திங்கள், 31 மார்ச், 2014

‘இனம்’ அல்ல... ‘ஈனம்!’


இந்தியாவின் முன்னணி சினிமா ஒளிப்பதிவாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் சந்தோஷ் சிவன். மலையாளத்துக் காரர். உலகத்தர நேர்த்தி மூலம் இந்திய சினிமாக்களுக்கு புது அடையாளம் தந்தவர். சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் விருதுகளை போகிற போக்கில் அள்ளிக் குவித்தவர். ஒளிப்படக் கலைஞராக மட்டுமின்றி, இயக்குனராகவும் அடையாளப்படுத்தி, தன்னை ஒரு படைப்பாளியாகவும் பதிவு செய்திருப்பவர். அவர் ஒளிப்பதிவு செய்கிறார் என்றால், அந்தப் படம் தானாகவே, தனி மதிப்பு பெற்று விடுகிறது. சந்தோஷ் சிவன் குறித்த பெருமைகளை பற்றி மட்டுமே தனியாக ஒரு கட்டுரை எழுதலாம்.
- எல்லாம் சரி... பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கிறது, வழுவழுப்பாக இருக்கிறது, புது நிறமாக இருக்கிறது என்பதற்காக, பாம்பைத் தூக்கி தோளிலா விடமுடியும்?


சினிமா என்கிற உன்னதக் கலையை, காசு பார்க்கிற வெறும் வர்த்தகமாக மட்டுமே பார்க்கத் தெரிந்த ‘ஈன’ கலைஞர்களில் முக்கியமானவர் லிங்குசாமி. இவரது திரைப்படங்களில், தமிழ் கிராமத்து உழைக்கும் வர்க்கம் எப்படி சித்திரிக்கப்பட்டிருக்கும் என தனியாக கட்டுரை எழுதலாம். அப்பேர்ப்பட்ட லிங்குசாமியும், 'சர்வதேச கலைஞன்' சந்தோஷ் சிவனும் கைகோர்த்து ஒரு படம் பண்ணுகிறார்கள் என்றதுமே தமிழ் சமுதாயம் சற்று சுதாரித்திருக்கவேண்டும். கேமராவை நிறுத்தி, கிளாப் அடித்து பூஜை போட்ட மறுவினாடி, பத்திரிகையாளர்களை சந்தித்து ‘இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய துயரம் இலங்கை. அந்த மண்ணின், மக்களின் வேதனையை படம் பிடிக்கிறோம். பதிவு செய்கிறோம்...’ என்று கண்களைக் கசக்கிக் கொண்டே சந்தோஷ் சிவன் ஒரு பேட்டி கொடுத்தார். அப்போதாவது ‘அலர்ட்’ ஆகியிருக்கவேண்டும்.

நிஜத்தில், சந்தோஷ் சிவன் என்ற வியாபாரி சரியாகத்தான் படம் எடுத்திருக்கிறார். நாம்தான் அதை புரிந்து கொள்ளத் தவறி விட்டோம். இலங்கையில் நடந்த ஒரு துயரம், அவரது கண்களில் கண்ணீரை வரவழைத்திருக்கிறது. முள்ளிவாய்க்காலில் கை வேறு, கால் வேறாக கொத்துக் கொத்தாய் செத்துக் கிடந்த தமிழ் பிணங்களை எண்ணி கண்ணீர் சிந்தியிருக்கிறார் என நீங்கள் தவறாக நினைத்தால், அவரா பொறுப்பு? தமிழர்களின் தற்காப்புத் தாக்குதலின் போது உயிரிழந்த சிங்கள வீரர்கள், அவர்களது குடும்பங்களை நினைத்து நெஞ்சு வெடித்து அழுதிருக்கிறார் சந்தோஷ் சிவன். இதை அவரது ‘இனம்’ படத்தின் ஒரு காட்சி மிகத் துல்லியமாகவே விளக்குகிறது.

