திங்கள், 3 மார்ச், 2014

2.50 லட்சம் தபால் ஊழியர்களின் கண்ணீர் கதை!


ஊதிய உயர்வு அறிவிப்பு வெளியாக ஓரிரு நாட்கள் தாமதம் ஆனாலும் கூட போர்க்கொடி தூக்கி, போராட்டக் குரல் எழுப்புகிற அமைப்புகள் தெரிந்து கொள்ளவேண்டிய சேதி இது. பணியில் சேர்கிற முதல் மாதத்தில் வாங்குகிற அந்த சொற்ப ஊதியத்தில், அதற்குப்  பிறகு பெரிய அளவில் உயர்வேதும் இருக்காது. பணிகாலத்தின் கடைசி மாதம் வரை அதையே வாங்கி கஷ்ட ஜீவனம் நடத்தி விட்டு, ஓய்வுக்குப் பிறகு பென்ஷன், பிஎப் என எந்தச் சலுகையும் இன்றி வீட்டுக்குச் செல்கிற பரிதாபத்துக்குரியவர்களாக நடமாடிக் கொண்டி ருக்கிறார்கள் ஜிடிஎஸ் எனப்படுகிற கிராமப்புற தபால் ஊழியர்கள்.



கைபேசிகளும், கணினிகளும் தகவல் தொடர்பு புரட்சியை ஏற்படுத்தி தொலைதூரங்களுக்கு இடையிலான இடைவெளியை இன்றைக்கு குறை த்திருக்கலாம். ஆனால், ஆயிரம் முத்தங்களை அஞ்சல் கவருக்குள் இட்டு நிரப்பி அனுப்பி வைத்த, சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை,  தபால் துறையின் சேவை மகத்தானது. நலம், நலமறிய ஆவல் என்று துவக்கி... உடன் பதில் எழுத உத்தரவிட்டு முடிக்கும் கடிதங்கள்தான்  தேசத்தின் பல்வேறு விளிம்புகளில் இயங்கிக் கொண்டிருந்த மனிதர்களை இணைத்தது; உறவுகளைப் பேணியது. அந்தக் கடிதங்களை அஞ்சல்  பெட்டிகளில் இருந்து
சேகரித்து, ரகம் வாரியாக பிரித்து, முத்திரையிட்டு, மொத்தமாக ஒரு பையில் இட்டுக் கட்டி... சென்று சேரவேண்டிய  இடத்துக்குக் கொண்டு போய் சேர்ப்பது... அஞ்சலக ஊழியர்களின் பணி.

பரந்து விரிந்துள்ள இந்திய தேசத்தில், தபால் அலுவலகங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஹெட் போஸ்ட் ஆபீஸ், சப்  போஸ்ட் ஆபீஸ் என்பவை முதல் இரண்டு வகை. மத்திய அரசு ஊழியர்கள் என்ற முத்திரையுடன், ஊழியர்கள் பணிபுரிகிற இடங்கள் இவை.  மூன்றாவது வகையான... பிராஞ்ச் போஸ்ட் ஆபீஸ்களில் (கிளை அஞ்சலகங்கள்) பணிபுரிகிறவர்கள் நிலைமைதான் கவலைக்கிடம்.  கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கும் தகவல் தொடர்பு சேவையைக் கொண்டு போய்ச் சேர்க்கும் எண்ணத்துடன் நாடு முழுவதும் இந்த  வகை கிளை அஞ்லகங்கள் பல ஆயிரக்கணக்கில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இவற்றில் கிளை அஞ்சலக அதிகாரி, தபால்காரர்கள் மற்றும் பேக்கர்ஸ் (தபால்களை சேகரித்து வருவது, முத்திரையிடுவது, பைகளில் வைத்து  பார்சல் கட்டிச் செல்வது உள்ளிட்ட பணிகளைச் செய்பவர்) என மூன்று பிரிவு ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான ஊதியத்தை  தபால்துறைதான் வழங்குகின்றது. மத்திய அரசுத்துறை நிறுவனத்தில் பணிபுரிந்தாலும், சம்பளம் வாங்கினாலும் கூட, இவர்கள் மத்திய அரசு  ஊழியர்கள் இல்லை என்பது புரிந்து கொள்ளமுடியாத விநோதம். தனியார் துறை ஊழியர்களுக்குக் கிடைக்கிற சம்பளமோ, சலுகைகளோ  இவர்களுக்குக் கிடையாது. அரசுத்துறை ஊழியர்களுக்கான உரிமைகள், பாதுகாப்பும் இல்லை. மொத்தத்தில், ‘திரிசங்கு சொர்க்க’ நிலையில் த த்தளிக்கும் இவர்கள் நிலைமை பரிதாபத்துக்குரியது.


