும் அந்தக் கவலை போயிருக்கும் என நம்புகிறேன். நாற்றம் என்றால், தமிழில் நல்ல மணம், இனிமையான வாசனை என்ற உயர்ந்த அர்த்தங்களும் இருந்திருக்கிறது. இப்ப ஓ.கே.தானே கேர்ள்ஸ்...?


இதுபோலவே, பொதுப்பொருட்பேறு (WIDENING) - எள்ளில் இருந்து எடுக்கப்பட்டது முன்பு எண்ணெய். இப்போது தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், விளக்கெண்ணெய்... என்று எல்லாமே எண்ணெய் தான். சிறப்புப் பொருட்பேறு (NARROWING) - பொன் என்ற சொல் முன்பு இரும்பு, செம்பு, வெள்ளி, தங்கம் என அனைத்து உலோகங்களையும் குறிக்கிற சொல். இப்போது 24 / 22 கேரட்டுக்கு மட்டுமே அது பொருந்துகிறது. இல்லையா?


லகலக... என்றால், அது ரஜினி. சரி. கலகல... என்றால்? ‘கிளவி’ என்கிறார்கள் தமிழறிஞர்கள். ஏனாம்...?

ஒரு வாரம் கழித்து கிளவியை சந்திக்கலாம்.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

2 கருத்துகள்:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...