‘அந்த மண்ணின், மக்களின் வேதனையை....’ சிங்கள மண்ணின், சிங்கள மக்களின் வேதனைகளை அவர் படம் பிடித்திருக்கிறார். ‘இனம்’ என்று அவர் பெயர் சூட்டியிருப்பது தமிழ் இனத்தை என்று தவறாகப் புரிந்து கொண்டது யார் குற்றம்? அவர் காட்சிப் படுத்தியிருக்கும், காப்பாற்ற விரும்பியிருக்கும் ‘இனம்’ சிங்கள இனம். சர்வதேச அளவில், அந்த ‘பரிதாப’ இனத்தை அவர் முன்னிலைப்படுத்தி, அவர்களின் நியாயங்களை சர்வதேசமும் தெரிந்து, புரிந்து கொள்ள (சேனல் 4க்கு போட்டியாக) படம் எடுத்திருக்கிறார். உண்மையில், சந்தோஷ் சிவன் தெளிவாகவே இருக்கிறார். தமிழர் இனத்தின் வலியை சொல்லும் படம் என நீங்கள்தான் ஏமாந்து விட்டீர்கள். தமிழ் சமுதாயத்தின் வலியைச் சொல்ல தமிழ் சினிமாவில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? எண்ணிக்கை கணக்கு பார்க்க, ஒரு கையில் சில விரல்கள் போதும்.

இலங்கையில் நடந்த உரிமைப் போராட்டங்களை கொச்சைப்படுத்தியும், தமிழர்கள் செய்தது பயங்கரவாதமே என உறுதிப்படுத்துகிற விதத்திலும் சந்தோஷ் சிவன் ஏற்கனவே ‘மல்லி, டெரரிஸ்ட்’ என்ற பெயர்களில் சில விஷ வித்துகளை விதைத்திருக்கிறார். அவரிடம் இருந்து வரும் ‘இனம்’ நமது நியாயங்களைப் பேசுவதாக இருக்கும் என நம்பியது நம் குற்றம் இல்லையா? ‘இனம்’ திரைப்படம் முழுக்க, முழுக்க சிங்கள பேரினவாதத்தின் அக்கிரமச் செயல்களை நியாயப்படுத்துகிற ஒரு திரைப்படம். தமிழர்களின் வேதனைகளை பகடி செய்து பணம் பார்க்கிற படம். தமிழ் சடலங்களில் இருந்து வழிகிற ரத்தத்தை நக்கி ருசித்து, ஆனந்தப்படுகிற ஒரு படம். தமிழனை இறைச்சித்துண்டுகளாக வெட்டி கூறு போட்டு, அதை தமிழ் மண்ணிலேயே விற்று காசு பார்க்கத் துடிக்கிற ஒரு படம்.

இனம் என்கிற ஈனம் வெளிப்படுத்துகிற காட்சியமைப்புகளில் இருந்து ஒரு சில உதாரணங்கள் மட்டும் இங்கே...


லங்கையில் வாழ்ந்த தமிழ் சிறுவர்கள், சிறுமிகள் மிக இள வயதிலேயே கட்டாயப்படுத்தி புலிப்படையில் இணைக்கப்படுவதாக காட்சிகள், ஒன்றுக்கு பலமுறை படத்தில் வருகிறது. ஒரு இடத்தில், பள்ளி வகுப்பறையில் குழந்தைகள் பாடம் படிக்கிறார்கள்.

அங்கு வரும் புலிப்படையின் பெண் போராளிகள், வகுப்பறை கரும்பலகையில் வெள்ளைத் துணி போர்த்தி அதில், இயக்கங்களைப் பற்றிய படத்தை காட்டுவதாகவும், பள்ளி ஆசிரியர் அதைக் கண்டு வேதனை, இயலாமையுடன் மனம் வெதும்பி நிற்பதாகவும் ஒரு காட்சி. இன்னும் ஒரு இடத்தில், தனது குழந்தைகளை புலிகள் அமைப்பிடம் இருந்து பாதுகாக்க, அவர்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைப்பதாகவும் ஒரு காட்சி.

- இதன் மூலம் சந்தோஷ் சிவன் சொல்ல விரும்புகிற கருத்து என்ன? விடுதலைப்புலிகள் அமைப்பு மனித உரிமைகளை மீறி, பச்சிளம் பாலகர்களையும் போர்முனைக்கு நிர்பந்தப்படுத்தி இட்டுச் சென்று பலி கொடுத்தது என்கிற கருத்தைத்தானே? இது யாருக்குச் சாதகமான காட்சியமைப்பு? ராஜபட்சேக்கள் படமெடுத்தால்... இப்படித்தானே காட்சி வைப்பார்கள்?