தபால்துறையைப் பொருத்தவரை, ஜிடிஎஸ் பணியாளர்கள் என இவர்கள் ‘நாமகரணம்’ சூட்டப்பட்டிருக்கிறார்கள். எட்டு மணிநேரம்  பணிபுரிந்தாலும் கூட, ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் பணிபுரிந்ததாகவே கணக்கிடப்பட்டு இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அந் தச் சம்பளமாவது திருப்திகரமாக இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. ‘‘நாங்கள் வாங்குகிற ஊதியத்தை வெளியில் சொன்னால், வெட்கக்கேடு,’’ என்கிறார்கள். உண்மைதான். கிளை அஞ்சலக அதிகாரியின் மாத ஊதியம் (மூன்று மணிநேர கணக்குப்படி) ரூ.2 ஆயிரத்து 745.  பணிச்சுமை அதிகம் உள்ள கிளைகளில், ஐந்து மணிநேர பணிநேரம் சில சமயம் கணக்கிடப்படுவதுண்டு. அப்படி ஐந்து மணிநேர பணியாக  கணக்கிடப்பட்டால் மாதம் ரூ.4 ஆயிரத்து 575 சம்பளம். இவர்களுக்கு அடுத்தபடியாக தபால்காரர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 665, ஜிடிஎஸ்  பேக்கர்ஸ்க்கு ரூ.2 ஆயிரத்து 285. எப்படி இருக்கிறது பார்த்தீர்களா ‘மத்திய அரசு’ சம்பளம்?

இந்தக் கொடுமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இவர்களும் தட்டாத கதவுகள் இல்லை; பார்க்காத அமைச்சர்கள் இல்லை. இன்று  வரை எந்த விடிவும் இல்லை. அகில இந்திய தபால் அலுவலர் முன்னேற்றச் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கட்ராமனிடம் பேசியபோது,  இந்த அவலம் குறித்து நம்மிடம் விரிவாகவே பகிர்ந்து கொண்டார். அவரது பேட்டி:

கிராமின் தாக் சேவக் (சுருக்கமாக, ஜிடிஎஸ்) என இந்தியில் அழைக்கப்படும் கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் நாடு முழுவதும் இரண்டரை  லட்சத்துக்கும் அதிகமானோர் பணிபுரிகிறார்கள். கிராமப்புறங்களில் வசிக்கும் முதியோர், ஏழை எளியோருக்கு அரசின் உதவித்தொகைகளைக்  கொண்டு சென்று சேர்க்கும் இவர்களுக்கு என்று எந்த ஓய்வுகாலப் பலன்களும் இல்லை என்பதுதான் வேதனை. எட்டு மணிநேரம் வேலை  பார்த்தாலும், இவர்களுக்கு மூன்று மணிநேர வேலை என்ற அடிப்படையில் தொகுப்பூதியம் (கன்சாலிடேட் பே) வழங்கப்படுகிறது. பணியில்  சேரும் போது என்ன ஊதியம் வாங்குகிறாரோ... அதுதான் பெரும்பாலும் பணி ஓய்வு வரை. இடையில் சிறு, சிறு ஊதிய உயர்வுகள் இருந் தாலும் கூட, அது பெரிய அளவில் வருவாயில் மாற்றத்தை தந்து விடாது. போஸ்டல் துறையில் பணிபுரியும் ஹெட் போஸ்ட் ஆபீஸ், சப்  போஸ்ட் ஆபீஸ் ஊழியர்கள் போல இவர்கள் கருதப்படுவதில்லை.

