வெள்ளி, 14 மார்ச், 2014

காப்பி ஹாசன்!




என்னதான் கோடி, கோடியாக வசூலை வாரிக் கொட்டிப் பார்த்தாலும் கூட... ரஜினி இன்னமும் உள்ளூர் நாயகன் மட்டுமே. விநியோகஸ்தர்கள் தலையில் அடிக்கடி குற்றாலத் துண்டு போர்த்துகிற ‘நம்மவர்’ தான் உலக நாயகன்... யூனிவர்சல் ஹீரோ. அதெப்பிடி சாத்தியம்???


லகின் மூலை, முடுக்கெல்லாம் தேடிப் பிடித்து, அங்கு வெளியாகிற தரமான, உலகத்தரமான படங்களை உருவி வந்து, உள்ளூரில் உலாவ விடுகிற (கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நம்மவர்) அசாத்தியத் திறமை இருக்கிறது பாருங்கள்.. அந்தத் திறமைக்கு கொடுத்த விருதுதான், உலக நாயகன்... யூனிவர்சல் ஹீரோ.

உண்மையில், இப்படி ஒரு பட்டம் யார் கொடுத்தது என்று யாருக்கும் தெரியாது


(அனேகமாக, இந்தக் கட்டுரையை படித்து விட்டு, மூன்றாம் பிறை கிளைமாக்ஸ் காட்சியை பார்த்து, கண்ணீர் விட்ட படியே, நெல்சன் மண்டேலா கொடுத்த படம் அது, என்று நாயகன் நற்பணி மன்ற நாயகர்கள் பதிலுரை போட்டுத் தாக்கலாம் - மண்டேலாவின் ஆத்மா, ‘பூனைக்குட்டி’யை படிக்காதிருக்க பிரார்த்திப்போம்!).

அதிருக்கட்டும். உலக சினிமாக்களை உருவி வந்து உலாவ விடுகிற ‘நம்மவரின்’ வேலையை ‘கள்ளக்காப்பி’ என்றெல்லாம் கட்டம் கட்டுகிற பறக்கும்படையினர் கடும் கண்டனத்துக்கு உரியவர்களே. அவர் என்ன பிளஸ் 2 ஸ்டூடண்ட்டா... கள்ளக்காப்பி அடிக்க? படத்தைப் பார்த்திருக்கலாம். பிடித்திருக்கலாம். ஒரு டிவிடி கேட்டு வாங்கி வந்து, நம்மூருக்கு ஏற்றபடியாக ஒரு அரிதாரம் பூசி,

(மர்லன் பிராண்டோவின் தி காட்பாதர் முகமூடியை நாயகன் படத்தில் போட்டுக் கொண்டது போல!) ஒரு படம் எடுத்து வெளியிட்டால்... பார்த்து விட்டு போக வேண்டியதுதானே?  கதை, திரைக்கதை, வசனம் என்று போட்டுக் கொள்வது ஒரு குற்றமா?
 டீக்கடையில் ‘கட்டிங்’ போட்டு குடிக்கும் தமிழ் ரசிகனுக்கு உலக சினிமா ஞானத்தை, பிறகு யார்தான் கொண்டு வந்து சேர்ப்பதாம்???

இப்போது கூட பாருங்கள்! உத்தம வில்லன் என்று ஒரு காவியத்தை ‘நம்மவர்’ ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்.
படவேலைகள் துவங்கி விட்டதை ரசிக கண்மணிகள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக, ஒரு ‘ஃபர்ஸ்ட் லுக்’ சில தினங்களுக்கு முன் வெளியானது. வெளியானதும் உலக நாயகனை பிளந்து கட்டி விட்டார்கள் இணைய நாயகர்கள். பிரெஞ்ச் புகைப்பட ஜாம்பவான் எரிக் லஃபோர்க்,
எரிக் லஃபோர்க்
தனது கேரளச் சுற்றுப்பயணத்தின் போது மலபார் பகுதியில் எடுத்த (கதகளி போன்ற தெய்யம் நாட்டுப்புற கலைக்காக முகத்தில் அரிதாரம் பூசிய கலைஞரின்) படத்தை ‘சுட்டு விட்டார்’ என்கிறார்கள்.

மீடியாக்கள், முகநூல், ட்விட்டர், வலைப்பூக்கள், இணையங்களில் ஆளாளுக்கு போட்டுத் தாக்க... டென்ஷனாகி விட்டார் ‘நம்மவர்’. கோபம் வராதா பிறகு? இவ்வளவு காலம் இதைத்தானே செய்து கொண்டிருந்தார்? அப்போதெல்லாம் அவரை தட்டிக் கொடுத்து பாராட்டி விட்டு, இப்போது திடீரென ‘சுட்டு விட்டார்... சுட்டு விட்டார்...’ என்று கட்டம் கட்டினால்... கோபம் வராமல், குதூகலமா வரும்?

‘‘காதல் ஜோடி ஒன்று மார்பில் தலை சாய்த்த படி போஸ் கொடுத்தால், அதை ஏக் துஜே கேலியே படத்தின் காப்பி என்று சொல்ல முடியுமா?’’ என்று படுகோபமாக தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார்.



ஒரு முறைக்கு பல முறை படத்தைப் பாருங்கள்....

இது, பிரெஞ்ச் புகைப்படக் கலைஞர் எரிக் லஃபோர்க் எடுத்த படம்.



