செவ்வாய், 21 அக்டோபர், 2014

ப்ரீதம் சட்டையில் தமிழ்!


பெயர் - ப்ரீதம் முண்டே, வயது 32. மருத்துவம் படித்திருக்கிறார். டாக்டர் வேலை பார்க்கவோ... மருந்து, மாத்திரை கொடுக்கவோ நேரம்தான் இல்லை. குடும்பப் பின்னணி அப்படி. அப்பா ஒரு விஐபி. ஆனால், இப்போது இல்லை. அவர் பெயர் கோபிநாத் முண்டே. இப்போது ஞாபகம் வந்திருக்கலாம். பாஜ கட்சியில் மூத்த தலைவர். மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்ததும். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரானார். அவர் நேரம், அமைச்சர் பதவியேற்ற சில நாளில், சாலை விபத்தில் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார்.
வருக்கு இரண்டு மகள்கள். பங்கஜா, ப்ரீதம். மூத்தவர் பங்கஜா அப்பா
காலத்தில் இருந்தே பாஜ எம்எல்ஏ. மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு அக்டோபர் 15ம் தேதி தேர்தல் நடந்தது. முண்டே மரணமடைந்ததால், காலியாக இருந்த இருந்த பீட் லோக்சபா தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. பங்கஜா சட்டசபைக்கும் (பார்லே தொகுதி), கோபிநாத் மறைவால் காலியான பீட் லோக்சபா தொகுதியில் இளையவர் ப்ரீதமும் போட்டியிட்டனர். அக்கா, தங்கை இருவருமே ஜெயித்து விட்டனர். தங்கை ப்ரீதம், தனது வெற்றி மூலம் நாட்டையே திரும்பிப் பார்க்கச் செய்து விட்டார்.

வெற்றி என்றால்... சாதாரண வெற்றி அல்ல. ப்ரீதம் பெற்ற வாக்குகள் 9 லட்சத்து 22 ஆயிரத்து 416. எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் அமைச்சர் அசோக் பாட்டீலுக்கு கிடைத்தது 2 லட்சத்து 26 ஆயிரத்து 95 ஓட்டு. ப்ரீதம் 6 லட்சத்து 96 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அசாதாரணமான, படு பிரமாண்ட வெற்றி பெற்றிருக்கிறார். இந்திய தேர்தல் வரலாற்றில் இது புதிய சாதனை.

மேற்கு வங்க மாநிலம், அரம்பாக் லோக்சபா தொகுதியில் 2004ம் ஆண்டு கம்யூனிஸ்ட் வேட்பாளர் அனில் பாசு 5 லட்சத்து 92 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே இதுவரை ரெக்கார்டாக இருந்தது. அதை நொறுக்கி விட்டார் ப்ரீதம்.

எல்லாம் சரி. எங்கேயோ மகாராஷ்டிர மாநிலத்தில் ஜெயித்த ப்ரீதம் முண்டேவை எதற்காக பூனைக்குட்டி இந்தளவுக்கு ப்ரமோட் செய்கிறது?

இருக்கிறது மேட்டர்.

வெற்றி பெற்ற கையோடு மக்களையும், பத்திரிகையாளர்களையும் சந்திக்க வந்தார் ப்ரீதம். அக்கா பங்கஜா தான், அவரை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். நீலக்கலர் ஷல்வார் ஆடை அணிந்து, அதற்கு மேலே அவர் போட்டிருந்த துப்பட்டா... தமிழ் எழுத்துக்களால் ஆனது. அ, ஆ, இ.... 12 உயிர் எழுத்துக்கள், க, ங, ச, ஞ... 18 மெய்யெழுத்துக்கள் என... தமிழின் 247 எழுத்துக்களும் அச்சிடப்பட்ட அசத்தல் துப்பட்டாவை மேலே அணிந்து வந்து அசத்தினார் (அவரது கருத்தறிய பூனைக்குட்டி முயற்சிக்கிறது. கிடைத்தால், விரைவில் இணைக்கப்படும்).

தாய்மொழியான மராத்தி அல்லது வேறு ஆதிக்க மொழிகளின் எழுத்துக்கள் அவரது ஆடையில் இல்லை. தமிழ் இருந்தது. இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ப்ரீதம் மட்டுமல்ல... இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட உத்தர்காண்ட் பாஜ எம்பி தருண் விஜய் பற்றி நாம் நிறையவே படித்திருக்கலாம். அவரது தமிழ் காதல் அலாதியானது. சமீபத்திய பாராளுமன்ற விவாதத்தில் அவரது பேச்சை குறித்து வைத்திருக்கவேண்டியது அவசியம்.


‘‘வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்திய மொழிகளில் தமிழ் தனித்தன்மையும், சிறப்பு வாய்ந்ததுமாகும். தமிழ் மொழியில் எழுதப்பட்ட தொல்காப்பியம் 5 ஆயிரம் ஆண்டு பழமையானது. சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி போன்றவை தமிழ் இலக்கியம் நமக்களித்த மாபெரும் கொடை. தமிழ் இலக்கியத்தின் பெருமையை சந்தேகத்துக்கு இடமின்றி உலகுக்கு பறைசாற்றுவது கம்பராமாயணம்.

இன்றைய காலகட்டத்துக்கும் உரித்தாகும் வகையில் அமைந்தது திருவள்ளுவரின் திருக்குறள். திருக்குறளின் சுவடுகள் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன. நம் நாட்டில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் உலக அளவில் கொண்டிருந்த செல்வாக்கும், அவர்கள் சமூகத்துக்கு ஆற்றிய நற்சேவையும் நம்மில் எத்தனை பேருக்கு முழுமையாகத் தெரியும்? அசோகரும், விக்ரமாதித்யர் போன்ற மாபெரும் சக்கரவர்த்திகள் மட்டும்தான் இந்தியா எனக் கருதக் கூடாது. சோழர்கள், பாண்டியர்கள் போன்ற மரியாதைக்குரிய மன்னர்களையும் நமது வரலாறு கண்டுள்ளது.

இந்திய மொழிகளுக்கு எல்லாம் மரியாதை அளிக்கும் வகையில், திருவள்ளுவர் பிறந்த தினத்தை (தை 2) ‘இந்திய மொழிகள் தினம்’ எனக் கடைப்பிடிக்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும். தேசிய ஒற்றுமையை கொண்டு வரும் வகையில், வட மாநிலங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை விருப்பப் பாடமாக மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் வாய்ப்பை மத்திய அரசு உருவாக்க வேண்டும்...’’

- லோக்சபாவில் தருண் விஜய் பேசிய இந்தப் பேச்சு... தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் கூட பேச நினைத்திராதது.

தருண் விஜய், ப்ரீதம் மட்டுமல்ல... பட்டியல் இன்னும் நீளமானது. ஜனாதிபதியாக இருக்கிற பிரணாப் முகர்ஜியும் இந்தப் பட்டியலில் இருக்கிறார். தமிழின் தொன்மை, பழமை, மேன்மை வடமாநிலத்தில் இருக்கிற பல தலைவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. செம்மொழிகளில் முதன்மையானதும், முக்கியமானதும் இது என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள் (ஆபத்தும், அதுதான்).

அவர்களுக்கெல்லாம் தெரிந்தது... நமக்கு எப்போது தெரியப்போகிறது?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...