மாதம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து அதிகப்பட்சமாக ரூ.5 ஆயிரத்துக்குள் ஊதியம் வாங்கும் இவர்களுக்கு ஜிபிஎப், பென்ஷன், மெடிக்கல்  அலவன்ஸ் என
அரசுத்துறை ஊழியர்களுக்கு உள்ள எந்த சலுகையும் இல்லை. தனியார் நிறுவனங்களில் வழங்குகிற ஊதியமும் இல்லை.  தனியார் ஊழியர்களுக்கு கூட பிஎப், பென்ஷன் இருக்கிறது. இவர்களுக்கு அதுவும் இல்லை. மொத்தத்தில் அரசு ஊழியர்களாகவும் இல்லாம ல், தனியார் நிறுவன ஊழியர்களாகவும் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அவலநிலை குறித்து 1977ல் முதன்முதலாக  உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எங்களை ‘சிவில் சர்வன்ட்’ என, அதாவது  அரசு ஊழியர்களே என்று திட்டவட்டமாக தீர்ப்பளித்தது. ஆனால், இதை தபால்துறை ஏற்றுக் கொள்ளவில்லை.

இதன் பிறகு, 1996ல் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தனது முந்தைய தீர்ப்பை திட் டவட்டமாக மீண்டும் உறுதி செய்தது. ஆனாலும் பலன் இல்லை. இதையடுத்து, ஜிடிஎஸ் ஊழியர்களின் நிலைமை குறித்து முடிவு  செய்வதற்காக தல்வார் கமிட்டி அமைக்கப்பட்டது. ஜிடிஎஸ் ஊழியர்களுக்கு பென்ஷன், போனஸ் மற்றும் இலாகா ஊழியர்களாக்குவது என  அனைத்து உரிமைகளையும் அங்கீகரித்து தல்வார் கமிட்டி 1997ல் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரைகள் இன்றுவரை அமல்படுத்தப்படவில்லை.  தல்வார் கமிட்டி பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தவேண்டும்.

உச்சநீதிமன்ற உத்தரவுப் படி ஜிடிஎஸ் ஊழியர்களை அரசு ஊழியர்களாக (சிவில் சர்வன்ட்) அறிவிக்கவேண்டும். இந்திய அரசியலமைப்புச்  சட்டம் 309ன் படி, அவர்களை நிரந்தரப்படுத்தவேண்டும். இதற்காக, ஒரு குழு அமைத்து, அதற்கான பணிகளை படிப்படியாக செய்யவேண் டும். தபால்துறையில் பணியாற்றும் துறை சார்ந்த ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் இவர்களுக்கும் வழங்கப்படவேண்டும். எட்டு  மணிநேரம் பணியாற்றினாலும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற கொள்கைக்கு மாறாக, மூன்று மணிநேர தொகுப்பூதியம் வழங்கும்  நிலைமை மாறவேண்டும். தபால்துறையில் பணியாற்றினாலும் கூட, கிராமப்புற தபால் ஊழியர்கள் குறைந்தபட்ச ஊதியம் இல்லாமலும், ஓய் வுகாலத்தில் வைப்புநிதி, பணிக்கொடை, ஓய்வூதியம் இல்லாமலும் இருக்கிற அவலநிலைக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.  இதற்கு, அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்கவேண்டும்.

கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்கள், கண்களில் தெரிந்தாலும், அதையும் மீறி நம்பிக்கைக் கீற்றுகள் மின்ன... அஞ்சல் ஊழியர்களின்  அவலநிலை குறித்து தனது கருத்துக்களை அழுத்தமாக பதிவு செய்கிறார் வெங்கட்ராமன். நிலைமை மாறுமா... பார்க்கலாம்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...