புத்த பிட்சு ஒருவருக்கு தாகமோ தாகம் (ரத்தம் குடித்தால் மட்டுமே தீர்கிற தாகமோ?). ஒரு குடுவையை எடுத்து, ஓடையில் தண்ணீர் பிடிக்கிறார். ஓடைத் தண்ணீரில் இருந்து ஒரு மீன் வழி தவறி குடுவைத் துணிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது. ‘புத்த பகவானின் கருணையே... கருணை’ என்று அக மகிழ்ந்து, அந்த மீனை ‘பிரை’ பண்ண விகாருக்கு எடுத்துச் செல்வதாக காட்சி வரவில்லை என் இனிய தமிழ் மக்களே! கண்களின் கருணை பெருக்கெடுத்து ததும்ப, அந்த மீனை அப்படியே உயிருடன் மீண்டும் ஓடைக்குள் விடுகிறாராம் புத்த பிட்சு.

- அடடடா.... சிங்களத்துக் காரனுக்குக் கூட இப்படிக் கற்பனை தோன்றாது. மலையாள மூளைக்கு மட்டுமே இது சாத்தியம்.... சத்தியம்! படத்தைப் பார்த்து விட்டு, ராஜபட்சே எத்தனை ஊரை எழுதிக் கொடுத்தாரோ? ஈழத்து மண்ணில் இப்படி ஒரு கொடுரம் நடப்பதற்கு முக்கியக் காரணமே, ஈவு இரக்கமற்ற இலங்கை தேசத்து புத்த பிட்சுக்கள்தான் என்பது உலகமறிந்த உண்மை. தமிழர்களை கொத்துக்கறி போடத் துடித்து, அவர்கள் கொடுத்த நெருக்கடியே, இலங்கை ஆட்சியாளர்களை இனப்படுகொலை நோக்கி இட்டுச் சென்றது. அங்குள்ள ஆயிரக்கணக்கான இந்துக் கோயில்களை இடித்து, பவுத்த விகாரங்களாக்கிய செயல்கள், இப்போது கிறிஸ்துவ தேவாலயங்கள், இஸ்லாமிய தொழுகைக்கூடங்கள் இடிக்கப்படுகிற, தாக்கப்படுகிற சம்பவங்களில் பின்னணியில் பவுத்த பிட்சுக்கள் நேரடியாக ஈடுபட்டுக் கொண்டிருப்பது சந்தோஷ் சிவனுக்கும், அவரது கூட்டாளி லிங்குவுக்கும் எப்படி தெரியாமல் போனது? இது கூட தெரியாத கூமுட்டைகளா அல்லது தெரிந்தே அமைக்கப்பட்ட தில்லுமுல்லு திரைக்கதையா?

புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களது தன்னலமற்ற தியாகங்கள் குறித்து எவ்வளவோ தகவல்கள் இருக்கின்றன. விடுதலைப்புலிகள் அமைப்பு என்றில்லை... உலகமெங்கிலும், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில், தங்களையே ஆயுதங்களாக முன்னிறுத்தி போராடுகிறவர்கள்... சுய இச்சைகளுக்கு, விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருப்பார்கள். வரலாறு படித்திருந்தால், இது தெரிந்திருக்கும். புலிகள் அமைப்பில் இருப்பவர்கள் ருசியான உணவுக்கு அலைவதாகவும், அது கிடைக்கிற வேளையில், வெறி பிடித்தது போல பாய்ந்து, குதறி சாப்பிடுவதாகவும் கூட காட்சிகள் இருக்கிறது.

- புலிகள் அமைப்பில் இருந்த உறுப்பினர்களின் இப்படிப்பட்ட ‘குணாதிசயங்களை’ சந்தோஷ் சிவனுக்கு சொல்லித் தந்தது யார்? அடிப்படையில் மலையாளியான அவர், இதெல்லாம் எப்படி, யார் மூலம் தெரிந்து கொண்டார். இலங்கை அரசின் ராணுவமும், உளவுத்துறையும் இட்டுக்கட்டுகிற புனைகதைகள், சந்தோஷ் சிவன் மூலம் காட்சிப்படுத்தப்படுவதன் பின்னணி என்ன?