இது, ‘நம்மவர்’ படம்.



ரெண்டும், ஒண்ணு போலவா இருக்கிறது? மனச்சாட்சியை தொட்டுச் சொல்லுங்கள். அது வேற, இது வேற இல்லையா?


இதைப் போயி ‘கள்ளக்காப்பி’ என்று கரடி விடலாமா? தூற்றுவார், தூற்றட்டும்... உருவல் வேலையை விட்டுறாதீங்க உலக நாயகன் சார்!

- பூனைக்குட்டி -

3 கருத்துகள்:

  1. தமிழ் சினிமாவில் பட்டிக்காடா பட்டணமா படத்தை வைத்து சிவாஜியே பல படங்கள் காப்பி செய்துள்ளார். எம்.ஜி.ஆர் இதை பெரிய இடத்துப் பெண்ணாக எடுத்தார். கமல்ஹாசனின் மசாலா சித்திரமான சகலாகலா வல்லவன் எடுத்தார். இது போல இன்றும் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். கதைக்களத்தினைத் திருடிய காலம் போய் போஸ்டரையும் விட்டு வைக்காத கலிகாலம் இக்காலம். உலகநாயகன் உருவி இருப்பாரா என்று கேட்கலாம். தமிழ் சினிமாவில் முன் முயற்சிகள் பல எடுத்தவர் கமல்ஹாசன். அவருடைய தயாரிப்பில் வெளியான பல படங்கள் தழுவல்களும், உருவல்களும் இருந்துள்ளது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் கமல்ஹாசன் எங்கிருந்து எந்த படத்தை உருவினார் என்பதை நண்பர் ஜெயதேவ்தாஸ், “ சினிமா கதைகள்- எங்கேயிருந்து உருவப் பட்டன? -லிஸ்ட்“ என தனது பிளாக்கில் எழுதியுள்ளார். வாய்ப்பிருந்தால் படியுங்கள். ஆகவே, போஸ்டர் களவாடிய சின்ன விஷயத்தை விட்டு விடலாம்.
    - ப.கவிதா குமார்,மதுரை

    பதிலளிநீக்கு
  2. "தமிழ் சினிமாவில் பட்டிக்காடா பட்டணமா படத்தை வைத்து சிவாஜியே பல படங்கள் காப்பி செய்துள்ளார். எம்.ஜி.ஆர் இதை பெரிய இடத்துப் பெண்ணாக எடுத்தார்"

    பட்டிக்காடா பட்டணமா படம் வெளிவந்த ஆண்டு 1972
    பெரிய இடத்துப் பெண் படம் வெளிவந்த ஆண்டு 1963

    அப்போ காப்பி அடிச்சது யாரு? சிவாஜியா, எம்ஜியாரா?

    பதிலளிநீக்கு
  3. அன்றைய காலகட்டம் வேறு... இன்றைய காலகட்டம் வேறு... உலக சினிமாக்கள் உள்ளுங்கைக்குள் ஓடிக் கொண்டிருக்கின்றன என்பதை முருகநோலன், அட்லி, லோகேஷ் கனகராஜ் உட்பட கமலும் உணர வேண்டும். இல்லை நெட்டிசன்கள் மீம்ஸ்களால் உணர வைப்பார்கள்...

    (லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்க உள்ள 'விக்ரம்' படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே இந்த டீசர் ஒரு காப்பி என சமூக வலைத்தளங்களில் சர்ச்சை வெளியானது.

    நெட்பிளிக்ஸ் தளத்தில் உள்ள 'நார்கோஸ் மெக்சிகோ' வெப் தொடர் சீசன் 2 டீசரைக் கொஞ்சம் மாற்றி 'விக்ரம்' பட டைட்டில் டீசராக வெளியிட்டுவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    'நார்கோஸ் மெக்சிகோ சீசன் 2' டீசரின் அரங்க அமைப்பு, நீளமான உணவருந்தும் மேஜை, அடியில் ஆயுதங்கள், லைட்டிங் என அனைத்தும் 'விக்ரம்' டீசரில் அப்படியே இடம் பெற்றுள்ளது. இந்த வருட ஜனவரி மாதம்தான் இந்த டீசர் வெளியானது, நவம்பர் மாதத்தில் நம்மவர் டீசராக வெளியிடுகிறார்...

    ஹாலிவுட் படங்களைக் காப்பியடித்து அப்படியே தமிழில் கொடுப்பவர் என்ற குற்றச்சாட்டு கமல்ஹாசன் மீதும் பல வருடங்களாகவே உள்ளது. இப்போது அவருடன் இணைந்துள்ள லோகேஷும் இப்படி ஒரு காப்பி டீசருடன் வருவதில் ஆச்சரியமில்லை தான்.

    ஏற்கெனவே, தான் இயக்கிய 'கைதி' படத்தில் காப்பி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர் தான் லோகேஷ். 'மாஸ்டர்' படத்தைக் கூட அவர் எங்கிருந்தோ சுட்டிருக்கலாம் என்றே சொல்லி வருகிறார்கள். அதற்கு 'மாஸ்டர்' போஸ்டர்களையும் உதாரணமாகச் சொன்னார்கள்.
    )

    நம்மவர்கள் திருந்த வேண்டும்... இல்லை நெட்டிசன்கள் மீம்ஸ்களால் திருத்துவார்கள்.

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...