புதன், 5 மார்ச், 2014

தமிழன் பெருமை சொல்லும் ‘தி கிராண்ட் அணைக்கட்!’


‘எங்கள் வாழ்வும், எங்கள் வளமும், மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ என்றார் பாரதிதாசன். தலைநிமிர்ந்து நாம் உலகுக்கு வழிகாட்டிய நாட்கள் போய் இன்று தண்ணீருக்குக் கூட கண்ணீர் சிந்தி அடுத்தவர்களை நம்பி பிழைக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இடியும், உடையும் என கேரள அரசு திரும்பத் திரும்ப கிளப்புகிற முல்லைப் பெரியாறு அணை சர்ச்சைகளை நிபுணர்களும், வல்லுனர்களும் மீண்டும், மீண்டும் நிராகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.


நூற்றாண்டு கடந்தும், தனது வலிமை குன்றாமல், நீடித்து நிலைத்து நிற்கிறது பென்னிகுக் கட்டிய அந்த அணை என சான்றிதழ் தருகிறார்கள். ‘மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த மிகச்சிறந்த கட்டுமானத்துக்கும் ஒரு நாள் அழிவு உறுதி. முல்லைப்பெரியாறு அணைக்கு மட்டும் என்ன விதி விலக்கு’ என்று கேரளம் கேட்கும் கேள்வியை ஆணித்தரமாக மறுக்க முடியும். ஆம்...! ஒரு கேரள பொறியாளர் கட்டியிருந்தால் கண்டிப்பாக அது இந்நேரம் உடைந்திருக்கும். ஆனால் அது தமிழர்களின் அறிவில் உதயமாகி, தன்னலமற்ற ஆங்கில பொறியாளரின் உழைப்பால் உருவானது. எப்படி உடையும்...?

மனித முயற்சியால் உருவாக்கப்பட்டிருந்தாலும் கூட, மிகச்சிறந்த தொழில்நுட்ப உத்திகளுடன், தன்னலமற்று, அர்ப்பணிப்பு உணர்வுடன், கடினமான உழைப்புடன், மிகத்தரமாக ஒரு கட்டுமானப்பணி எழுப்பப்பட்டிருக்கிறது என்றால், அது காலங்களைக் கடந்தும் கம்பீரமாக நிற்கும். இதற்கு உலகமெங்கும் பல உதாரணங்களை காட்டலாம்.


தஞ்சை பெரிய கோவில் மிகச்சிறந்த உதாரணம். நாம் பேசுகிற விஷயம், (முல்லைப் பெரியாறு) அணை சார்ந்த பிரச்னை என்பதால்... தஞ்சை பெரிய கோவிலுக்குச் சற்றே அருகில் உள்ள கல்லணையை, கேரளத்தின் (பிடி)வாதத்துக்கான அழுத்தமான, ஆணித்தரமாக பதிலாக... மிக உறுதியுடன் நாம் முன்வைக்க முடியும்.

உலகில் பயன்பாட்டில் உள்ள அணைகளில் மிகவும் பழமையானது கல்லணை. இதுவே மிகவும் பழமையான நீர்பாசனத்திட்டமும் கூட. தமிழனின் பெருமையை பறைச்சாற்றும் ஒரு சான்று கல்லணை. திருச்சியின் அருகே காவிரியின் குறுக்கே கி.பி. முதலாம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட கரிகால் சோழனால் கட்டப்பட்டது இது. கல்லும், களிமண்ணும் கலந்து கட்டப்பட்ட இந்த அணை, சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக காவிரியின் மாபெரும் வெள்ளத்தை கட்டுப்படுத்தி வருவது ஒரு அதிசயமே.
கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதியில் கரிகாலன் கல்லணையை கட்டி காவிரியின் போக்கை கட்டுப்படுத்தி வயல்வெளிகளில் பாய்ச்சி செழிப்பை உண்டாக்கியதை பட்டினப் பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோடக் கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. அதேபோல் கல்லணையின் தொழில்நுட்பமும் அதிசயமே. காவிரியில் அடிக்கடி வெள்ளப்பெருக்கால் ஏற்படும் மக்களின் துயரை போக்க எண்ணிய கரிகாலன், காவிரியில் பெரிய அணை கட்ட முடிவெடுத்தான். ஆனால் நொடிக்கு இரண்டு லட்சம் கன அடி நீர் பாயும் காவிரியின் மேல் அணை கட்டுவது என்பது சாதாரண விஷயம் அல்லவே. அதற்கும் தமிழர்கள் ஒரு வழியை கண்டுபிடித்தனர்.