க்களுக்கு மத்தியில் இருந்து புலிகள் ஒரு காட்சியில் தாக்குதல் நடத்துகிறார்களாம். பதிலுக்கு, சிங்கள ராணுவம் மக்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விட்டு, புலிகள் மீது தாக்குதல் நடத்துகிறது. தமிழர்கள் எல்லாம், இலங்கை ராணுவ வீரர்களுக்கு பின்னால், பாதுகாப்பாக அணிசேர்கிறார்கள். புலிகளை சுட்டு வீழ்த்தியப் பிறகு இலங்கை ராணுவ அதிகாரி சோகமாக நிற்கிறார். ஏன் என்று காரணம் கேட்கும் போது, ‘‘இவர்கள் எல்லாம் நமது நண்பர்கள். அவர்கள் செய்த தவறால், உயிரிழந்திருக்கிறார்கள். இதை நினைத்து எப்படி மகிழ்ச்சி கொள்ளமுடியும்?’’ என்கிறார்.

- அட கல்நெஞ்சக்காரர்களா... விட்டால், இலங்கை ராணுவத்தை செஞ்சிலுவை சங்க தொண்டர்களை விடவும் உயர்ந்தவர்களாக சித்தரிப்பீர்கள் போலிருக்கிறதே. வாங்கிய காசுக்கு வஞ்கமில்லாமல் இப்படியா வாலாட்டுவது?

போரின் போது, சிங்கள ராணுவ வீரர் ஒருவர் குண்டடி பட்டு செத்துக் கிடக்கிறார். செத்துக் கிடக்கும் அவரது கைக்குள் ஒரு புகைப்படம். அந்த சிங்கள ராணுவ வீரரின் பச்சிளம் குழந்தையின் புகைப்படம். இந்தக் காட்சி திரையில் வருகிற போது, மனதுக்குள் கத்தி பாய்ச்சுவது போல படு சோகமான பின்னணி இசை வேறு.

- சிங்கள ராணுவ வீரனின் மரணத்தையும், அவனது குழந்தை புகைப்படத்தையும் காட்டுவதன் மூலம், இலங்கை தமிழர்கள் மீதான புதிய மதிப்பீடுகளை சர்வதேச சமூகம் முன் பதிவு செய்கிறார் சந்தோஷ் சிவன். பாதிக்கப்பட்டதும், பரிதவிப்பில் இருப்பதும் சிங்கள இனம் மட்டுமே. அங்குள்ள தமிழினம், அழிவு சக்தி என அடையாளப்படுத்துகிறார்.

 ஐந்து, ஆறு வயதுக்கு மிகாத தமிழ் குழந்தைகள் எல்லாம் வயிறு பிளந்து செத்துக் கிடக்கிற காட்சிகளை சந்தோஷ் சிவன் பார்த்ததுண்டா? பார்த்தப் பிறகும் இப்படி காட்சி படுத்தி படம் எடுக்கமுடிகிறது என்றால்... தனது இதயத்தையும், மனித நாகரீகத்தையும் அவர் எத்தனை பணத்துக்கு விற்றார்?

டல் முழுக்க ரத்தக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிற, மீசை கூட முளைக்காத ஒரு புலிப்படை சிறுவன், ‘லீடர் செத்துட்டாரு. அவர் சாகும் போது, நான் பக்கத்துல தான் இருந்தேன்...’ என்கிறான்.

- தமிழர்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் சந்தோஷ் சிவன் சொல்ல விரும்புகிற செய்தி இதுதான். இலங்கை அரசாங்கம், தமிழகத்துக்கு சொல்ல விரும்புகிற செய்தி, சந்தோஷ் சிவன் வாயிலாக சொல்லப்படுகிறது.

