சனி, 18 அக்டோபர், 2014

பெண்களின் கூந்தலில் மணம் ‘வீசுமா?’



(இது ‘இணைய தலைமுறை’ இளவட்டங்களுக்கு தமிழை அறிமுகப்படுத்தும் பகுதி. கொஞ்சம் அப்டிக்கா... இப்டிக்கா... இருக்கும் ப்ரோ. எச்கூச்மீய்ய்!)



ல்யாணத்தில் தாலி கட்டுகிற நேரத்தில், ‘உங் கண்ணுல கொள்ளியை வைக்க... அந்தப்பக்கம் போடி மூதேவி...’ என்று யாரோ, யாரையோ திட்டினாலும் கூட, கேட்கிற மண வீட்டார் மனது எக்கச்சக்கமாய் புண்படுகிறதுதானே? இதெல்லாம் காதில் விழுந்து தொலைத்து விடக்கூடாது என்பதற்காகாகத் தான் ‘டும் டும் டும்’ என்று அந்தநேரம் பேண்டு அடித்து விடுகிறார்கள். சின்ன வயதில் தமிழ் வகுப்பை ‘கட்’ அடிக்காமல் படித்திருந்தவராக இருந்தால், பொது இடத்தில் ‘கொள்ளியை வைக்க... பீச்சாங்கையை வைக்க...’ என்றெல்லாம் இடம், பொருள் தெரியாமல் பேசமாட்டார்கள்.

‘சரக்கு வாங்கியாச்சா...?’

எங்கு, எப்படி பேசவேண்டும் / பேசக்கூடாது என்பதை தமிழ் மொழி வலியுறுத்துகிறது. ‘தகுதி வழக்கு’ என்று இந்த விஷயம் இலக்கண வல்லுனர்களால் குறிப்பிடப்படுகிறது கடந்த வாரங்களில் இடக்கரடக்கல், மங்கல வழக்கு பார்த்தோமில்லையா? இந்த வாரம்... குழூஉக்குறி (SLANG). ‘தம்பி எப்பவும் தண்ணீல மெதந்துகிட்டு இருப்பாரு...’ என்று யாராவது சொன்னால், ‘தம்பி பெரிய நீச்சல் சாம்பியன்’ என்று நாம் அர்த்தம் எடுத்துக் கொள்வதில்லை. சாயங்கால நேரம் ஜமா ஓடிக் கொண்டிருக்கையில் ‘சரக்கு வாங்கியாச்சா...?’ என்று கேட்டால், ‘உப்பு, புளி, துவரம் பருப்பு வாங்கியாச்சா’ என்று கேட்பதாக நாம் நினைத்துக் கொள்வதில்லை.

ஒவ்வொரு கூட்டமும் / இனமும் / வட்டாரமும் / சமூகமும் ஒரு விதமான சொல்லாடலை பயன்படுத்துகிறார்கள். வர்த்தகப் பிரமுகர்கள், கடலோரப்பகுதி மக்கள், வட, தென் மாவட்ட மக்கள் என ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு விதமான சொல்லாடல்.
அது, அவர்களுக்கு மட்டுமே தெரியும் / புரியும். (மக்கா, அவாள் எங்கடே? எல, அவுக எங்க போனாக? ஏண்டா.. அவிங்க எங்கிட்டுப் போனாய்ங்க? - மூன்று வாக்கியமும் சொல்வது ஒன்றைத்தான். நாகர்கோவில், நெல்லை, மதுரை... என்று பயணப்படுகையில்... சொல்லாடல் எப்படி மாறுகிறது பாருங்கள்). இதுதான் குழூஉக்குறி. தெருவுக்குத் தெரு பச்சை நிற போர்டு கடைகள் திறந்து விட்டிருப்பதால், ‘சரக்கு... தண்ணீ...’ போன்ற சொற்களின் ‘நிஜமான’ அர்த்தம் இன்றைக்கு அனைவருக்கும் தெரிகிறது.


பெயரில் என்ன இருக்கு?


தமிழில் பெயர் வைக்கிற பழக்கம் இன்று குறைந்து கொண்டு வருகிறது. தமிழையே பெயராக வைக்கிற பழக்கம் இங்கு மட்டும்தான் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? தமிழ்ச்செல்வன், தமிழரசன், தமிழ்நாதன், தமிழரசி, தமிழ்ச்செல்வி... இப்படி தமிழையே பெயராக வைக்கிற உயர்ந்த பழக்கம் இங்கு இன்னமும் உயிரோடு இருக்கிறது. தெலுங்கரசி, கன்னடச்செல்வி, மலையாளச்செல்வன் என்றெல்லாம் பெயர் கேட்டிருக்க முடியாது.

பெயர் சம்பந்தப்பட்ட இன்னொரு விஷயமும் இருக்கிறது. வல்லினம், மெல்லினம், இடையினம் என தமிழில் இனம் மூன்று. ‘தமிழ்’ என்ற சொல்லே, இந்த மூன்று இனங்களையும் பிரதிநிதித்துவப் படுத்துகிற பெயர் என்று தெரிந்தால்... ஆச்சர்யப்படுவீர்கள். த - வல்லினம், மி - மெல்லினம், ழ் - இடையினம். இனத்துக்கு ஒரு எழுத்தாக எடுத்து, நமது மொழிக்கு பெயர் வைத்திருக்கிறார்கள் முன்னோர்கள்.


‘பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா; இல்லையா?’ - நெற்றிக்கண் திறந்து ஆளை சாம்பலாக்க வைத்த கேள்வி இது. தமிழறிஞர்களிடம் இந்தக் கேள்வியை கேட்டால்... ‘நாற்றம் அடிக்கும்’ என்பார்கள். ஏன்...?
ஏழு நாள் கழித்து!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...