ஒரு சின்ன நிகழ்ச்சி, பெரிய சாதனைக்கு அடித்தளம் அமைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. நாம் கடற்கரையில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது நம் பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதைவதை கவனித்து இருப்பீர்கள். அந்த சுகத்தை அனுபவிக்காதவர்கள் யாரும் இல்லை எனலாம். இதைத்தான் நம்மவர்கள் சூத்திரமாக மாற்றினார்கள். இதுவே கல்லணையின் தொழில்நுட்பமாக ஆக்கினார்கள். அதுவே இன்று வரலாறுச் சாதனையாக பறைச்சாற்றிக் கொண்டு இருக்கிறது.

காவிரி ஆற்றின் மீது பெரிய, பெரிய பாறைகளை கொண்டு வந்து போட்டார்கள். அந்த பாறைகள் நீரின் அரிப்பின் காரணமாக கொஞ்சம், கொஞ்சமாக மண்ணுக்குள் புதைந்தன. இப்போது அதன் மேல் வேறொரு பாறையை வைத்தார்கள். நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் தன்மையுடைய களிமண்ணை புதிய பாறையின் கீழ் பூசினார்கள். இதன் அடிப்படையில் இரண்டு பாறைகளையும் ஒட்ட செய்தனர். பாறையின் மீது பாறையாக போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரியின் தண்ணீரை மறித்து அணை கட்டினார்கள். இப்படி படிப்படியாக, 1080 அடி நீளம், 66 அடி அகலம், 18 அடி உயரம் என பிரமாண்டமாக கல்லணையை கட்டி முடித்தனர்.இந்த உண்மையை, சொல்லியவர் யார் தெரியுமா? நாம் தான் நம்மவர்களை எப்பொழுதும் ஏற்றுக் கொள்வது இல்லையே...! ஆங்கிலம் பேசுபவர்கள் தான் அறிவாளிகள் எண்ணுபவர்களே. சரி விஷயத்திற்கு வருகிறேன். கொள்ளிடம் அணை உள்ளிட்ட ஏராளமான அணைகளை கட்டியவரும், இந்திய நீர் மேலாண்மையின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான சர் ஆர்தர் தாமஸ் காட்டன் என்ற ஆங்கில பொறியாளர் பல காலம் ஆராய்ச்சி செய்து அதன் உன்னதத்தை உலகுக்கு அறிவித்தார்.

ஒன்று தெரியுமா? இப்போது உள்ள காவிரியின் வழித்தடம் என்பது இயற்கையானது கிடையாது. கரிகாலன் காலத்தில் மனித முயற்சியால் கல்லணையின் இருந்து பல கால்வாய்களாக பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இந்த நவீனயுகத்தில், செயற்கைகோள் வசதி கொண்டு கூட இப்படி ஒன்றை சாதிக்க முடியாது. நீரின் வடிகால்களை ஆராய்ந்து அதன் போக்கை கணித்து உருவாக்கப்பட்ட உலகின் முதல் நீர் மேலாண்மை திட்டம் என்று கூறுகிறார். இப்படி காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து கல்லணையை ‘‘தி கிராண்ட் அணைக்கட்’’ என்றார் சர் ஆர்தர் தாமஸ் காட்டன். அதுவே பிறகு உலகெங்கும் பிரபலமானது. இதைவிட சிறந்த சான்று ஒன்றை கேரளாவால் காட்டமுடியுமா? இல்லை மறுக்கத்தான் முடியுமா?
- சு.கோபிநாத், மதுரை.
gopinath_designer@yahoo.co.in

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...