‘இனம்’ திரைப்படத்தின் தயாரிப்பு என்று போட்டு, வாயில் நுழையான வட இந்தியப் பெயர்கள் சில இடம் பெற்றிருக்கின்றன. அந்தப் பெயர்கள் எந்தளவுக்கு உண்மையோ தெரியவில்லை. ராஜபட்சே அண்ட் கம்பெனி தயாரித்த படம் இது என்பதை வெளியில் தெரியாமல் மூடி மறைக்க, அந்த வட இந்தியப் பெயர்கள் பயன்பட்டிருக்கலாம். இது தமிழர்களின் சோகத்தை சுட்டிக் காட்டும் படமாக நிச்சயமாக இருக்கமுடியாது. இந்தப் படம் முழுவதும் இலங்கை மற்றும் கேரளாவில் எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழர்களின் சோகத்தை படம் பிடிக்க இலங்கை அரசு எப்படி அனுமதி கொடுத்திருக்கும்? இலங்கை அரசு அனுமதி கொடுத்திருக்கிறது என்ற செய்தியே... இந்தப் படத்தின் நிஜ நோக்கத்தை உணர்த்துவதாக இல்லையா?

தமிழில் ‘இனம்’ என்ற பெயரில் வெளியான இந்தத் 'திரைக்காவியம்' ஹிந்தி மற்றும் மலையாளத்தில் ‘சிலோன்’ என்ற பெயரில் ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில், ‘இனம்’ என்ற தலைப்புக் கீழாக... ‘எ ஸ்டோரி ஃப்ரம் சிலோன்’ என தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது ஈழத்தின் கதையல்ல. சிலோன் கதை. சிங்களவர்களின் கதை. ஈழப் போராட்டத்தை கொச்சைப்படுத்த இதற்கு முன் ஜான் ஆப்ரகாம் என்ற மலையாளி, ‘மெட்ராஸ் கபே’ என்ற படம் எடுத்தார். தமிழர்களுக்கு எதிரான மலையாளத் தாக்குதலின் நீட்சி... இனம் திரைப்படம்.

சிங்களம் வீசியெறிகிற எலும்புத் துண்டுகளை வாயில் கவ்விக் கொண்டு வாலாட்ட இன்னும் நிறைய இயக்குனர்கள் இங்கிருக்கிறார்கள். பணம் சம்பாதிப்பது மட்டுமே லட்சியமாகிப் போகும் பட்சத்தில்... லிங்குசாமி, சந்தோஷ் சிவன் வகையறாக்களுக்கு, இதைத் தவிரவும் இன்னும் அனேகத் தொழில்கள் மிச்சமிருக்கின்றன. இணையத்தில் தேடி தெரிந்து கொள்ளலாம்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

7 கருத்துகள்:

 1. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் படத்தினை தடை செய்யக்கூடாது என அறிவுஜீவிகள் பலரும் கூறுகின்ற்னர்.உண்மையில் பலநேரங்களில் கருத்துதிணிப்பும் இவர்கள் வியாபாரமுமே முக்கியதுவம் பெருகின்றது.இதுவே நாளைய வரலாறாக திரிந்து நிற்கும் எனவே அனைவரும் இணைந்து படத்தினை தடுக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் படத்தினை தடை செய்யக்கூடாது என அறிவுஜீவிகள் பலரும் கூறுகின்ற்னர்.உண்மையில் பலநேரங்களில் கருத்துதிணிப்பும் இவர்கள் வியாபாரமுமே முக்கியதுவம் பெருகின்றது.இதுவே நாளைய வரலாறாக திரிந்து நிற்கும் எனவே அனைவரும் இணைந்து படத்தினை தடுக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. அருண்குமார் பரத், கோவை1 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 11:37

  மிக சிறந்த கட்டுரை, உண்மையான தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை பிரதிபலிக்கிறது. தொடரட்டும் சேவை.
  அருண்குமார் பரத், கோவை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. tamilarkalin Kural. oru appanukku piranthavan panathikaak kalayaiai verka mattan. varalarai marithu, ratha kannerrai puthaythu panathukaka eppadi sevathai veda, kelanathu athuvum ellai. santhose sivan, lingusamyay tamil enam marakkathu.

   நீக்கு
 4. கருத்து சுதந்திரத்திற்கும், கருத்து திணிப்பிற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. "இனம்" திரைப்படத்தினை கருத்து திணிப்பாகவே உள்ளது.

  பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...