வியாழன், 13 மார்ச், 2014

பேசும் படம் 1


படங்களுக்கு, வார்த்தைகளைக் காட்டிலும் வல்லமை அதிகம். பல நூறு வார்த்தைகள் விளக்க முடியாத ஒரு உணர்வை, ஒரே ஒரு படம் மக்கள் மனதில் சுலபமாக கொண்டு சேர்த்து விடும். பூனைக்குட்டியின், ‘பேசும் படம்’ பகுதியில் உலகத்தரம் வாய்ந்த (!?) உள்ளூர் படங்களின் வித்தியாச அணிவகுப்பு இனி களைகட்டும்!

                                                           இனிக்குமா; கசக்குமா? 
 குப்பைத்தொட்டி - முயல் பொம்மையின் மூக்குப் பகுதி செக்கச்சிவந்து, அழகான ஆப்பிள் பழம் போல சுண்டி இழுத்திருக்கவேண்டும். சுட்டிக் குரங்குக்கு தெரியவில்லை. நாக்கில் எச்சில் ஊற... முரட்டுக் கடி, கடிக்கிறது! பல் பத்திரம்!! இடம்: சுருளி அருவி (தேனி மாவட்டம்)


                                                                கரடி தேவலை!அத்தனை வாகனங்களும் நடு ரோட்டில் வந்து கொண்டிருக்க... பாருங்கள், கரடி ஒன்றுதான் உருப்படியாக, சாலை விதிகளை அனுசரித்து, ‘லெப்ட்’ எடுத்து போகிறது. தேனி அருகே வீரபாண்டி கோயில் திருவிழா நேரத்தில் ‘இப்படி’ மாறுவேடம் போட்டு வரும் பக்தர்களால் அந்த ஏரியாவே சும்மா... அதிருமாம்!


                                இப்படி இறக்குவாங்கனு தெரியாம போச்சே!   பழநி மலைக்கு ரோப் காரில் போவது இனிமையான அனுபவம். காரில் இருந்து பார்க்கையில், ஆகாயத்தில் இருந்து பூமியைப் பார்க்கிற ஒரு ஜிலிர் உணர்வு தட்டும். கட்டம், கட்டமாய் நிலப்பரப்பை கட்டம் கட்டி வைத்திருப்பதையும். மதில் சுவராய் நிற்கிற மலைத்தொடரையும் பார்ப்பது அலாதியான ஆனந்தம்தான். நடுவழியில், வண்டி பிரேக் டவுன் ஆகாத வரை! 2013, ஜூன் 4ம் தேதி விறுவிறுவென மலையேறிக் கொண்டிருந்த ரோப் கார், இயந்திரக் கோளாறு காரணமாக அந்தரத்தில் ஸ்டிரைக் அடிக்க... உள்ளே இருந்தவர்களுக்கு அட்டாக் வராத குறை. என்ன செய்தும் நகர மறுத்து விட்டது. என்ன செய்வது? உள்ளே இருந்தவர்களை ‘டோலி’ கட்டி பத்திரமாக இறக்கினார்கள்!


                                       வழியை விட்டு ஒதுக்கி நிறுத்துப்பா!
சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி வழியாக மைசூர் செல்கிற மலைச்சாலை இது. போகிற வழியில், குறுக்கே பூனை போனாலே யோசிப்பவர்களுக்கு இது சிக்கலான பாதை. குறுக்கே யானையே போகும். அதுவும், அடிக்கடி. ரெகுலராக போய், வந்து கொண்டிருக்கிற ‘யானை வழித்தடத்தில்’ இப்படி லாரியை நிறுத்தினால்... கோபம் வருமா; இல்லையா? செல்லமாக ஒரு உதை விடுகிறது கொம்பு முளைக்காத குட்டியானை!
                                                                                       - திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

2 கருத்துகள்:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...