ஞாயிறு, 12 அக்டோபர், 2014

தெலுங்கரசியை தெரியுமா?


(தமிழ் மீது பேரன்பு கொண்டவர்கள், கரை கண்டவர்களுக்கானது அல்ல இந்தப்பகுதி. ஃபேஸ் புக், ட்விட்டர் என மொழியின் மரபுகளில் இருந்து விலகி வெளியே சென்று கொண்டிருக்கிற அடுத்த தலைமுறையினருக்கு, நமது மொழியை ‘அவர்களது மொழியில்’ கொண்டு சேர்க்கிற எளிய முயற்சி.)




RAJA KILLS RAMU... பாருங்கள், ம்ம்ம்மூன்றே வார்த்தை. ஆனாலும், ஒன்று மாறினாலும் அர்த்தம் மாறிவிடும். எஃப்.ஐ.ஆர். போடுவதில் எக்கச்சக்கமாய் குழப்பம் ஏற்பட்டு விடும். நமது மொழியில் அந்தப் பிரச்னையே இல்லை. நேர்கூற்று வாக்கியத்தை (DIRECT SPEECH) எப்படி மாற்றி, மாற்றி, மாற்றி எழுதினாலும், பொருளோ அல்லது அந்த வாக்கியம் கூற வருகிற செய்தியோ இம்மி மாறாது. மேலே பார்த்த ஆங்கில வார்த்தையையே எடுத்துக் கொள்ளுங்கள். ராஜா ராமுவைக் கொன்றான். இந்த நேர்கூற்று வாக்கியத்தை, ‘ராமுவை ராஜா கொன்றான், கொன்றான் ராஜா ராமுவை, ராமுவை கொன்றான் ராஜா, ராஜா கொன்றான் ராமுவை...’ - எப்படி எழுதினாலும் எஃப்.ஐ.ஆர். மாறாது. ரைட்டா?

‘லவ்’ வருமா?

ஆங்கிலத்தில், சொற்களை எழுதும் போது ஒரு வகையாகவும், ஒலிக்கும் போது வேறு வகையாகவும் இருப்பது தெரியும்தானே? ‘டாக்’ என்று ஒலிக்கிற சொல்லை, ‘DOG’ என்று வார்த்தைப் படுத்தவேண்டும். படித்துப் பாருங்கள். டி.ஓ.ஜி. என்றுதானே படிக்க முடியும்? ‘டாக்’ என்று இல்லையே! தமிழில் சான்ஸே இல்லங்க.  ‘நாய்’ இந்த சொல்லை மொத்தமாக படித்தாலும், நா+ய் என்று தனித்தனி எழுத்துக்களாக படித்தாலும் ஒலிப்பது ஒரே மாதிரித்தான்.
 ‘அன்பு’ - இதை அப்படியே படித்தாலும் அன்புதான். அ+ன்+பு என்று தனித்தனி எழுத்துக்களாக படித்தாலும் அன்புதான். ஆங்கிலம் அவ்வளவு அன்பாக இராது. ‘LOVE’ - இதை ‘லவ்’ என்று உச்சரிக்கவேண்டும். எழுத்துக் கூட்டிப் படித்தால்... ‘லவ்’ வராது. எல்.ஓ.வி.இ. தான் வரும். பரவாயில்லையா!
(இந்தப் பிரச்னையை சரி செய்வதற்காக, ஆங்கில பேரறிஞர் பெர்னாட்ஷா பெரு முயற்சி செய்தார்... ஆனாலும் முடியவில்லை என்பது எக்ஸ்ட்ரா தகவல்).

புட்டுகிச்சி... மங்கலமா?

போன வாரம் ‘இடக்கரடக்கல்’ பார்த்தோமில்லையா? இந்த வாரம் மங்கல வழக்கு (MELIORATIVE TENDANCY). பொதுவான ஒரு இடத்தில் பேசும் போது, அமங்கலமான சில வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்கச் சொல்கிறது தமிழ் நாகரிகம். அந்த வார்த்தைகளுக்குப் பதில், மங்கலகரமான வேறு சொற்களை இட்டு நிரப்பி சொல்வதே மங்கல வழக்கு. ‘மரணம்’ என்பது கலக்கம் தரக்கூடிய, மகிழ்ச்சி கெடுக்கக்கூடிய வார்த்தை. அதை நேரடியாக அப்படியே சொல்வது டென்ஷன் ஆக்கி விடும். யாராவது மரணமடைந்து விட்டார் என்கிற தகவலை ‘காலமானார், மறைந்தார், இறைவனடி சேர்ந்தார், வைகுண்ட பிராப்தி அடைந்தார்....’ என்று எக்கச்சக்கம் பதங்களில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி கூறுவதே மங்கல வழக்கு. ‘இழுத்துக்கினு கிடந்துச்சே... அந்த கேசு, நேத்து நைட்டு புட்டுகிச்சி...’ - என்றெல்லாம் பேசி, மங்கல வழக்கை ‘டார்ச்சர்’ படுத்தப்படாது!



சில பெயர்களைக் கேட்கும் போதே... மனதுக்குள் ஒரு கற்பனை டாலடிக்கும். மலையாளச்செல்வி, தெலுங்கரசி... இந்தப் பெயர்களை கேட்கும் போது என்ன தோன்றுகிறது...? எக்ஸாக்ட்டாக... ஏழே நாளில்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

3 கருத்துகள்:

  1. அ.தமிழ்ச்செல்வன்12 அக்டோபர், 2014 அன்று AM 11:29

    மீண்டும் பூனைக்குட்டி தன் சேட்டைகளை துவக்கியதை வரவேற்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. மாற்று மொழியின் மோகத்தில் தாய்மொழியை தவிர்ப்பது தற்போதைய தலைமுறையின் அறியாமையை காட்டுகிறது... இன்னும் நூறு ஆண்டுகளில் அழியக்கூடிய மொழிகளின் பட்டியலில் தமிழும் இடம் பெற்றிருப்பது வருந்தத்தக்கது....இந்நிலையில் அடுத்த தலைமுறையினருக்கு, நமது மொழியை ‘அவர்களது மொழியில்’ கொண்டு சேர்க்கிற உங்கள் எளிய முயற்சிக்கு தலை வணங்குகிறேன்...

    பதிலளிநீக்கு
  3. தமிழில் அதிக எழுத்துகளும், அதன் அடிப்படை இலக்கணமுமே தமிழை அழியாமல் 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக காத்து வருகிறது. அதன் பெருமையை அருமையாக கூறும் தங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...